வாழ்நாளில் தாம் ஒருபோதும் எதிர்பார்க்காத பயங்கர சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சுவீடன்- சிங்கள கலப்பு குடும்ப உறுப்பினர்களின் அழுகுரல்களினால் இலங்கை மற்றும் வெளிநாட்டு தனவந்தர்கள் வாழ்ந்த ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு வீடமைப்புத் தொகுதியின் வழமையான அமைதி 2005ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி சிதைந்து போனது.
ஸ்வீடன் நாட்டு தந்தைக்கும், இலங்கையைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த இவோன் ஜோன்சன் என்ற 19 வயதுடைய அழகியான யுவதியின் சிதைக்கப்பட்ட தலையுடன் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த சடலத்தைக் கண்டவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ரோயல் பார்க் வீடமைப்புத் தொகுதியில் தனது பெற்றோர் மற்றும் சகோதரியான கரோலின் ஜோன்சனுடன் வசித்து வந்த குறித்த யுவதி, தனது நீண்டகால பாடசாலை நண்பரான ஜூட் சமந்த அந்தோனி ஜயமகவுடன் காதல் தொடர்பில் இருந்ததோடு, தனது பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றிருந்தார்.
அந்தக் காலத்தினுள் இவோனின் சகோதரியான கரோலின் ஜோன்சனுடன் ஜூட் சமந்த காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்ததோடு இது தொடர்பில் இவோன் ஜோன்சன் எதனையும் அறிந்திருக்கவில்லை.
கரோலின் மற்றும் ஜூட் சமந்த இருவரும் 2005 ஜூன் 30ஆம் திகதி இரவு விடுதிக்குச் செல்ல ஆயத்தமான போது இவோனும் அவர்களோடு இணைந்து கொண்டுள்ளார்.
இதன் போது தனது சகோதரியுடன் ஜூட்டுக்கு இருந்த உறவு தொடர்பில் இவோனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பில் இவோன் ஜூட்டை இரவு விடுதியில் வைத்து விசாரித்துள்ளார்.
தனக்கு தலை வலிப்பதாகக் கூறியதால் கரோலின் ஜோன்சனுடன் ஜூட் சமந்த மீண்டும் வீட்டுக்குத் திரும்பியிருந்ததோடு, கரோலினை வீட்டில் விட்டுவிட்டு வெளியேறிச் சென்ற சந்தர்ப்பத்தில் 24ஆவது மாடியின் லிப்ட் அருகில் இவோன் ஜோன்சனைச் சந்தித்துள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதோடு, வாக்குவாதப்பட்டவாறே அவர்கள் இருவரும் மாடிப்படிகளின் ஊடாக சில மாடிகள் கீழே இறங்கி வந்திருந்தனர்.
இதன் போது கடும் கோபத்திற்குள்ளான ஜூட் சமந்த இவோனைத் தாக்கியுள்ளதோடு, அவளது தலையை பல தடவைகள் சுவற்றில் அடித்து சிதைத்ததோடு நின்றுவிடாமல் அவளது தலைமுடியைப் பிடித்து இழுத்தவாறு 19ஆவது மாடிக்குச் சென்றுள்ளான். பின்னர் அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் வகையைச் சேர்ந்த காற்சட்டையைக் கொண்டு அவளது கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளான்.
மறுநாள் இடம்பெற்ற வகுப்பில் கலந்து கொள்வதற்காக கரோலின் ஜோன்சனும் அவரது தாயும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்த போதிலும், அது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.
எனினும் பின்னர் தலை சிதைக்கப்பட்ட இவோனின் சடலத்தை அவர்கள் கண்டார்கள். சிறப்பு பிரமுகர்கள் வாழும் ரோயல் பார்க் வீடமைப்புத் தொகுதியினுள் நுழைவது முடியாததும், சிரமமானதுமான காரியமாக இருந்தது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தலைமையில் வெலிக்கடை பொலிஸார் இவோனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில், இந்தக் கொலை தொடர்பில் எதுவுமே தெரியாததைப் போன்று நடந்து கொண்ட ஜூட் சமந்த, அவ்விடத்திற்கு வந்து இவோன் ஜோன்சனின் உடலுக்கு இறுதி அஞ்சலியும் செலுத்தினான்.
