ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராறாஹிம் ரைசி மே 19ஆம் திகதி ஈரான் மற்றும் அஜர்பைஜான் எல்லையில் நிர்மாணிக்கப்பட்ட அணையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தார். அந்த அணை திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியும் அவரது தரப்பினரும் திரும்பிக் கொண்டிருந்த போது அவர் பயணித்த ஹெலிகொப்டர் வர்சாகான் என்ற பகுதியில் தரையிறங்க முற்பட்ட வேளை காணாமல் போயிருந்தது.
அந்நாட்டின் அனைத்து பாதுகாப்புத் துறையினரும் மேற்கொண்ட பெரும் முயற்சியின் பின்னர் விபத்து இடம்பெற்ற இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விடத்தைச் சோதனையிட்ட போது ஈரான் ஜனாதிபதி, ஈரான் வெளிநாட்டமைச்சர் மற்றும் அந்த ஹெலியில் பயணித்த அனைவரும் ஹெலியுடன் சேர்ந்து தீயில் கருகிப் போயிருந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது. இதில் ஈரான் ஜனாதிபதியும் ஏனைய குழுவினரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தியை உலகமெங்கும் ஊடகங்கள் ஒளிபரப்பியதையடுத்து இலங்கையைச் சேர்ந்த கையிந்து மிகவும் மனவேதனைக்குள்ளாகினான். அந்த வேதனைக்கு காரணம் கடந்த 24ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியை மத்தள விமான நிலையத்தில் சிங்கள முறையில் வெற்றிலை கொடுத்து ஆயுபோவன் எனக் கூறி வரவேற்றது இந்த கையிந்துதான்.
நாம் தினகரனுக்காக கையிந்துவைத் தேடி அவர் வசிக்கும் எம்பிலிப்பிட்டி புதிய நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தை நோக்கிச் சென்றோம். நாம் அவரது வீட்டை அடைந்த போது அவரது தந்தை தொழிலுக்குச் சென்றிருந்ததோடு, தாய் இரு சகோதரர்களுடன் பாட்டியின் வீட்டில் இருந்தார். அழகிய புன்னகையுடன் எம்மை வரவேற்ற கையிந்து இவ்வாறு தனது கதையைக் கூற ஆரம்பித்தார்.
“எனது தந்தை இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே இவ்வாறு ஒரு வரவேற்பு நிகழ்வு இடம்பெற உள்ளதாக என்னிடம் கூறினார். எனினும் ஈரான் ஜனாதிபதியை வரவேற்கப் போவது யார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அதன் பின்னர் அடுத்த நாள் நீங்கள் வரவேற்கப் போவது ஈரான் நாட்டு ஜனாதிபதியையே என என்னிடம் தந்தை கூறியபோது எனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. எனக்கு ஒப்படைக்கப்பட்ட பணி ஈரான் ஜனாதிபதி மத்தளை விமான நிலையத்திற்கு வந்ததும் விமானத்திலிருந்து இறங்கும் போது வெற்றிலை கொடுத்து சிங்கள பாரம்பரிய முறையில் ஆயுபோவன் எனக் கூறி கும்பிட்டு அவரை வரவேற்பதாகும்.
அன்று நான் அவ்வாறே ஈரான் ஜனாதிபதியை வெற்றிலை கொடுத்து ஆயுபோவன் எனக் கூறி வரவேற்றேன். எனினும் ஈரான் ஜனாதிபதி எனது தலையைத் தடவி என் நெற்றியில் முத்தமிடுவார் என நான் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அன்று அவர் என் நெற்றியில் முத்தமிட்ட போது அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அதேபோன்று அது எனக்கு அவர் மீது மிகுந்த பாசத்தையும் ஏற்படுத்தியது. அது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு சந்தர்ப்பம். அந்நேரம் ஈரான் ஜனாதிபதி அவரது மொழியில் என்னை வாழ்த்தினார். அவர் கூறிய எதுவும் எனக்கு விளங்கவில்லை. அது ஒரு புதுமையான மொழி. அவர் அன்று என்னை என்ன கூறி வாழ்த்தினார் என இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது. அந்த மொழியை எனக்கு மொழி பெயர்த்துக் கூற அவ்விடத்தில் ஒருவரும் இருக்கவில்லை. அனைத்துமே விரைவாகவே நடைபெற்று முடிந்தன. எனினும் அவர் மிகவும் அன்புடன் கூறியதால் அவர் என்னை வாழ்த்திப் பிராத்தித்துள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
நான் பாடசாலைக்குச் சென்ற போது எனது வகுப்பு நண்பர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு நிறைய விஷயங்களைக் கேட்டார்கள். எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பற்றி மிகுந்த அக்கறையுடனும், மிகுந்த விருப்பத்துடனும் அவர்கள் என்னிடம் பேசினார்கள். எனினும் இவ்வாறான ஒரு விடயத்தைத் திடீரெனச் செய்ய வேண்டியிருந்ததை நான் கல்வி கற்கும் எம்பிலிப்பிட்டி ஸ்ரீபோதிராஜ வித்தியாலய அதிபரோ, எனது வகுப்பாசிரியையோ அறிந்திருக்கவில்லை. காரணம் அது ஈரான் ஜனாதிபதியின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதனாலாகும். இதைப் பற்றி எவரிடத்திலும் கூற வேண்டாம் என என்னிடம் என் தந்தை கூறியிருந்தார். எனவேதான் நான் இதைப் பற்றி யாரிடத்திலும் எதுவும் கூறவில்லை. இந்த நிகழ்வைத் தொலைக்காட்சியில் பார்த்து அதில் நான் இருப்பதைக் கண்ட எனது நண்பர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தார்கள். எனது உறவினர்களும் கூட அதனைப் பார்த்து அதைப் பற்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசினார்கள். இவ்வாறான ஒரு நாட்டுத் தலைவரை வரவேற்கக் கிடைப்பது மிகவும் அதிர்ஷ்டமானது என்றும் கூறினார்கள். நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன் என எனது மாமியும் கூறினார்.
ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி மரணித்து விட்டார் என்பதை பெரும்பாலானோர் இரண்டு நாட்களின் பின்னர்தான் அறிந்து கொண்டனர். அன்று திங்கட்கிழமை என்பதால் நான் பாடசாலைக்குச் சென்றிருந்தேன். எனவே இதைப் பற்றி என்னால் அறிந்து கொள்ள முடியாமல் போனது. நான் பாடசாலையிலிருந்து வீடு வந்ததும், பாட்டி, எனது தந்தையின் தாய், எனக்கு இதைப் பற்றி கூறினார். மகனே, நீங்கள் மத்தளை விமான நிலையத்தில் மலர்மாலை அணிவித்து வரவேற்ற ஈரான் ஜனாதிபதி அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்து விட்டார் எனக் கூறினார். எனக்கு தாங்க முடியாத கவலை ஏற்பட்டது. அவர் மத்தளை விமான நிலையத்தில் வைத்து எனது தலையைத் தடவி என் நெற்றியில் அன்புடன் முத்தமிட்டது எனக்கு நினைவிற்கு வந்தது. இப்படிப்பட்ட ஒருவருக்கு ஏன் இவ்வாறு நேர்ந்தது என்று எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்னையறியாமலேயே என் கண்களில் கண்ணீர் பெருகியது. நான் எமது மதத்தின்படி அவருக்காக மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன்” என்று நீண்ட பெருமூச்சுடன் பேச்சை முடித்தார் கையிந்து.
கையிந்துவின் கதையை வேறு திசைக்குத் திருப்பினோம். கையிந்து எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி கற்கிறார். இரண்டு சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் கையிந்து சித்னத இரண்டாவது பிள்ளையாகும். இவரது மூத்த சகோதரர் யோனால் சித்னத 08ஆம் வகுப்பிலும் கற்று வருகின்றார். இளைய சகோதரர் ரித்திர நிம்னத மூன்றாம் தரத்தில் கல்வி கற்கிறார். பெற்றோர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கையிந்து உள்ளிட்ட இரண்டு சகோதரர்களின் பெரும்பாலான வேலைகளை பாட்டியே செய்து வருகின்றார்.
அவளது பெயர் பிரேமா ஜயசேகரவாகும். “எனது மூன்று பிள்ளைகளும் என்னுடன் மிகுந்த பாசமாக இருப்பார்கள்.நானும் அவர்களுடன் என் உயிரைப் போன்று அன்பு வைத்துள்ளேன். பாடசாலை சென்று விட்டால் அவர்கள் வீடு வரும் வரைக்கும் எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அவர்கள் பாடசாலையிலிருந்து வந்து ஆடைகளை மாற்றி உடல் கழுவிக் கொண்டு என்னிடம் வந்து உணவு ஊட்டச் சொல்லுவார்கள். பின்னர் விளையாடுவார்கள். பாடங்கள் படிக்கும் போது என்னிடம் வந்து சந்தேகங்களைக் கேட்பார்கள். மூவரும் படிப்பில் கெட்டிக்காரர்கள். மூவரும் எனது அரவணைப்பிலேதான் இருப்பார்கள். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி மரணித்த செய்தி வாசிக்கப்படுவதை நான் கண்டேன். இதனை நான் சின்ன மகனிடம் கூறியபோது அவர் மிகுந்த கவலைக்குள்ளானார். அவரது கண்கள் கண்ணீர் சிந்தியதை நான் கண்டேன். அதனைப் பார்த்து என் கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்தது. இவ்வாறான ஒரு திடீர் விபத்து அவருக்கு ஏற்படும் என என் மகன் கனவில்கூட நினைத்தும் இருக்க மாட்டார்” என்றார் அந்த தாய். “கல்வியில் எனக்குப் பிடித்த பாடம் கணிதமாகும். நான் 2023ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 153 புள்ளிகளைப் பெற்றேன். நான் எதிர்காலத்தில் மின்பொறியியலாளராக வர வேண்டும் என ஆசைப்படுகின்றேன். மின்சார துறையில் முன்னேறுவதே எனது எதிர்பார்ப்பாகும். அதேபோன்று ஆங்கிலப் பாடத்திலும், நடனத்திலும் எனக்கு விருப்பம் அதிகம் ” என கையிந்து கூறினார்.
ரசிக கொட்டுதுரகே தமிழில் எம். எஸ். முஸப்பிர்