போலி மருத்துவர்களால் மக்களின் உடல் நலத்துக்கு ஏற்படும் கடுமையான சுகாதார அச்சுறுத்தலை கட்டுப்படுத்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டம் (Drug Regulation Act) மற்றும் குற்றவியல் தண்டனை சட்ட கோவை (Penal Code Act) ஆகியவற்றில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 பேர் போலியாக தம்மை மருத்துவர்களாக அடையாளம் காட்டிக்கொள்வதாகவும், அவர்களால் மக்களின் ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியது.
இவ்வாறான போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது அவர்களுக்கு சுமார் 3,000 ரூபா அபராதம் விதிக்கப்படுவதாகவும், அதனால் அவர்கள் அபராதத்தை செலுத்தி விட்டு மீண்டும் அதே நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இதன் காரணமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பல சந்தர்ப்பங்களில் முன்வைத்த யோசனைகளின்படி, அபராதத் தொகையை கணிசமானளவு அதிகரிக்கலாமென்றும், கடுமையான சிறைத்தண்டனைகள் விதிக்கப்படலாமென்றும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டம் மற்றும் தண்டனை சட்ட கோவையில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது ஆரம்பக்கட்ட பணி நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்படுமெனவும், சட்ட நடவடிக்கையின் போது இதற்கான தரவு முறைமையையும் இலங்கை பொலிஸார் தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமது தொழிற்சங்கம் அண்மையில் இலங்கை பொலிஸாருடன் விசேட கலந்துரையாடலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் மருத்துவச் சபையின் விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களின்படி, சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு, போலி மருத்துவர்களுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் வகையில் தொடர்புடைய இரண்டு சட்டங்களும் திருத்தப்படும்.
நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் அது தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களும் இந்த ஆண்டு இது தொடர்பில் உரிய அளவுகோல்களை (Criteria) வழங்கவுள்ளன. வெளிநாடுகளிலுள்ள மருத்துவர்களின் பதிவு எண், இறந்த மருத்துவர்களின் எண், போலி எண்கள் போன்றவற்றையும் சிலர் பயன்படுத்தியிருப்பதும், இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சுகாதாரத்துறையுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.