இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (18) இந்தோனேசியா பயணமானார்.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் இந்தோனேசியாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
‘கூட்டு செழுமைக்கான நீர்’ என்ற தொனிப்பொருளில் 10ஆவது உலக நீர் மாநாடு நேற்று (18) ஆரம்பமாகியதுடன், 20ஆம் திகதிவரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் நாளையதினம் (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தோனேசிய ஜனாதிபதி உட்பட அந்நாட்டின் பல உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதியுடனான விஜயத்தில் ஜனாதிபதி செயலக மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்றும் இணைந்து கொண்டுள்ளது.