இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்க்கடன் நிறைவேற்றுதலும் நேற்று நடைபெற்றன.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலை போராட்டத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் நேற்றுக் காலை 7.30 மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியிலுள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்றது.
இதில் உறவுகளை இழந்த பெருந்திரளான மக்கள், கட்சி பேதமின்றியும் சாதி, மத பேதமின்றியும் சென்று இறந்தவர்களின் பெயர் கூறி பிதிர்க்கடன் நிறைவேற்றினர்.
இதனை தொடர்ந்து தமிழின படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.