இந்த ஆண்டு இலங்கைக்குத் தேர்தல் வருடம் என்பது உறுதியாகியுள்ள நிலையில், எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்படும் என்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் கடந்த வாரம் தமக்கிடையில் விவாதம் நடத்திக் கொண்டிருந்தன.
எனினும், சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் நடுப்பகுதியிலும், பொதுத்தேர்தல் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதமும் நடத்தப்பட வேண்டும். இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்ற ஊகம் பொதுவெளியில் வலுத்துள்ளது. ஆனாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்கும்.
செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16 வரை தேர்தல் காலமாக இருக்கும். ஒக்டோபர் 16 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு தினமாக இருக்கும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அதற்கான தேர்தல் முதலில் நடத்தப்படலாம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் செல்வதற்கே விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், தற்போதைய அரசாங்கத்தின் பிரதான ஆளும் கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே பொதுத்தேர்தல் முதலில் நடத்தப்படும் என்ற ஊகம் வலுவடைந்தது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றிபெறும் தரப்பினர் பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதே பசில் ராஜபக்ஷவின் வாதமாக இருந்துள்ளது.
கடந்த கால அரசியல் அனுபவங்களும் இதனை வலுப்படுத்துகின்றன. 1989ஆம் ஆண்டு அமரர் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்திலும், அதன் பின்னர் 2010 மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம், 2020 கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் என்பவற்றில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தல்களில் அவர்கள் தலைமையிலான அரசாங்கங்கள் முறையே 125 ஆசனங்கள், 144 ஆசனங்கள் மற்றும் 145 ஆசனங்களைப் வெற்றி பெற்றிருந்தன.
இதனை முன்னுதாரணமாகக் கொண்டே பசில் ராஜபக்ஷவின் கணிப்பும் அமைந்துள்ளது.
குறிப்பாக பொதுஜன பெரமுன தொடர்பில் மக்கள் மத்தியில் தற்பொழுது காணப்படும் நிலைப்பாடு அவர்களுக்கு சாதகமாக இல்லையென்பதால், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அவர்கள் நினைத்த வெற்றி கிட்டவில்லையாயின் அதன் பின்னர் நடத்தப்படக் கூடிய பாராளுமன்றத் தேர்தல் அவர்களுக்கு மோசமான முடிவுகளைக் கொடுத்துவிடலாம் என்பது பசில் ராஜபக்ஷவின் கணிப்பீடாக இருக்கலாம்.
இருந்தாலும் இது போன்ற கணிப்புக்கள் பிழைத்துப்போன சந்தர்ப்பங்களும் உள்ளன.
2000ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சந்திரிகா குமாரதுங்கவின் கட்சி 107 ஆசனங்களை மாத்திரம் பெற்றிருந்ததுடன், 2015ஆம் ஆண்டு மைத்திரி தலைமையிலான அரசாங்கம் 106 ஆசனங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
இது கடந்தகால அரசியல் அனுபவங்களாக இருந்தாலும் தற்பொழுது நாட்டில் காணப்படும் அரசியல் சூழல் என்பது சற்று வித்தியாசமானது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. எனவே, தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்காத திருப்பங்களை வழங்கக் கூடியதாகவும் அமைந்து விடலாம்.
அதேநேரம், பொதுத்தேர்தலொன்று முன்கூட்டியே நடத்தப்பட்டால் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டாலும், தற்போதைய ஜனாதிபதி ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று பாராளுமன்றத்தில் செயற்படுவதற்கான பெரும்பான்மையை அமைத்துக் கொள்ளலாம்.
அவ்வாறான பின்னணியில் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொதுவேட்பாளராகக் களமிறக்கி வெற்றிபெறச் செய்ய முடியும் என்பதும் பசில் ராஜபக்ஷவின் வாதமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இதற்கு மாறான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை சவாலுக்கு உட்படுத்தப்படுமாயின் இரண்டரை வருடங்களுக்கு புதிய ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது போகும்.
