திரு. கனக செந்திநாதன் சிறுகதை, நாவல், கவிஅரங்கு, கட்டுரை, கவிதை, மேடை நாடகம், வானொலி நாடகம், விமர்சனம், வாழ்க்கை வரலாறு, சிறுவர்பாடல் எனப் பல்துறைகளில் இயங்கியவர். இவர் எழுதிய ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ என்ற நூல் 1946ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலே ஈழத்து இலக்கியம் பற்றிப் பேசிய முதலாவது வரலாற்று நூலாகும்.
இந்நூலுக்கு முன்னுரை எழுதிய ஈழகேசரி பத்திரிகை ஆசிரியர் இராஜ அரியாத்தினம் தனது முன்னுரையில்,
“கனக செந்திநாதன் ஆறுமுக நாவலர் தொடக்கம் இன்றைய இளம் கவிஞர்கள்வரை ஆராய்ந்து பழமையையும் புதுமையையும் நமக்கு இந்நூலில் காட்டியுள்ளார். தமிழ்ச்சுடர் மணிகளையும், ஈழத்து ஒளி விளக்குகளையும், பேனா மன்னர்களையும், இளம் எழுத்தாளர்களையும் காலத்தை வைத்துப் பிரித்து ஆராய்ந்திருப்பது மிக நன்று. ஒவ்வொரு பத்தாண்டு காலத்தைப் பற்றி முகவுரையாக விடயங்களையும் சரித்திர நிகழ்ச்சிகளின் எழுச்சிகள் ஆகியவற்றையும் கூறிவிட்டு அப்பத்தாண்டு காலத்தில் எழுதிய எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் அறிமுகம் செய்துள்ளார். பின் முடிவுரையாக பத்தாண்டு காலத்தில் இலக்கிய உலகம் என்ன சாதித்தது என்பதைத் தொகுத்துக் கூறியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனக செந்திநாதனின் இயற்பெயர் திருச்செவ்வேழ். குரும்பசிட்டி கனகசபை – பொன்னம்மா தம்பதிக்கு 05-.11-.1916இல் மகனாகப் பிறந்த இவர், குரும்பசிட்டி மகாதேவ வித்தியாலயம் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலை ஆகியவற்றில் கல்வி கற்றவர்.
1937- 1938 காலப்பகுதியில் திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலையில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் மாணவனாகப் படித்து வெளியேறி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
கனக செந்திநாதனின் வீட்டின் முன்பகுதியில் ஒரு தென்னோலைக் கொட்டில் அமைந்திருந்தது. அதுவே அவரது நூல்நிலையம். ஏராளமான நூல்கள் அவரது சேகரிப்பில் இருந்தன. அந்த நூல்நிலையத்தை மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு அவர் அனுமதிப்பார். இதன் காரணமாக இலக்கிய கர்த்தாக்கள் கூடும் இடமாகவும் அவரது இல்லம் விளங்கியது.
ஈழத்து நவீன இலக்கியக் கணக்கெடுப்பை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே மேற்கொண்டவர் கனக செந்திநாதன். எந்தவொரு ஈழத்துப் படைப்பும் அது பத்திரிகையிலோ, சஞ்சிகையிலோ வெளிவந்தாலும் அதனைத் தேடிப்பெற்று அந்தப் படைப்பினை கவனமாக வெட்டியெடுத்து சீ.ஆர். கொப்பிகளில் ஒட்டி வைத்துக்கொள்வார்.
பிற்பட்ட காலத்தில் ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற பயன்மிக்க ஆய்வுநூலை எழுதுவதற்கு அவர் சேகரித்து வைத்திருந்த ஒட்டுக்கொப்பிகள் உதவியிருக்கின்றன.
அந்தக் காலத்தில் ‘ஈழத்துப் பேனாமன்னர்கள்’ என்ற எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத் தொடரை ஈழகேசரியில், ‘கரவைக்கவி கந்தப்பனார்’ என்ற புனைபெயரில் எழுதினார். அந்தத் தொடரில் நாற்பது எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அவரது இத்தகைய இலக்கியச் செயற்பாடுகள் காரணமாக அவர் ‘நடமாடும் நூல்நிலையம்’ என்று இலக்கிய உலகில் பேசப்பட்டார்.
அவரது கிராமமாகிய குரும்பசிட்டியில் சன்மார்க்கசபை என்ற இலக்கிய அமைப்பு இயங்கி வந்தது. அங்கு அடிக்கடி இலக்கிய நிகழ்வுகள் இடம்பெறும். அந்நிகழ்வுகளில் அவரும், ஒரு சிறப்புப் பேச்சாளராக இருப்பார். அவரது சொற்பொழிவுகள் கருத்தாழம் மிக்கதாகவும் சுவாரஸ்யமானதாகவும் அமைந்திருக்கும். தனது பேச்சின் நடுவே அனேகமான சந்தர்ப்பங்களில் தான் வாசித்த சிறுகதையொன்றையும் விமர்சனப் பாங்கில் விபரித்து அக்கதையை எழுதிய எழுத்தாளர் பற்றிய குறிப்பையும் கூறுவார். கேட்போர் இலக்கியச் சுவையில் திளைப்பர்.
எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை, ஞானம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியொன்றில் கனக செந்தி நாதனின் நூல் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“ஈழத்து இலக்கிய முயற்சிகளின் – தற்கால இலக்கியப் படைப்பு முயற்சிகளின் உத்தியோகபூர்வமான முதலாவது உண்மையான வரலாற்று ஆவணம் ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ என்னும் வரலாற்று நூல். கனக செந்திநாதனை முதலில் நான் சந்தித்தபொழுது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு என்னவென்றால் அவர் ஒரு யுகசங்கமத்தின் தலைவனாகத் திகழ்ந்தார். பழைய பண்டித வர்க்கத்தினரதும் படித்த இலக்கியச் சுவைஞர்களினதும் பரம்பரையாக வந்து புதிய இலக்கிய மாற்றங்களை வரவேற்கக் கூடிய ஒரு படைப்பாளியாக கனக செந்திநாதன் வாழ்ந்துகொண்டிருந்தார்.
