இரு நூற்றாண்டு கால உயர்கல்விப் புலமை மரபு கொண்ட யாழ்ப்பாணத்திலிருந்து புகழ்மிக்க மருத்துவர்களும், பொறியியலாளர்களும், விஞ்ஞானிகளும், சட்ட மேதைகளும், கணக்காளர்களும், உயர் அரசாங்க நிர்வாகிகளும், பல்கலைக்கழகப் புலமையாளர்களும், பெருந்தொகையில் உருவானார்களெனினும், அந்த அளவிற்கு சமூக விஞ்ஞானிகளும் மானிடப் புலமைசார் அறிவுஜீவிகளும் உருவாகவில்லை என்பது புலமை வானில் தென்படும் இருள் மேகமாகத் தெரிகிறது.
தமிழர் தம் தாயகப் பிரதேசத்தின் சமூகவியல், கிராமியப் பொருளாதாரக் கட்டமைப்பு, சாதிய அமைப்புமுறை, திருமண முறைமைகள், காலந்தோறும் புலப்பெயர்வு, காலனிய வாழ்வியல், அரசியல் எழுச்சிகள், கருத்தாடல்கள், தமிழ்த் தேசிய எழுச்சி போன்ற பல்வேறு சமூகப் பண்புகள் குறித்து பெருமளவு புலமை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த ஆய்வறிவுப் புலமையின் வெறுமை தென்னிலங்கை குறித்து வெளியாகும் புலமை ஆய்வுகளின் வெளிச்சத்தில் துலாம்பரமாகிறது.
சட்டத் துறையில் புகழ் மிக்க நீதியரசர்களாகத் திகழ்ந்த சி.நாகலிங்கம், எஸ்.சர்வானந்தா போன்றோர் குறித்தோ, ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.நடேசன் போன்ற வழக்கியல் அறிஞர்கள் குறித்தோ, தமிழ் அரசியல் தலைவர்கள் குறித்தோ எந்த ஆவணமும் நம்மிடம் இல்லை. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நுணுக்கி ஆராய்ந்த நூல்கள் எவையும் இல்லை.
எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பற்றி, ஜேம்ஸ் மெனர் எழுதிய The Expedient Utopian போன்ற ஆய்வு நூல் போன்று நம் தமிழ் அரசியல் தலைவர்கள் பற்றி எந்த ஆய்வுமே செய்யப்படவில்லை.
போர்த்துக்கேயக் கால யாழ்ப்பாணம் பற்றி அறிய, போர்த்துக்கேய மொழியைப் பயின்று ,ஆராய்வு மேற்கொண்ட கலாநிதி டிக்கிரி அபயசிங்க அவர்களின் Jaffna under the Portuguese என்ற நூலைத்தான் நாட வேண்டியிருக்கிறது.
ஆங்காங்கே நல்லறிஞர் சிலர் நம் மத்தியில் தோன்றியபோதும், ஈழத் தமிழர் வாழ்வியல் பற்றிய ஆய்வு என்பது ஆட்புகாத அடர் காடாகவே தோற்றங் காட்டுகிறது.
சுயமொழிக் கல்வியின் பின், ஆங்கிலத்தில் வெளியாகும் நூல்களை வாசித்துக் கிரகிக்கும் ஆற்றல் நம் மாணாக்கர் மத்தியில் வளர்த்தெடுத்துச் செல்லப்படவில்லை. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் போதிக்கப்பட்டதாயினும் அப்பயிற்சியில் வெற்றி கிடைத்தது என்று கூறுவதற்கில்லை. பல்கலைக்கழக ஆங்கில போதனை ஒரு தோல்வி என்றே கூறவேண்டும்.
