க.பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவனான மதியழகன் டினோஜன் முதலிடத்தை பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவாகியுள்ளார். இம்மாணவன் அகில இலங்கை மட்டத்தில் 47ஆவது நிலையை பெற்றுள்ளார்.
யாழ். இந்து மகளிர் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 90 மாணவிகள் விஞ்ஞான, கலை, வர்த்தக பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர். வர்த்தக பிரிவில் முதலாம் நிலை மற்றும் கலைப் பிரிவில் 05ஆம் இடம் உட்பட 24 பேர் 03 ஏ சித்திகளையும் 18 பேர் 02 ஏ,பி சித்திகளையும் 06 பேர் 02ஏ, சீ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
பரீட்சைக்கு 284 பேர் தோற்றியிருந்தனர். க.பொ.த. உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் நாடளாவிய ரீதியில் 32ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
யாழ். விசேட நிருபர்