ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வடபகுதிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்துவைத்ததுடன், வடபகுதியிலுள்ள மக்களின் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துவைத்த அவர், முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் ‘உறுமய’ திட்டத்தின் கீழ் காணி உரிமைப் பத்திரங்களையும் வழங்கி வைத்தார்.
நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்குத் தலைமைத்துவம் வழங்கிவரும் ஜனாதிபதி, நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமாயின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இதன் ஓர் அங்கமாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இவர் எடுத்திருந்த முயற்சிகள் இடைநடுவில் கைவிடப்பட்டமை துர்ப்பாக்கியமான நிலைமையாக இருந்தாலும், வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் அவர் தொடர்ந்தும் சரிசனை செலுத்தி வருகின்றமை அவருடைய இந்த விஜயத்தின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அபிவிருத்தித் திட்டங்களில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிச் செல்ல வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதால், அவருடைய இந்த வடக்கு விஜயத்தின் போது அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்குரார்ப்பண நிகழ்வுகள் மற்றும் காணி உரிமைப்பத்திரம் கையளிக்கும் நிகழ்வுகளில் அவர்களின் பங்களிப்பையும் காணமுடிந்தது. எதிர்க்கட்சியில் இருப்பதால் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் போர்க்கொடி தூக்குவதும் மாத்திரமே அவர்களது கடமை என்று அர்த்தமில்லை.
அரசாங்கம் முன்னெடுக்கும் சிறந்த செயற்றிட்டங்களை வரவேற்கும் அதேநேரம், தவறிழைக்கும் சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டி சரிசெய்வதற்கான ஒத்துழைப்பை வழங்குவதே ஆக்கபூர்வமான அரசியல் செயற்பாடாக இருக்கும். இவ்வாறான நிலையில், ஜனாதிபதியின் அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
இது ஜனாதிபதியின் சிறந்த அணுமுறையை எடுத்துக்காட்டியிருந்தது. இதற்கும் அப்பால், சுகவீனமுற்றிருக்கும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனை வீடு தேடிச்சென்று சந்தித்திருந்த ஜனாதிபதி, அவரை நலன் விசாரித்திருந்ததுடன், நட்புரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.
தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் பற்றி ஜனாதிபதி இதன்போது பிரஸ்தாபித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இருவருடைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், அரசாங்கத்தினால் அதாவது வெளிநாட்டு அரசுகளின் நிதிப்பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் பல அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்துக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் பெண்களுக்கான விசேட மருத்துவமனை உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.
யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென்மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன.
வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே தமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கும், மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதுடன், வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றி, வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவுவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் வடக்கின் வைத்தியசாலைக் கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக வடக்கில் உள்ள பலர் காணிப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் இதனைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியையும் ஜனாதிபதி வழங்கியிருந்தார். இடம்பெயர்ந்துள்ள கேப்பாபுலவு மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தது மாத்திரமன்றி, வடபகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி, தனது அரசாங்கம் முகங்கொடுத்த சவால்கள் மற்றும் நாட்டை மீட்டெடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்.
“இப்பிரதேச இளைஞர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இளைஞர்களுக்கு வருமான வழிகள் மற்றும் தொழில்வாய்ப்புகள் அவசியம். முதலில் யாழ்ப்பாணத்தில் அல்லது தேசிய மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும்” என கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“இன்று நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதுதான். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் 2023-_2024 திட்டத்தை நான் இப்போது ஆரம்பித்துள்ளேன். நாடு வங்குரோத்து அடைந்துள்ளதை உலகமே ஏற்றுக்கொண்டது. இப்போது நாடு வங்குரோத்து நிலையில் இல்லை. நாடு வங்குரோத்தாகும் பட்சத்தில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் நம்முடன் இணைந்து செயல்படாது.
நாட்டு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தொழில் செய்பவர்களுக்கு போதிய சம்பளம் கிடைப்பதில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஏன் ஏற்பட்டது? பழைய பொருளாதார முறையினால் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது. எனவே, பழைமையான பொருளாதாரப் போக்கையும், அரசியல் போக்கையும் மாற்ற வேண்டும். தொழில் வாய்ப்புகளை வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திட்டத்தை, என்னால் மறந்து விட முடியாது.
அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். நாம் செல்ல வேண்டிய புதிய பாதையை முன்னோக்கிக் கொண்டு செல்வது அவசியம். 2022 இல் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம், இவ்வளவு குறுகிய காலத்தில் மீண்டு வரும் என்று யாரும் நம்பவில்லை. தொழில் கேட்பதை விட யார் ஆட்சிக்கு வந்தாலும் எப்படி தொழில் வழங்குவது என்ற கேள்வியை கேளுங்கள். பொய்க் கூச்சல் போடுபவர்களிடம் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருக்காது. உங்களது பிரச்சினைகளை முறையாக தீர்க்கும் திட்டத்தை எமது அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது” என்றும் ஜனாதிபதி கூறியியிருந்தார். இந்த மாநாட்டில் இளைஞர் யுவதிகள் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் வழங்கியிருந்தார்.
நாட்டைப் பாரிய பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீட்பதில் பல சவால்களைச் சந்தித்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், யுத்தத்தினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அக்கறை செலுத்தி, அங்குள்ள மக்களின் குறைகளையும் நிவர்த்தி செய்வதிலும் அக்கறை காண்பித்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அபிவிருத்தித் திட்டங்களைப் போன்று வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்பார்க்கும் தேசிய பிரச்சினைக்கும் அரசாங்கம் ஆக்கபூர்வமான தீர்வை வழங்க முன்வர வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் அபிலாஷையாகும்.
பி.ஹர்ஷன்