Home » கொலன்னாவையைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணிலின் புதிய திட்டம்

கொலன்னாவையைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணிலின் புதிய திட்டம்

முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றவும் பணிப்புரை

by Damith Pushpika
June 9, 2024 6:52 am 0 comment

தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் பின்னர், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை அறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 3ஆம் திகதி காலை கொலன்னாவ, களனி மற்றும் அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டார். அதன் பின்னர், கொலன்னாவ சேதவத்தை வெஹரகொட ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அம்பத்தளை கல்வான புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் எஸ்.சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலயம் ஆகிய பாதுகாப்பு நிலையங்களுக்குச் சென்று மக்களிடம் நலம் விசாரித்தார். இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை ஆராய்ந்து, அவற்றை தொடர்ச்சியாக வழங்குவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆ​ேலாசனை வழங்கினார்.

கொலன்னாவ பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்றிரவு முதலே சமைத்த உணவுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கொலன்னாவ பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி, அந்த மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் ஆகியன இணைந்து நிரந்தர வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குழாய்களைப் பயன்படுத்தி வெள்ள நீரை வேகமான வெளியேற்றி மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார். அத்துடன் இந்தப் பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கொலன்னாவ மற்றும் நாட்டின் ஏனைய பிரதேச மக்களுக்கு உணவுகள் வழங்கல் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது பிரதேசவாசிகள் மற்றும் அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்மை விசேட அம்சமாகும். நீண்ட காலமாக இருந்தே கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் திடீர் காலநிலையினால் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு, கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவினுள் களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணப் பணிகளுக்கு அனுமதி வழங்காதிருத்தல், அனைத்து அனுமதியற்ற நிர்மாணங்களையும் அகற்றுதல், தற்போது மேற்கொள்ளப்படும் நில அகழ்வுப் பணிகளை நிறுத்துதல், வடிகால் அமைப்பு கட்டமைப்புக்களை புனரமைத்தல் மற்றும் எந்த ஒரு உடனடி திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கும் முடியுமான வகையில் தற்போதுள்ள நீர் இறைக்கும் நிலையங்களின் தற்போதைய நிலையை மதிப்பிடுவது உள்ளிட்ட துரித நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுவதற்கும் அமைச்சரவையினால் கொலன்னாவ பிரதேச செயலக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான மூல காரணங்களை இனங்கண்டு எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படாதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்கும், கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் நிலங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் கொலன்னாவ நகரை மீண்டும் திட்டமிடுவதற்கான விரிவான அபிவிருத்தித் திட்டத்தை தயார் செய்வதற்குமாக கொழும்பு மாவட்ட செயலாளர் தலைமையில் சம்பந்தப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், இந்தக் குழுவின் அறிக்கையை உரிய பரிந்துரைகளுடன் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கக் கூடியவாறு ஒரு மாத காலத்துக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கைகளைப் பெறுவதற்கு அமைச்சரவையினால் கொழும்பு மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக உரிய பரிந்துரைகளும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளன. மேலும் கொலன்னாவ பிரதேச செயலகத்திற்கான விரிவான அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல், கொலன்னாவ நகரத்தை மறுசீரமைத்தல் மற்றும் காணி பயன்பாட்டை மேம்படுத்துவதற்காகவும் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன் அதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது,

“கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற அனர்த்த நிலையின் காரணமாக 71 வீடுகள் முழுமையாகவும், 9177 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 821 நடுத்தர வணிகங்கள் மற்றும் 63 உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன. மலைப் பகுகளுக்கு அருகில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான வீடுகளுக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை. இந்த வீடுகள் சட்டரீதியற்ற நிர்மாணங்களின் கீழே அடங்குகின்றன. 15,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டும். சிலர் இந்த வீடுகளைப் பெற்றுக் கொண்டும் பழைய வீடுகளிலேயே வசிக்கின்றனர். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் நிவாரணங்களை வழங்கும்போது, ​​இந்த சட்டரீதியற்ற கட்டுமானங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.

மே மாதம் 15ஆம் திகதியிலிருந்து ஜூன் 05ம் திகதி வரைக்கும் 30 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தற்போது வழங்கப்பட்டுள்ளன. இன்னும் இழப்பீட்டுத் தொகையினை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படவுள்ள இழப்பீட்டுத் தொகையின் மொத்த அளவு கணக்கிடப்பட்டு வருவதால் அந்த தொகை எவ்வளவு என்பதை இப்போதைக்குக் கூற முடியாதுள்ளது.

இது தொடர்பான் விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் திறைசேரியிலிருந்து மேலதிக ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சுற்றுநிருபத்தின் ஊடாக அன்றாடம் சமைத்த உணவுக்காக வழங்கப்படும் நிதி 33 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு உணவு வழங்கும் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. முன்னர் அனர்த்த நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்கப்பட்ட போதிலும், பின்னர் வீடுகளின் மேல் மாடிகளில் சிக்கியிருப்பவர்களுக்கு அவ்வீடுகளுக்கே சென்று உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. எந்த தடைகள் வந்தாலும், இந்நாட்டினுள் வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கு, தேவையான தீர்மானங்களை மேற்கொண்டு அரசாங்கம் அதனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து வருகிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அனர்த்தத்தின் காரணமாக முற்றாக சேதமடைந்துள்ள அனைத்து வீடுகளையும் அரச நிதியில், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் அடுத்த 02 மாதங்களுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் இது தொடர்பான விரிவான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது, ​​பொது நிர்வாக அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுடன் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட செயலகங்கள், பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேச செயலகங்களின் அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் தலைமையிலான பிரதேச அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரசிக கொட்டுதுரகே தமிழில் எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division