தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை எட்டியாந்தோட்டை நகரில் நடைபெறும். எட்டியாந்தோட்டை ஸ்ரீவிநாயகர் ஆலயத்துக்கு எதிரே அமைந்துள்ள கே.ஜி.எல்.
குணவர்தன மண்டபத்தில் கட்சித் தலைவர், கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.
கூட்டணியின் பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம் எம்.பி., வே.இராதாகிருஷ்ணன் எம்.பி., கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கபீர் ஹசீம் எம்.பி., சுஜித் சஞ்சய் பெரேரா எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் வேலுகுமார் எம்.பி. ஆகியோர் உட்பட கட்சி, கூட்டணி அரசியல் குழு உறுப்பினர்களும் விசேட அழைப்பாளர்கள், மாவட்ட கட்சி அங்கத்தவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் முருகேசு பொறுப்பேற்றுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக வலய, தோட்ட பிரிவு வலய, நகர வலய அமைப்பாளர்களின் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய முழு மாவட்டம் தழுவிய கட்டமைப்பு மாநாடாக இந்நிகழ்வு, ‘ஒன்றிணைந்து வெல்வோம்! தேசிய அரங்கில் இடம்பெறுவோம்!’ என்ற தொனிப்பொருளில் நடைபெறுமென பரணீதரன் முருகேசு தெரிவித்துள்ளார்.