அது நாட்டில் ஸ்திரமற்ற தன்மையையே ஏற்படுத்திவிடும். இருந்தாலும் அரசியல்வாதிகள் பொதுத்தேர்தல் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதித் தேர்தலே இவ்வருடம் நடத்தப்படும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தல் குறித்துப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு இந்தவருட வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தல் குறித்தே அக்கறை காட்டிவருவதாகத் தெரிகிறது.
இது இவ்விதமிருக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கான களம் மேலும் சூடுபிடித்திருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் குறித்த பதவிக்குப் போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுதிபடக் கூறி வருகின்றது. இது பற்றிய அறிவிப்பு எதிர்வரும் ஜுன் முதல்வாரம் வெளியிடப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இத்தேர்தலில் போட்டியிட்டால் மும்முனைப் போட்டி நிச்சயமாக ஏற்படும்.
இவர்களைத் தவிரவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மேலும் பலர் முயற்சிக்கின்றனர். இதில் ஒருவராக தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் காணப்படுகின்றார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அதன் தலைவர் பதவிக்கும் நியமிக்கப்பட்டுள்ளார். இது விடயத்தில் சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயதாசவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார்.
சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட விஜயதாவுக்கு நீதிமன்றம் தொடர்ந்தும் தடையுத்தரவை பிறப்பித்துள்ளபோதும் அவர் கட்சியில் நீடித்து வருகின்றார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் அவர் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகின்றது.
இதற்கிடையில், மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஷவை எதிர்த்துக் களமிறங்கிய சரத் பொன்சேகா அதில் தோல்வியைத் தழுவியிருந்தார்.
இதன் பின்னர் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட அவர், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு பீல்ட் மார்ஷல் பதவிக்குத் தரமுயர்த்தப்பட்டார். இவ்வாறான பின்னணியில் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கட்சியை உருவாக்குவதன் பின்னணியில் ஒத்துழைப்பு வழங்கிய சரத் பொன்சேகா அக்கட்சியின் தவிசாளர் பதவிக்கும் நியமிக்கப்பட்டார்.
இருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான உறவில் முரண்பாடு ஏற்பட்டது. குறிப்பாக கடந்தகாலத்தில் பாதுகாப்புப் படையில் இருந்த முக்கியஸ்தர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைக்கும் விடயத்தில் சரத் பொன்சேகா இணங்கவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக பகிரங்கக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தியதால் இது தரப்புக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. தன்னைத் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றம் சென்றிருந்தார்.
இந்த நிலையில் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் அவர் புத்தகமொன்றை வெளியிடவிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த அரகலய போராட்ட காலத்தில் போராட்டக்காரர்கள் மத்தியில் அவர் வரவேற்பைப் பெற்றவராக விளங்கினார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடலாம் எனக் கணிப்பிட்டிருக்கலாம். எந்தவொரு கட்சியிலும் இன்றி தனித்துப் போட்டியிடவே அவர் எண்ணியிருப்பதாக ஆங்கில பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இருந்தபோதும் அவரிடமிருந்து இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.
அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுஜன பெரமுனவும் தனித்து வேட்பாளரைக் களமிறக்குமாயின் பிரதானமாக ஐந்து வேட்பாளர்கள் களமாடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மறுபக்கத்தில், தமிழ்க் கட்சிகள் இணைந்து பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கினால் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இதனால் யாராவது ஒரு வேட்பாளர் இலகுவான வெற்றியை உறுதிசெய்வதற்கான சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேநேரம், இம்முறை வேட்பாளர்களுக்கான வைப்புப் பணத்தின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கமைய அரசியல் கட்சியொன்றின் சார்பில் போட்டியிடும் வோட்பாளருக்கான கட்டுப்பணம் 2.6 மில்லியனாகவும், சுயேச்சையாகப் போட்டியிடுபவரின் கட்டுப்பணம் 3.1 மில்லியன் ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான அங்கீகாரம் அமைச்சரவையில் பெறப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் களம் மிகவும் பரபரப்பு மிக்கதாக அமையும்.