பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்க முடியாத பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்பில் ஆராய்ந்து, சம்பளத்தை அதிகரிக்க முடியாத நிறுவனம் நட்டத்தில் இருப்பதாக இருப்பின், அதற்கான நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் நியமிக்கப்பட்ட குழுக்கள், 22 அரச தோட்ட நிறுவனங்களை ஆராய்ந்து, அந்தந்த நிறுவனங்கள் உண்மையில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனவா?, அப்படியானால், என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? அந்த பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பாக சம்பளம் வழங்க முடியாத அளவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகம் பலவீனமாக இருந்தால், அந்த நிறுவனங்களை அரசு பொறுப்பேற்று முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும்.
நிறுவனங்களினூடாக ஊழியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் சேவையாற்ற முடியாவிடின் தோட்டக் கம்பனிகளை திறமையாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கடந்த 21ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 1,700 ரூபாவாக உயர்த்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் முதலாம் திகதி அறிவித்தார். இதன்படி தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1,350 ரூபாயாகவும் உற்பத்தித்திறன் அடிப்படையில் 350 ரூபாயாகவும் அதிகரிக்கப்படும்.