“எனது கவிதைகள் ‘புழுதி’ போன்றன. எத்தனை முறை தட்டி உதறி விட்டாலும், உங்கள் மனங்களிலும், நினைவுகளிலும் மீண்டும் மீண்டும் ஒட்டிக் கொள்ளும்” என்ற முன்னுரையோடு, அம்மாக்களுக்கு சமர்ப்பணம் செய்து காரையன் கதன் தந்திருக்கின்ற நூல் ‘புழுதி’.
நேர்த்தியான அச்சமைப்பில் ‘தாயதி’ வெளியீடாக, 112 பக்கங்களில் 111 கவிதைகளை உள்ளடக்கி மலர்ந்திருக்கின்றது.
காரையன் கதன் வித்தியாசமான படைப்பாளி என்பதை அவரின் கவிதைத் தலைப்புகளை வாசித்தவுடனேயே புரிந்து கொள்ள முடியும். எடுத்துக் காட்டல்களாக தலைப்புகளில் சில இவை: குறட்டை,கட்டாக்காலி,பொக்காண்டி, முலை தொலைத்தவள், அரியண்டம், ஆட கட மோட கட, மிலாறு, நனைந்த கடல், சலசல, எவடம் எவடம், உப்புத்தண்ணி, பொருக்கு, தண்ணீர்ச் சோற்றுப் பழம், அத்தாங்கு, ஆலா பற பற, துண்டுபீடி.
“இன்னவைதான் கவி எழுத
ஏற்றபொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர், சோலை, கடல்
மின்னல், முகில் தென்றலினை மறவுங்கள், மீந்திருக்கும் இன்னல், உழைப்பு ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்” என்று ஈழத்தின் நவீன கவிதை முன்னோடி மஹாகவி எடுத்துரைப்பார்.
காரையன் கதன், அவர் வழியில் செல்பவராக, சாதாரண மனிதர்களின் வாழ்வியலை இலகு நடையில், அவர்களின் மொழியில் எழுதித் தருபவராக அடையாளம் பெறுகிறார்.
கிராமிய மணங் கமழும் சொற்களில் அம்மக்களின் நோவினைகளை, நொம்பலங்களை, சந்தோசங்களை அனுபவக் குறிப்புகளாகப் பதிவிடுகிறார். நிகழ்ச்சிகள், சம்பவங்கள் என்பவற்றை சொல்லோவியங்களாகத் தீட்டித் தருகிறார் அவர்.
‘ஆட கட மோட’ சிறு வயதில் நாம் விளையாடிய விளையாட்டை நினைவுக்குக் கொண்டு வருகின்ற கவிதை.
பால், பழம், முட்டை என்பவற்றை உள்ளங்கைக்குள் கொடுத்து, ஆடை கடைந்து, “ஆட கடைகிறேன் ஆட கடைகிறேன், நண்டூருது, நரியூருது அக்கிளு கிளு கிளு ” என்று சிரிப்பூட்டிச் சிரித்து மகிழ்ந்த காலத்தை நினைவுக்குக் கொண்டுவருகின்ற கவிதை அது
ஆனால், கவிஞரின் கவிதை இப்படி அமைகிறது.
‘மனதுக்குப் பிடித்தமான கைகளை
உற்பத்தி செய்து கொள்ளுங்கள்.’
உள்ளத்தில் எந்தவித அழுக்கும் இல்லாமல் நட்போடு பழகிய அந்தக் கரங்கள் இப்பொழுது இல்லை. விளையாட்டுக்குத் தேவையான மனதுக்குப் பிடித்த கைகளை முதலில் உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை அந்தக் கவி வரிமூலம் சொல்ல விழைகிறார் கவிஞர்.
“விரல்களைப் பிடித்து ஒவ்வொரு பெயர்வைத்து உறவுகளுக்கும் ஊட்டி விடுங்கள்.
உள்ளங்கை தாங்கி ஆட கட மோட கட
முழங்கையால் கடைந்து பாருங்கள்.
