மொரட்டுவை மருத்துவ பீடத்தின் முறையான செயற்பாடு மற்றும் முகாமைத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் மொரட்டுவை மருத்துவ பீடத்தை 2024 ஓகஸ்ட் முதல் வாரத்துக்குள் SAITM வளாகத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை ஒதுக்குவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களை நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மொரட்டுவை பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட பல கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றது. 2025 ஜனவரியில் கற்கைகளை ஆரம்பிக்கும் முன் ஆரம்ப ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகம் குறைந்தபட்சம் ஓகஸ்ட் 2024 க்குள் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை வளாகத்தை அணுக வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.