எதிர்வரும் சில மாதங்களில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது என்ற விடயம் தொடர்ந்தும் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்கள் போன்றோர் பொதுவேட்பாளர் ஒருவர் அவசியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பலரையும் இதனை நோக்கி ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர். இருந்தபோதும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாடு ஏற்படவில்லையென்றே கூற வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பது இன்று நேற்று எழுந்த கோரிக்கையல்ல. பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கை இதுவாகும். இதற்கு முன்னர் குமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தனிப்பட்ட ரீதியில் தேர்தலில் களமிறங்கியிருந்தனர்.
அந்தக் காலகட்டங்களில் அவர்கள் அனைத்து தமிழ்த் தரப்புக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு களமிறங்கியிருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிட்டு வெல்லமுடியுமா என்றால் அதற்கான பதில் இல்லையென்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்.
இருந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் அபிலாஷைகளை உரத்துக் கூறுவதற்கும், தென்னிலங்கையில் தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியைப் பரிசோதிப்பதற்குமான ஒரு முயற்சியாகவும் இது அமையும் என்பது இதனை ஆதரிக்கும் தரப்பினரின் நிலைப்பாடாக உள்ளது.
இது விடயத்தில் தமிழ் மக்கள் எந்தளவுக்கு உறுதியாக இருக்கின்றார்கள் என்பதற்கு அப்பால், ஒருசில அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் களத்தில் இறங்கி இதற்காக வேலை செய்கின்றதைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.
இருந்தாலும், தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் பொதுவான நிலைப்பாடொன்றை இதுவரை அவர்களால் ஏற்படுத்த முடியாது போயிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றுகூடிய இரு தமிழ் அரசியல் கட்சிகளின் உயர்மட்டக் கூட்டத்தில் பொதுவேட்பாளர் ஒருவரைப் போட்டியிடச் செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் அண்மையில் கூடிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அல்லது புளொட் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து ஏற்றுக்கொண்டதுடன், அதனை முன்கொண்டு செல்வதற்கான முழுமையான ஆதரவையும் வெளிப்படுத்தியிருப்பதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், சமூக வாழ்வின் எதிர்பார்ப்புகளையும், நாளாந்தம் முகம்கொடுத்துவரும் நெருக்கடிகளையும், தென்னிலங்கை அரசியல் சமூகத்தின் தொடர்ச்சியான ஏமாற்றுத்தனங்களையும் உறுதியாக வெளிப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தரப்பினர் தெரிவித்தனர்.
இந்தத் தீர்மானமானது ஒருசில அரசியல் கட்சிகளினதும் ஒருசில சமூக செயற்பாட்டுக் குழுக்களினதும் தீர்மானமாக அன்றி, தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்துத் தரப்பினரதும் ஏகோபித்த கோரிக்கையாக முன்னெடுக்கப்படுவது அவசியம். இதனை தமது கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டதுடன், அதனை முன்கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ரெலோ கட்சியின் உயர்மட்டத்திலும் இந்த விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளது. பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என்பதில் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பொது தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தை இம்முறை முதன் முதலில் வலியுறுத்தியது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியாகும். அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறிய கருத்தே தற்பொழுது இந்தளவுக்குச் சென்றுள்ளது. அவரைத் தொடர்ந்து இதனை வெகுவாக ஆதரிக்கும் மற்றுமொரு தமிழ் அரசியல் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் காணப்படுகின்றார்.
பல சந்தர்ப்பங்களில் இவர் இக்கருத்தினை வலியுறுத்தியிருந்தார். அண்மையில் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரை நேரில் சந்தித்தபோதும் இது பற்றி வினவப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது கடினமானது என்ற தொனியில் ஜனாதிபதி கூறிச் சென்றதாக விக்னேஸ்வரன் எம்.பி ஊடகங்களுக்குக் கூறியிருந்தார். எனவே, பொதுவேட்பாளர் என்ற கருத்தாடல் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எனினும், ஆரம்பம் முதல் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை நிராகரிக்கும் நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பது அவர்களுடைய நிலைப்பாடாக இருந்து வருகின்றது.
இது பற்றி அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிடுகையில், வாக்குச் சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிக்கும் மனநிலையை உருவாக்கவே இந்த பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேறியுள்ளது. இன்று கூட்டமைப்பினர் சொல்லும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. இவ்வாறு மக்கள் வெறுப்படைந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறியே விக்னேஸ்வரன் போன்றோர் செயற்படுகின்றனர்.
அவ்வாறு பொதுவேட்பாளர் யாரும் நிறுத்தபட்டால் கூட அவர் 72 மணித்தியாலத்திற்கு முதல் சொல்லக் கூடும் “எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களில் ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் அவருக்கு வாக்களியுங்கள்” எனக் கூறி விலக கூடும்.
இல்லையெனில் இரண்டாவது விருப்பு வாக்கை சிங்கள வேட்பாளருக்கு வழங்கக் கூடும். இதன் காரணமாக எதிர்நிலையில் இருக்கூடிய மக்களின் மனநிலையை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லவே இந்த நாடகம் ஆடப்படுகின்றது என அவர் கூறியிருந்தார்.