நண்டூருது, நரியூருது பாடி
அக்குளுக்குளு மூட்டுங்கள்.
சிரியுங்கள் சிரியுங்கள் நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று ஒரு நட்பு வெளியை அவாவுறுகிறார் கவிஞர்.
குறட்டை என்று ஒரு கவிதை.
” பகலை உண்ட களைப்பில்
உறங்கிக் கிடக்கிறது இரவு.
தூக்கம் தொலைத்த
மரங்கள் சில
அவ்வப்போது
குறட்டை விடுவதைப் போல
அசைந்து கொள்வதை காண்கின்றேன்”.
பகல் வருவதும், மறைவதும் இரவு வருவதும், மரங்கள் அசைவதும் இயற்கையாக நடை பெறுவதுதான். ஆனால், கவிஞர் இரவு, பகலை உண்ட களைப்பில் உறங்கிக் கிடப்பதாகவும், மரங்கள் குறட்டை விடுவதாகவும் குறிப்பிடுகின்றார். இயல்பாக நடைபெறும் நிகழ்வொன்றின்மீது தனது சிந்தனையை, கருத்தை உட்புகுத்திச் சொல்லும் கவிதைகளைத் தருகிறார் அவர். நூலில் இடம்பெற்றுள்ள இவ்வாறான பெரும்பாலான அவரின் கவிதைகள் மூலமாக தற்குறிப்பேற்ற அணிக் கவிதைகள் தருபவராக, எதார்த்த வாதப் போக்குடைய கவிதைக் காரராக, கதனை அடையாளம் காண முடிகிறது.
ஏபரல்-1 என்று ஒரு கவிதை.
நான்முட்டாள்
முட்டாள் தின வாழ்த்தை
எனக்குச் சொல்லிவிடுங்கள்
பிள்ளைகளை விட
கண் விழித்தவுடன்
கைத் தொலை பேசியைத் தேடும்
நான் முட்டாள்.
ஆடம்பரக் கனவுகளை விரித்து,
ஓய்வின்றிப் போன்பார்க்கும்
நான் முட்டாள்
கறிபுளியின் கைப்பக்குவம் மறந்து
போனைப் பார்த்து உணவுண்ணும்
நான் முட்டாள் !”
என்று தொடர்கிறது கவிதை.
போனுக்குள் தொலைந்து போன நமது வாழ்வின் பல்வேறு சுகானுபவங்களை எடுத்துச் சொல்லும் கவிதை அது.
றஷ்மி முகப்போவியம் வரைந்திருக்கும் “புழுதி’க்கு தாயதி செயற்பாட்டாளரும், சமூக செயலூக்கத்திற்கான முன்னோடியுமான தில்லை அணிந்துரை வழங்கியுள்ளார்.
சாதாரணமான சனங்களின் கதையை மிக எளிமையான சொற்களில் தருபவராக கதனைச் சொல்லும் அவர், கவித்துவம் என்று சொல்லி அறிமுகமற்ற சொற்களைத் தராதவர் என்றும் பாராட்டுகின்றார்.
” மகன் கதன் சமூகச் செயலூக்கத்திலும், தொடர்ச்சியான புத்தக ஆவணப்படுத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபடுவது போன்று தேர்ந்த வாசிப்புப் பழக்கத்திலும் ஈடுபடவேண்டும் என்பது எனது பேரவா.” என்று குறிப்பிட்டு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றார் தில்லை அவர்கள். அவரோடு இணைந்து நின்று, தேர்ந்த வாசிப்போடு இலக்கிய உலகில் அவர் இன்னும் வளர வாழ்த்துரைக்கின்றோம்.
நூல் :- புழுதி
வெளியீடு:- தாயதி,
விலை:- ரூபா 560/(இலங்கை)
இந்திய ரூபா 140/- (இந்தியா)
தொடர்பு:- காரையன் கதன்,
69 C/வடிவேல் குறுக்கு வீதி,
காரைதீவு,-12.
இலங்கை.