அமெரிக்காவின் அறிவுறுத்தலையும் மீறி ரபா மீது இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. அதன் விளைவாக அமெரிக்க-இஸ்ரேல் உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், புதிதாக ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், யுத்ததாங்கிகளுக்குத் தேவையான 700 மில்லியன் டொலர் பெறுமதியான வெடிமருந்துகளும், 500 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ வாகனங்களும் 60 மில்லியன் டொலர் பெறுமதியான மோட்டார் குண்டுகளும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க வெளிவிவகாரத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதேவேளை இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கட்டாயப்படுத்தும் இஸ்ரேலுக்கான பாதுகாப்பு, உதவி, ஆதரவுச் சட்டமூலம் 222/187 வாக்குகளால் அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த 16ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்டது. குடியரசுக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட இச் சட்டமூலத்துக்கு பைடனின் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த 16பேரும் ஆதரவளித்துள்ளனர்.
ஹமாஸை முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்காகவும் அவர்களின் பிடியிலுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதற்காகவும் ரபா மீது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக கடந்த பெப்ரவரி மாதம் (2024) பிற்பகுதி முதல் இஸ்ரேல் கூறி வருகிறது. அதற்கு இஸ்ரேலின் நட்பு நாடுகளான அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றன.
இஸ்ரேல், காஸா மீது யுத்தத்தை ஆரம்பித்தது முதல் இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பகுதியினர் ரபாவில் தங்கியுள்ளனர். ரபாவே பாதுகாப்பான பிரதேசம் என இஸ்ரேலும் கூறிவந்தது.
இந்நிலையில் 23 இலட்சம் மக்களைக் கொண்ட காஸாவில் 14 இலட்சம் மக்கள் தங்கியுள்ள இடமாகியது ரபா. அதனால் குறுகிய நிலப்பரப்பில் அதிக மக்கள் தங்கியுள்ள ரபா மீது தரைவழி யுத்தத்தை முன்னெடுத்தால் அதிக உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் அது வழிவகுக்கும். அதனைத் தடுத்து நிறுத்தவும், அங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி நிலையை சரிசெய்யவும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ரபா மீதான யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு உயர்பிரதிநிதி ஜோசப் பொரல், ரபா மீதான யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
காஸாவில் அதிகளவில் பொதுமக்கள் உயிரிழப்பதைத் தவிர்க்கவென அமெரிக்காவின் உள்ளேயும் வெளிநாடுகளில் இருந்தும் அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
அதனால் ரபா மீது முழு அளவிலான இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்கும் வகையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் கிழக்கு ரபாவிலுள்ள ஒரு இலட்சம் மக்களை இடம்பெயர்ந்து மவாசி அகதி முகாம் பகுதிக்கு செல்லுமாறு கடந்த 06 ஆம் திகதி (மே மாதம்) திடீரென அறிவுறுத்தியது இஸ்ரேல். அதன் விளைவாக யுத்த அச்சத்தினால் மக்கள் வெளியேற ஆரம்பித்தனர்.
இஸ்ரேலின் இவ்வறிவிப்பு வெளியான சொற்ப மணித்தியாலயங்களில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவோடு தொலைபசி ஊடாக தொடர்பு கொண்ட அமெரிக்க ஜனாதிபதி, ரபா மீதான யுத்தத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இப்படையெடுப்பு, போரை நிறுத்துவதற்கான வாய்ப்பையும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளையும் பாதிக்கும் என்று ஜனாதிபதி பைடன் அஞ்சுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் மெத்திவ் மில்லர் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்த பைடன், ‘காஸாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் ஒரு திட்டமிட்ட படையெடுப்பை மேற்கொண்டால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டோம்’ என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி இப்பகிரங்க அச்சுறுத்தலை வெளியிட்ட சில நாட்களுக்குள் அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியமை தொடர்பான அறிக்கையும் வெளியானது.