சிங்கள அறிஞர்களின் சிறந்த அரசியல், சமூக, பொருளாதார ஆய்வுகள் ஆங்கிலத்தில் நூல் வடிவம் பெற்றுள்ளன. தென்னிலங்கை அரசியல், அரசியல் தலைவர்கள்,பெளத்தம், சிங்கள சமூகத்தின் வாழ்வியல் கோலங்கள், சிங்கள தேசியவாதம் போன்ற பல்வேறு சமூகவியல் சார்ந்த புலமை ஆய்வுகள் தென்னிலங்கை அறிஞர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கையில் ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த அறிவியல் கருவூலங்களைத் தமிழ் வாசகர்களுக்குத் திறந்துகாட்டும் பெரும் பணியைத் தவமே போல் செய்துவருபவர் யோகி க.சண்முகலிங்கம் ஆவார். அறிவுத்தேடல் கொண்ட தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும் பொக்கிஷம் அவர். ஆழ்ந்த தேடல், அயராத வாசிப்பு, நுட்பமான கிரகிப்பு, பல்துறை ஞானம், எதனையும் சமூகத்தோடு பொருத்திப்பார்த்துப் பரிசீலிக்கும் பாங்கு என்பன சண்முகலிங்கத்தின் தனி முத்திரைகள். பேராதனைப் பல்கலைக்கழகம் உற்பவித்த ஆற்றல்மிக்க அரச நிர்வாகிகளில், அரச பணியோடு தனது சமூக விஞ்ஞான அறிவுப் புலமையையும் சேர்த்தே வளர்த்துக்கொண்ட இப்பெருமகனின் அறிவுலகக்கொடை ஒப்பற்றது. பொருளியல் அறிஞர் குனார் மிர்தால் எழுதிய Asian Drama: An inquiry into the Poverty of Nations என்ற நூலைத் தமிழில் அறிமுகம் செய்த தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன், ஆங்கிலத்திலிருந்து அரிய நூல்களை, கட்டுரைகளைத் தமிழில் லாவகமாகத் தரும் பேராற்றலை நான் வியந்து பார்த்திருக்கிறேன். சண்முகலிங்கம் ஈழத்தின் சிவராமன் ஆகப் போற்றத்தக்கவர். சண்முகலிங்கம் இனவரைவியல், சமூகவியல், அரசறிவியல், பொருளாதாரம், மெய்யியல் சார்ந்த பல்வேறு துறைகளில் பரந்தும் ஆழ்ந்தும் தொடர்ந்து வாசித்து வருபவர். அவர் தமிழில் தந்திருக்கும் இருபதுக்கும் அதிகமான நூல்கள் இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் உசாத்துணை நூல்களாகச் சிறப்புப் பெறுவன. பட்டப்பின் படிப்பை மேற்கொள்ளும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சண்முகலிங்கத்தின் நூல்கள் இருள் வெளியில் கைவிளக்காக அறிவுப் பயணத்தில் ஒளி பாய்ச்சுகிறது.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு சிந்தனை முறைமையாக வகைப்படுத்தத் தக்கது.மொழிபெயர்ப்பாளன் சிருஷ்டிக் கலைஞன் ஆகிறான். தான் மொழிபெயர்த்து வழங்கும் மொழியின் செழுமைக்கு அவனே ஊட்டம் சேர்க்கிறான்.மொழிபெயர்ப்பு இல்லையானால் பல மேற்றிசைச் செல்வங்களை வாசித்துப் பயன்பெறும் நிலையை நாம் ஒருபோதும் பெற்றிருக்கமாட்டோம். இந்த முக்கிய அறிவுப்பின்னலின் வைரம் பாய்ந்த கண்ணியாக சண்முகலிங்கம் திகழ்கிறார். தனது மொழியாக்கத்தினை ‘மீள எடுத்துச் சொல்லுதல்’ என்று சண்முகலிங்கம் வரையறை செய்கிறார். சுருக்கித் தருதல், தழுவி எழுதுதல், சிக்கலான கருத்துகளை எளிமைப்படுத்திக்கூறுதல்,விளக்கி உரைத்தல், இடையிடையே எனது கருத்துகளைக் கூறுதல் என்று தனது மொழியாக்கத்தின் கூறுகளை விபரிக்கிறார்.
நமது அரச கருமமொழித் திணைக்கள மொழிபெயர்ப்புகள் பல வாசகனுக்குத் தொந்தரவு தருபவை. மொழியாக்கத்திற்கு அவர்கள் கைக்கொண்ட கிரந்த எழுத்துகள் தவிர்ந்த தூய தமிழ் எழுத்துநடை மாணாக்கருக்கு பெருஞ் சிரமத்தைத் தந்தன. அந்த மொழியாக்கங்கள் வாசகருடன் நேச உறவு கொள்ளவில்லை. மொழிபெயர்ப்பில் சிறந்த அறிஞர்கள் ஈடுபட்டனரெனினும், மொழிபெயர்ப்புகள் வரண்டதாய், வாசித்தறிய இயலாதனவாகவே அமைந்தன.
அவரது மொழியாக்கம் எளிமையாக அமைகிறது. வாசகனைத் தோளில் கைபோட்டு அழைத்துச் செல்லும் லாவகம் அது. குறுகிய அளவில் தனது எழுத்துப் பரப்பை வரையறுத்துக்கொள்கிறார். அசாத்தியமான பெரிய நூல்களை, மிக நுட்பமான ஆய்வேடுகளை அவர் அறிமுகம் செய்கிறார். சில நூல்களை அறிமுகப்படுத்துவதென்பது மலைப்பூட்டுவது. சண்முகலிங்கம் இந்த சவாலை எளிதாக எதிர்கொள்கிறார். அவரது பரந்த வாசிப்பும், பேசும் பொருள் குறித்த தெளிவும் அதற்குப் பெருந் துணை புரிகின்றன. நெஞ்சினில் ஒளியிருப்பதால், வார்த்தையில் -எழுத்தில் வெளிப்படும் ஒளிச்சிதறல் அது. விரிந்த கட்டுரையினை அவர் அளவாகச் சுருக்கித் தருகிறார்.
மு.நித்தியானந்தன்