ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என குஜராத்தில் கைது செய்யப்பட்ட 04 இலங்கையரையும் வழிநடத்தியதாக கூறப்பட்ட சந்தேக நபர் கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேக நபரை 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது பொலிஸாரால்தேடப்பட்டு வந்த ஒஸ்மான் புஷ்பராஜ் ஜெரார்ட் என்ற இந்த சந்தேக நபர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக இவரை கைது செய்ய உதவுவோருக்கு 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.
முன்னதாக ஐ. எஸ். ஐ. எஸ். தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்ட 04 இலங்கையர்களும் கொழும்பிலிருந்து சென்னை ஊடாக அஹமதாபாத் விமான நிலையத்துக்கு சென்ற போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த அபு என்பவரின் கட்டளைப்படி இந்தியாவில் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களை அவர்கள் கொண்டிருந்ததாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.