அந்த அறிக்கையில், அமெரிக்க தயாரித்த ஆயுதங்களை இஸ்ரேல் கணிசமான அளவில் நம்பியிருக்கிறது. அதனால் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு முரணாக அந்த ஆயுதங்கள் பயன்படுத்தி இருக்கலாம். குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தணிக்க நிறுவப்பட்ட சிறந்த நடைமுறைகளுடன் முரண்பட்டு அவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதனால் காஸா மீதான போரின் போது இஸ்ரேலுக்கு வழங்கிய ஆயுதங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை மதிப்பீடு செய்வது நியாயமானது என்று அமெரிக்கா முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
பைடனின் அறிவுறுத்தலையோ இந்த அறிக்கையையோ கருத்தில் கொள்ளாத இஸ்ரேல் 07 ஆம் திகதி படை நடவடிக்கையை முன்னெடுத்து ரபா கடவையின் காஸாப் பகுதியைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கத் தயார் நிலையில் இருந்த 2,000 இறாத்தல் நிறை கொண்ட 1800 குண்டுகளையும் 500 இறாத்தல் நிறை கொண்ட 1700 குண்டுகளையும் உடனடியாக நிறுத்தியது. அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளும் என இஸ்ரேல் சிறிதளவேனும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் நீண்ட கால நட்பு நாடுகள் மாத்திரமல்லாமல் பைடனுக்கும் நெதன்யாகுக்கும் இடையில் 50 வருட நெருங்கிய நட்புறவு உள்ளது. அப்படி இருந்தும் அவரது அறிவுத்தலை நெதன்யாகு கருத்தில் கொள்ளாமல் ரபா மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததோடு, ‘இது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை’ என்றார்.
ஆனால் அமெரிக்காவின் இந்நடவடிக்கையில் அதிருப்தியடைந்துள்ள இஸ்ரேல் பிரதமர், ‘நாம் தனித்து நிற்க வேண்டும் என்றால் தனித்து நிற்போம். தேவைப்பட்டால் வெறும் கைகளால் கூட சண்டையிடுவோம்’ என்றார்.
ரபா மீது யுத்தத்தை முன்னெடுப்பதை தடுத்த நிறுத்த அமெரிக்க இந்நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் அதனை இஸ்ரேல் தவறான கண்ணோடு நோக்குவது சர்வதேச அவதானிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2,000 இறாத்தல் நிறைகொண்ட குண்டு மிகவும் அழிவுகரமான ஆயுதங்களில் ஒன்றாகும். ஹமாஸை ஒழிக்க இத்தகைய ஆயுதங்கள் அவசியம் என்று இஸ்ரேலிய இராணுவம் வாதிடுகிறது. அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களை மக்கள் நெருக்கமாக வாழும் நகர அமைப்புகளின் மீது பயன்படுத்தும்போது, காஸாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டது போல மோசமான விளைவுகளை அது ஏற்படுத்தும் என்ற கவலை அமெரிக்காவுக்கு உள்ளது. அதுவும் இவ்வாறான அழிவுகர ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்தியமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக அமெரிக்க தரப்பினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஆயுதங்களையே பெரும்பாலும் நம்பியுள்ள இஸ்ரேல், பைடனின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாததால் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கவிருந்த அழிவுகர ஆயுதங்களின் ஒரு தொகுதியை அமெரிக்கா நிறுத்தியது. இந்நிலையில் ரபாவின் மேலும் சில பிரதேசங்களில் இருந்த மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியது. அதனால் இற்றைவரையும் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரபாவில் இருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா. நிறுவனங்கள், அந்த மக்கள் உணவு, தண்ணீர், தங்குமிடவசதி, அடிப்படை சுகாதார வசதிகள் தொடர்பான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
அழிவுகர ஆயுதங்களின் ஒரு தொகுதியின் ஏற்றுமதியை நிறுத்தியமை அமெரிக்க-இஸ்ரேல் நட்புறவில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்பட்டாலும், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் ஜக் லியூ, அமெரிக்க-இஸ்ரேல் உறவில் எவ்வித அடிப்படை மாற்றமும் ஏற்படவில்லை’ என்றுள்ளார்.
ரபா மீது முழு அளவிலான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் சூழலில் புதிதாக ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதத் தளபாடங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது. அதேநேரம் அமெரிக்க உயரதிகாரியொருவர், அழிவுகர குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டாலும், 26 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவியை எவ்விதத்திலும் பாதிக்காது என்றுள்ளார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுல்லிவன், காஸா மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, வார இறுதியில் இஸ்ரேலுக்கும் சவுதிக்கும் பயணமாகவும் உள்ளார்.
மர்லின் மரிக்கார்