எவ்வாறாயினும், சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சுவரில் இருந்த இரத்தக்கறை படிந்த கைரேகைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, அந்த கைரேகைகள் ஜூட் சமந்தவுடையது என்பதை கைரேகை திணைக்களம் உறுதி செய்தது. கைரேகையில் இருந்த இரத்தம் கொலை செய்யப்பட்ட இவோன் ஜோன்சனுடையது என டி. என். ஏ. பரிசோதனையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
படிக்கட்டுக்கள் மற்றும் சுவற்றில் அடிபட்டதால் இவோன் ஜோன்சனின் தலையில் 64 சிதைவுகள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட தனது சகோதரிக்கு அதிகபட்ச நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டத்தை அணுகிய கரோலின் ஜோன்சன், தனக்கு தெரிந்த அனைத்து உண்மைகளையும் விசாரணை அதிகாரிகளிடம் கூறினார்.
இதனடிப்படையில் ஜூட் சமந்த அந்தோனி ஜயமக அவ்வருடமே கைது செய்யப்பட்டான்.
அவனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு சட்ட மாஅதிபர் நடவடிக்கை மேற்கொண்டதோடு, 2005 ஜூலை முதலாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் இவோன் ஜோன்சன் என்ற யுவதியைக் கொலை செய்தமை அவனுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.
இந்த வழக்கு விசாரணை 55 நாட்களாக மேல் நீதிமன்ற நீதிபதி ஐ. எம். அபேரத்ன முன்னிலையில் இடம்பெற்றதோடு, அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த ஜயந்த ஜயசூரியவினால் முறைப்பாட்டுத் தரப்பில் சாட்சிகள் முன்வைக்கப்பட்டன.
கொலை செய்யப்பட்ட இவோன் ஜோன்சனின் சகோதரியான கரோலின் ஜோன்சன் இந்த வழக்கு விசாரணைகளின் பிரதான சாட்சியாளராக இருந்ததோடு, அவர்களின் மேற்கத்திய வாழ்க்கை முறை மற்றும் இரவு விடுதிகளில் நேரத்தை கழிக்கும் முறைகள், அவர்களுக்கிடையிலான பாலியில் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் சாட்சியம் அளித்தார்.
இதன்போது, முறைப்பாட்டுத் தரப்பினரால் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, பிரதிவாதியான ஜூட் சமந்த மனநோயால் பாதிக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
யுவதியின் முகத்தை சுவரில் பலமுறை தாக்கியுள்ளதோடு, தலைமுடியைப் பிடித்து மாடிப்படிகள் வழியே இழுத்து சென்றதும் சாட்சிகளின் ஊடாகவும், சம்பந்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஊடாகவும் வழக்கு விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவில் மேல் நீதிமன்ற நீதிபதியினால் இது தொடர்பான தீர்ப்பு 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்டதோடு, பிரதிவாதி கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்குப் புறம்பாக 3 இலட்சம் இழப்பீட்டை பாதிக்கப்பட்ட யுவதியின் தரப்பினருக்குச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பினால் அதிருப்தியடைந்த பிரதிவாதியான ஜூட் சமந்த தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நீக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்ததுடன், அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லாததால் தண்டனையை அதிகரிக்குமாறு சட்டமா அதிபரும் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு மேன்முறையீடுகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குழு பிரதிவாதியின் மனுவினை நிராகரித்ததோடு, சட்டமா அதிபரின் மனுவிற்கு அனுமதியினை வழங்கியது.
இந்நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து குற்றவாளிக்கு வழங்கப்பட்டிருந்த பன்னிரெண்டு வருட சிறைத்தண்டனையை மரண தண்டனையாக அதிகரிக்க இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்மானித்தது.
இந்த தீர்ப்பில் அதிருப்தி அடைந்த குற்றவாளியின் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததோடு, அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்க உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமின்றி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் அதிகாரம் உள்ளது என அறிவித்தது.
இதனடிப்படையில் குற்றவாளிக்கு மரண தண்டனையை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது.
பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட ஜூட் சமந்தவுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டு 2016ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி அப்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பின்னர் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ஜூட் சமந்த ஜயமகவுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கி சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். அந்த பிரிவின் கீழ் சிறப்பு பொதுமன்னிப்பைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அன்றைய தினமே ஜூட் சமந்த நாட்டை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியாகின.
ஜூட் சமந்தவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப் போவதாக அதற்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்த முன்னாள் ஜனாதிபதி, அதற்கு காரணமாகக் குறிப்பிட்டிருந்தது, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு அவரது பெற்றோர் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததாகவும், கோபத்திற்குள்ளான நிலையில் இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பில் கொலையாளி வருந்தியதாகவும்தான்.
அரசியலமைப்பின் 34(1) ஆவது பிரிவின் கீழ், இலங்கையின் எந்தவொரு நீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
இந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதற்கு எதிராக, பெண்கள் ஊடக அமைப்பு கூட்டணி என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதன் ஊடாக இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகத் தீர்ப்பை வழங்கி, வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இரத்து செய்யுமாறும் அது கோரியிருந்தது.
இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்றதுடன், மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும் பாதிக்கப்பட்டோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் விடயங்களை முன்வைத்தனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதன்போது விடயங்களை முன்வைத்தார். பல நாட்களாக நீடித்த இந்த மனு மீதான விசாரணையை முடித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, கடந்த 6ஆம் திகதி இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தது.
இந்த மனுவை விசாரித்த எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி குழுவினர் ஏகோபித்த தீர்ப்பாக அமைந்தது, பொதுமன்னிப்பு வழங்குவதில் மைத்திரிபால சிறிசேன நாட்டின் சட்டத்தை மோசமாக மீறியுள்ளார் என்பதேயாகும்.
குறித்த மனு மீதான இறுதித் தீர்மானத்தை ஏகமனதாக வழங்கிய மூன்று நீதிபதிகளும், அதற்கான காரணங்களை விளக்கி, முந்நூற்று ஆறு பக்கங்கள் கொண்ட மூன்று தீர்ப்புகளை தனித்தனியாக வெளியிட்டனர்.
அத்துடன் பத்து இலட்சம் ரூபா இழப்பீட்டை முறைப்பாட்டுத் தரப்பினருக்கும், தலா பத்து இலட்சம் கொண்ட இழப்பீட்டுத் தொகையை கொலை செய்யப்பட்ட யுவதியின் தந்தை மற்றும் சகோதரிக்கும் தனது சொந்த நிதியிலிருந்து வழங்குமாறும் மைத்திரிபால சிரிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள ஜூட் சமந்தவை அவன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து இந்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக நாடு கடத்தல் சட்டம் மற்றும் சர்வதேச மரபுகளின்படி செயல்படவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அவனை இலங்கைக்கு அழைத்து வந்தவுடன் மீண்டும் சிறையில் அடைக்க சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த கொலைச் சம்பவத்தில் குற்றவாளியான தொன் ஜூட் சமந்த அந்தோனி ஜயமகவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதில், மன்னிப்புக்கான நடைமுறை முற்றாக புறக்கணிக்கப்பட்டு செயற்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த பொது மன்னிப்பை வழங்கும் போது உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமையினால் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 34(1) ஆகிய பிரிவுகளை கவனத்திற் கொள்ளாமல் அந்தச் சட்டப் பிரிவுகளை மீறி முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டுள்ளார் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் வழங்கப்படும் ஜனாதிபதி பொது மன்னிப்புக்களும் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட முடியும் என நினைவூட்டியே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வாவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பையும் இதேபோன்ற அடிப்படை உரிமை மீறல் மனு மீது தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது.
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளை முன்னாள் ஜனாதிபதி பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்றம் இதன்போது வலியுறுத்தியிருந்தது. எவரேனும் ஒரு சிறைக் கைதிக்கு பொதுமன்னிப்பு வழங்கும் போது ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரம் மாத்திரமன்றி அதற்குரிய முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றுவது அத்தியாவசியமானது என்பதை நினைவூட்டுவதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
நெல்கா மெதகெதர தமிழில் - எம். எஸ். முஸப்பிர்