Home » கிரிக்கெட் ஜாம்பவானை உலகுக்கு ஈன்றளித்த பிரீடா ஜயசூரிய

கிரிக்கெட் ஜாம்பவானை உலகுக்கு ஈன்றளித்த பிரீடா ஜயசூரிய

by Damith Pushpika
June 9, 2024 6:26 am 0 comment

ஒருவன் தன் வாழ்நாளில் தன் தாயை இழப்பதைத் தவிர தாங்க முடியாத துயரமும் வேதனையும் வேறில்லை.

பிரீடா ஜயசூரியவின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்தின் கடைக்குட்டியான சனத் ஜயசூரியவும் இதேபோன்ற சோகத்தை அனுபவித்திருக்க வேண்டும். சந்தன மற்றும் சனத் ஆகிய இருவருக்கும் தாங்க முடியாத சோகத்தை மீதப்படுத்திவிட்டு அவர்களது தாய் அண்மையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். உலகை வெற்றி கொண்ட கிரிக்கெட் விளையாட்டு வீரரை நாட்டுக்களித்த பிரீடா ஜயசூரியவைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மாத்தறை கொட்டுவேகொட, மகாமாயா மாவத்தையில் உள்ள ‘மஹகெதர’ பகுதிக்கு சென்ற போதே சனத் ஜயசூரிய தினகரனுக்கு அந்த சோகக் கதையை கூறினார்.

“எங்கள் அம்மா அற்புதமானவர். மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். என் அம்மாவுக்கு கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி அதிகம் தெரியாது. நாங்கள் சிறு வயதாக இருந்த போது, ​​​​சாதாரண தரத்தில் சித்தியடைந்து, உயர் தரத்தில் நன்றாகப் படித்து நல்லதொரு தொழிலைச் செய்யவேண்டும் என்றே அவர் எப்போதும் எம்மிடம் கூறுவார். அந்த எதிர்பார்ப்புடன்தான அம்மா இருந்தார். அவ்வாறிருக்கும் போதுதான் நான் கிரிக்கெட்டில் பிரவேசித்தேன். அதையிட்டு அம்மா கொஞ்சம் பயந்தார். விளையாட்டு என் படிப்பை பாதித்த பிறகு என் எதிர்காலம் என்னவாகும் என்று என் அம்மா கவலைப்பட்டார்.

சனத் ஜயசூரியவைப் பற்றி உலகம் அறிந்து கொண்டது 1996ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியின் போதுதான். அந்தப் போட்டியில் சிறந்த வீரராக அவர் தெரிவாகி விருது பெற்றதன் பின்னர்தான் பின்னர் அவர் ரொசான் மஹாநாமவுடன் இணைந்து 1997ஆம் ஆண்டு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் துடுப்பாட்டத்தில் உலக சாதனை படைத்தார். தனது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸை விளையாடி 340 ஓட்டங்களை எடுத்தார்.

‘அம்மா மகிழ்ச்சியடைந்திருந்திருக்க வேண்டும். எனினும் அதனை பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை. சனத் ஜயசூர்யவின் தாய் என்பதில் அதிகம் பெருமை பட்டுக் கொள்ளவுமில்லை. மிக எளிமையான வாழ்க்கைதான் வாழ்ந்தார். சாதாரண முறையில்தான் வாழ்ந்தார். என் அம்மாவிடம் நான் கண்ட சிறந்த விடயம் அதுதான்.

அன்று முதல் உடல்நிலை மோசமாகும் வரைக்கும் நடந்தேதான் கடைக்குச் செல்வார்.

வெளியாட்கள் அவரை எப்படி அழைத்தாலும், தனது இளைய மகனை அழைக்க சனத்தின் தாய்க்கு ஆயிரம் பெயர்கள் இருந்தன.

‘அம்மா என்னை ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பார். சில நேரங்களில் பிசாசு என்றும் அழைப்பார். மகன் என அழைப்பார். அம்மா என்னை அழைப்பதற்கு இவ்வாறு பல பெயர்கள் இருந்தன. நான் குடும்பத்தின் குறும்புக்காரனல்லவா. சொல்வதைக் கேட்காத குறும்புக் காரனாச்சே. அதனால்தான் அவர் என்னை எப்போதும் கண்காணித்து வந்தார்.

‘எங்கள் குடும்பத்தில் அம்மாதான் மிகப்பெரிய ஊக்க சக்தியாக இருந்தார். அப்பா இருந்தாலும் அம்மாதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். அர்ப்பணிப்பு, ஆற்றல் மற்றும் கடின உழைப்புடன் அம்மா அனைத்தையும் செய்தார். அதேபோன்று மிக வேகமாக செயலாற்றிய ஒருவர். என்னையும் என் சகோதரனையும் நல்ல இடத்தில் வைத்துப் பார்க்க அம்மா ஆசைப்பட்டார்.

அவர் எனக்கும் என் சகோதரனுக்கும் எப்போதும் சிறந்ததை வழங்க முயற்சித்தார்.

அப்போது உள்ளூராட்சி அமைச்சில் பரிசோதகராகப் பணியாற்றிய சனத்தின் தந்தை டன்ஸ்டன் ஜயசூரியவின் சம்பளம் இரு மகன்களின் கல்விக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் போதவில்லை. எனவே, மேலதிக வருமானம் தேவை என்பதை ஜயசூர்யா குடும்பத்தினர் கடுமையாக உணர்ந்தனர்.

‘2020ல் அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு எல்லாவற்றுக்கும் இருந்தது அம்மா மாத்திரமே.

“ஊரவர்கள் அம்மா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். அதேபோன்று அம்மாவும் சிறந்த வாழ்க்கை வாழ்ந்தார். நிறைய புண்ணிய காரியங்களை அவர் செய்திருக்கிறார். அவர் பௌத்த சிந்தனையை மிகவும் அறிந்திருந்தார்.

ஜயசுமணாராம விகாரையுடன் தொடர்பைப் பேணி பக்தி மிக்க வாழ்க்கையை வாழ்ந்த பிரீடா ஜயசூரிய தனது பிள்ளைகளுக்காகத் தொடர்ந்தும் போதி பூஜைகளைச் செய்து வந்தார். உலகை வென்ற கிரிக்கெட் விளையாட்டு வீரரை உலகிற்கு வழங்கிய பிரீடா ஜயசூரிய மரணிக்கும் போது அவரது வயது 84 ஆகும். அவரது இறுதிச் சடங்கு அண்மையில் மாத்தறை பொது மயானத்தில் இடம்பெற்றது.

பௌஸ் முஹம்மட் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division