“நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பாதுகாப்பதற்கு எவ்வித அச்சமுமின்றி தன்னுயிரை உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு நாம் வழங்கும் உயர் கௌரவம் நீடித்த நல்லிணக்கமொன்றே” என வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
குருநாகல் நகரில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற 15ஆவது தேசிய இராணுவ வீரர்கள் நினைவுதின வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பாதுகாப்பதற்கும் அச்சமின்றி நிம்மதியான முறையில் நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இராணுவ வீரர்கள் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளதோடு மேலும் பலர் அங்கவீனமுற்றுள்ளனர். இவ்வாறான நிலையில் நாட்டின் அனைத்து மக்களும் ஒரே குடும்பமாக பிளவு மற்றும் பேதம் மறந்து ஒன்றிணைந்து நல்லிணக்கத்துடன் வாழ்வதுடன், முன்னைய இருண்ட யுகம் மீண்டும் ஏற்படாத வகையில் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படுவதே இராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் மற்றும் ஏனைய தியாகங்களை கௌரவிக்கும் வகையில் நம்மால் செய்யக் கூடிய ஒரே கைமாறாகும்.
உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களினது குடும்பங்களின் நலனோம்புகைக்காக காணிகளை பகிர்ந்தளித்தல், வீட்டுத் திட்டங்களை நிர்மாணித்தல், படை வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவி வழங்குதல் போன்ற விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.
அதே வழியை நானும் பின்பற்றி வடமேல் மாகாணத்தில் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன் சார்ந்து செய்யக்கூடிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.
தமிழ் மக்கள் தங்களின் இறந்த மூதாதையர்களை கடவுளாக பாவனை செய்து வணக்கம் செலுத்தும் மரபை பேணி வருகின்றனர். தமக்கான சுதந்திரமான வாழ்வுக்காக போராடி போரில் வீரச்சாவை தழுவிய தமது உறவுகளை நினைவு கொள்ளும் இவர்கள், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரால் அதிக இடையூறுகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாக அமையும். இந்நிலையில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை எல்லோருக்கும் சமமாக வழங்கப்படல் வேண்டும் என்பது நோக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்.