கைத்தொலைபேசிப் பாவனையினால் நன்மைகளும் உள்ளன, அதற்கு மாறாக தீமைகளும் நிறைந்துள்ளன. ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்களில் அநேகமானோர் இளவயதினராகக் காணப்படுவதால், நன்மைகளுக்குப் பதிலாக தீமைகளே அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதேசமயம் இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
தென்மாகாணத்திலுள்ள 400 பாடசாலை மாணவர்களிடம் வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வை மேற்கொண்டதாக விசேட வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
சிறுவர்கள் அதிகமான நேரம் கைத்தொலைபேசியில் மூழ்கியிருப்பதனால் பலவகையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இதன் காரணமாக இரவு நேரத்தில் உறக்கமின்றி எப்போதும் கவலையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொலைபேசிக்கு அடிமையான சிறுவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையை சரியான முறையில் முன்னெடுப்பதில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
இதுஒருபுறமிருக்க, மற்றொரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகியிருக்கின்றது. கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையான சிறுவர்களில் ஒரு தொகையினருக்கு நீரிழிவு நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் உடல் இயக்கம் சரியாக இல்லாததால் நீரிழிவு நோய் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வதாகவும், பெற்றோரால் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட் தொலைபேசிகளில் வயதானவர்கள் மாத்திரமன்றி, சிறுவர்களும் எந்நேரமும் மூழ்கிக் கிடப்பதை நாம் சாதாரணமாகவே காண்கின்றோம். அவர்களது கல்வி பாதிக்கப்படுவது மாத்திரமன்றி, தீய பழக்கவழக்கங்களுக்கு அவர்கள் ஈர்க்கப்படும் ஆபத்தும் உள்ளது.
தவறான நபர்களுடன் தொடர்பு கொள்வதால் வீணான பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
இன்றைய இளவயதினரே நாட்டின் நாளைய தூண்கள் ஆவர். கைத்தொலைபேசி பாவனையின் விளைவாக அவர்களது எதிர்காலம் பாழடைவதற்கு பெற்றோர் இடமளிக்கலாகாது.