காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை கப்பல் சேவை ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் கப்பல் சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதாக நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை திகதி தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுவதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து அந்த தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
“நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை இயக்க முடியவில்லை. 13ஆம், 17ஆம், 19ஆம், திகதிகளில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கும் என 03 முறை திகதி அறிவித்தும் கப்பலை இயக்க முடியவில்லை.
பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது. அதனை சரி செய்தால் மட்டுமே கப்பல் போக்குவரத்துக் கழகம் உரிய அனுமதி வழங்கும்.
தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதிமுறைகள், காலநிலை மாற்றங்களால் மறு திகதி அறிவிக்கப்படாமல் கப்பல் சேவை ஒத்தி வைக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.