மறுபக்கத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியானது பொதுவேட்பாளர் விடயத்தில் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதனையும் விடுக்காதபோதும், அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மத்தியில் இரட்டை நிலைப்பாடு இருப்பதைக் காணமுடிகின்றது. சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் பொதுவேட்பாளர் விடயத்தை ஆதரிப்பதாகத் தெரியவில்லை.
அண்மையில் தன்னைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடத்திலும் இதனைப் பிரஸ்தாபித்திருப்பதாக ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன. தமிழ் மக்களின் வரலாற்றில் பொதுவேட்பாளர் போன்ற விடயங்களை எப்போதுமே முன்னிறுத்தியது கிடையாது எனவும், அவ்விதமான நிலையில் தற்போது பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பொருத்தமற்ற அணுகுமுறையாகவே இருக்கும் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் செய்திகளைப் பிரசுரித்துள்ளன.
அக்கட்சியின் முக்கியஸ்தரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பொதுவேட்பாளர் விடயத்தை ஆதரிக்கவில்லை. இது தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டி, பெரும்பான்மை வேட்பாளர் ஒருவர் அதாவது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருவர் வெல்வதற்கு வழிவகுத்துவிடும் என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருந்தார்.
இருந்தாலும், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பொதுவேட்பாளர் என்ற கோட்பாட்டுடன் இணங்கிப் போகவேண்டும் என்ற தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருக்கின்றார். அவர் மாத்திரமன்றி, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி தவராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் உள்ளிட்டவர்களும் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
இருந்தபோதும், அனைத்துத் தமிழ் தரப்புக்களையும் ஒன்றிணைப்பதற்கு சிவில் சமூக அமைப்புக்கள் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. புலம்பெயர்ந்துவாழ் தரப்பினரும் இதற்கு ஆதரவு வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறு இருந்தாலும், தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் எந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கப் போகின்றது என்ற கேள்வி வலுவாகக் காணப்படுகின்றது. களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளரை வெற்றிபெறச் செய்வது சாத்தியமில்லையென்பது இதற்காகப் பாடுபடும் தரப்பினருக்கு நன்கு தெரிந்த விடயம். இருந்தாலும், தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை சோதித்துப் பார்ப்பதற்கான சந்தர்ப்பமாக அல்லது தென்னிலங்கை வேட்பாளர்கள் மத்தியில் நம்பிக்கை இல்லையென்ற செய்தியை சர்வதேசத்துக்குச் சொல்ல முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
இது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாக இருக்கப் போகின்றது என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். கடந்த காலங்களைவிட இம்முறை தேர்தல் களம் மிகவும் வித்தியாசமாக இருக்கப் போகின்றது என்பது உறுதி. நாட்டுப் பற்று மற்றும் இனவாதம் என்பவற்றை முன்வைத்தே 62 இலட்சம் பேரின் வாக்குகளினால் முன்னாள் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதாகவும், அன்றைய அந்த ஆட்சியாளர்கள் மக்கள் போராட்டத்தினால் அகற்றப்பட்டதாகவும் சிறுபான்மை மக்கள் தரப்பில் கசப்புணர்வு இன்றும் நிலவுகின்றது.
அதன் பின்னர், பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த சூழ்நிலையில் எதிர்கொள்ளும் தேர்தல் இதுவென்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்காலம் மற்றும் ஸ்திரமான அரசியல் சூழல் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தியே மக்கள் இம்முறை தேர்தலை அணுகுவார்கள்.
இவ்வாறான பின்னணியில் தென்னிலங்கைத் தலைவர்களுக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கு தமிழ் மக்களின் வாக்கு எந்தளவுக்கு சாதகமாக இருக்கும் என்பது சற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்.
குறிப்பாக, அரசியல் நிலைப்பாடு தொடர்பில் பெரும்பான்மை மக்களின் விருப்புக்கு எதிராக தமிழ் மக்கள் தனித்து நின்று எதையாவது சாதிக்க முடியுமா என்பது இங்கு காணப்படும் மற்றுமொரு கேள்வியாகும்.
அதேநேரம், தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் ஒருவர் இனவாதத்தைக் கையில் எடுக்கும் பட்சத்தில் தமிழர்கள் தனியாக நிற்பது அவருக்கு மிகச் சாதகமாக அமைந்துவிடும். இது தென்பகுதி மக்கள் மத்தியில் பாரிய மாற்றத்துக்கு வித்திட்டுவிடலாம். இதுபற்றிய கசப்பான அனுபவங்கள் பல கடந்தகாலங்களில் தமிழர்களுக்கு உண்டு என்பதால் இதற்கான சாத்தியத்தை முற்றுமுழுதாக மறுத்துவிட முடியாது.
எனவே, தென்னிலங்கையில் களமிறங்கும் வேட்பாளர்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரக்கூடிய ஒருவருடன் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி அதன் அடிப்படையில் தீர்மானமொன்றுக்கு வரமுடியும்.
இருந்தாலும், கடந்த காலங்களில் அவ்வாறான இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் இவை நடைமுறையில் எந்தளவுக்குச் சாத்தியமாகின என்பதும் கேள்விக்குறியே. எனவே, தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை தமிழ் அரசியல் தரப்புக்கள் சரியான வகையில் கையாள்வதே எதிர்காலத்தில் தமிழ் சமூகத்துக்கு நன்மை வகிக்கும் ஒன்றாக அமையும்.