அதுமட்டுமன்றி தமிழ் ஆசிரியரான அவர், மிகச்சிறந்த படைப்புகள் அனைத்தையும் ஒட்டுப்புத்தகங்களாகத் தயாரித்து அவற்றையே அவர் ஒரு நூல் நிலையம் போல வைத்திருந்து இவற்றைச் சாதித்தார். இந்தச் சாதனையை இலங்கை இலக்கிய வரலாற்றில் வேறு யாருமே சாதித்ததில்லை. இந்தச் சாதனையை அவர் செய்வதற்கு தூண்டுகோலாக இருந்தது இரண்டு விடயங்கள் என நான் நம்புகிறேன். ஒன்று பண்டிதமணியின் பரம்பரையில் அவர் ஒரு கல்விமானாகவும் ஆசிரியராகவும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டது. இரண்டாவதாக யாழ்ப்பாண மண்ணில் பண்டைய தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை மட்டுமன்றிப் புதிய அரசியல் மாற்றங்களையும் பிரசித்தப்படுத்துவதற்காகத் தொடக்கப்பட்ட, ஈழகேசரி பத்திரிகையை நடத்திய பொன்னையா பிறந்த குரும்பசிட்டியிலே வாழ்ந்தது. இவற்றின் காரணமாகத்தான் இந்தத் தற்கால இலக்கிய வரலாற்றை எழுதக்கூடிய ஒரு மாமுனி கனக செந்திநாதன் என்பதை அறிந்து, கைலாசபதி ஊக்குவித்து ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற தொடர் தினகரனில் வந்தது” (ஞானம் 2005 டிசம்பர் இதழ்- 67. பக் 38)
1964இல் கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கம் கனக செந்திநாதனுக்கு ‘இரசிகமணி’ என்ற பட்டத்தை வழங்கியது. அவரது மிகநெருங்கிய நண்பராக விளங்கிய எஸ்.பொ. வே இவரது சிறுகதைத் தொகுதியான ‘வெண்சங்கு’ சிறுகதைத் தொகுதிக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார்.
பேராசிரியர் செ.யோகராசா கனகசெந்திநாதன் பற்றிக் குறிப்பிடுகையில்,
“ஈழத்து இரசனைமுறை விமர்சன வளர்ச்சியிலே திருப்பத்தை ஏற்படுத்தியவர் கனக செந்திநாதன். இத்தகைய இரசனைமுறை முன்னோடிகளில் முக்கியமானவர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை.
அவரது அம்மரபிலே பழந்தமிழ் இலக்கியங்கள் முதன்மைபெற்றன. மாறாக, அவரது மாணவரான கனக செந்திநாதன் அவ்வழியிலே நவீன இலக்கியங்களை அணுக முற்பட்டார்.
முதன்முதலாக தனிப்பட்ட ஆளுமைகளை அத்தகு விமர்சன நோக்கில் அணுகி தனி நூல்களாக வெளிப்படுத்தியவரும் கனக செந்திநாதனே. சோமசுந்தரப்புலவர், அல்வாயூர் மு.செல்லையா, பண்டிதமணி பற்றிய நூல்கள் அத்தகையனவேயாகும்.
இளம் எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் இனங்கண்டு கவனத்திற்குரிய விமர்சனத் தொடர் குறிப்புகளை முதன்முதலில் எழுதியவரும் அவரே. இவ்வழி இத்தகைய தமிழ் விமர்சனப் பாரம்பரிய வழிநின்று நவீன இலக்கியங்களை அணுகமுற்பட்ட ஈழத்து முன்னோடியாக கனக செந்திநாதன் காணப்படுகிறார்
நமது இலக்கிய இரசனையும் அதன்மதிப்பீடும் நமது மண்ணிலேயும் தமிழ் நெஞ்சங்களிலேயும் வேரூன்றிய மரபிலே நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று ஆணித்தரமாகக்குறிப்பிட்டு (ஈழத்து இலக்கிய வளர்ச்சி பக்:123) அதனை இனங்காண முற்பட்டவர் கனகசெந்திநாதன்.
இலக்கிய விமர்சனம் என்பது வேறு. இரசனை என்பது வேறு என்ற தெளிவு கனக செந்திநாதனிடம் காணப்பட்டது என்பதும் விதந்துரைக்கப் படவேண்டியதே.” எனக் குறிப்பிட்டுள்ளார் ( ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் இரசிகமணி கனக செந்திநாதன் சிலகுறிப்புகள் – ஞானம் ஜூலை 2018 பக்:9)
இரசிகமணி கனக செந்திநாதன் 25 சிறுகதைகளையும் நான்கு புதினங்களையும் பன்னிரண்டு நாடகங்களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
அவரது ‘ஒரு பிடி சோறு’ என்ற சிறுகதை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பிற்பட்ட காலத்தில் அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மூலம் அவரது கைவிரல்களும் கால்விரல்களும் அகற்றப்பட்டன. ‘
நடமாடும் நூல்நிலையம்’ என அழைக்கப்பட்ட அந்தப் பெருமகன் நடமாடமுடியாத நிலையில் வீட்டில் முடங்கிப்போனார். அவருக்கு எழுத்தாளர் டானியல் ஒரு சக்கர நாற்காலியைச் செய்துகொடுத்தார்.
கனக செந்திநாதன் 16-.11-.1977இல் தனது அறுபத்தோராவது வயதில் அமரரானார்.