கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பிரதான நகர்ப் பிரதேசங்களில் திகில் நிறைந்த காட்சிகளை நாம் அவ்வப்போது காணக்கூடியதாக உள்ளது. ‘சைலன்ஸர்’ மூடி திறந்து விடப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள்கள் பெரும் ஒலி எழுப்பியவாறு அசுர வேகத்தில் தறிகெட்டு ஓடுவதை சாதாரண காட்சியாகவே நாம் அடிக்கடி காணலாம்.
அவ்வாறு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவர். ஒரு மோட்டார் சைக்கிள் மாத்திரமன்றி, சில வேளைகளில் பல மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு அணிவகுத்து பெரும் ஒலி எழுப்பியவாறு செல்வதைக் காண முடிகின்றது. வீதியில் அவ்வேளையில் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் காட்சியாக இந்நிகழ்வு அமைந்து விடுகின்றது.
மோட்டார் சைக்கிளில் ‘சைலன்ஸர்’ மூடிப்பகுதியை அவர்கள் அகற்றுவதற்குக் காரணம் பெரும் ஒலி எழுப்ப வேண்டும் என்பதற்காகவாகும். அதாவது அனைவரது கவனத்தையும் தம்பால் ஈர்க்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமன்றி சில கார்களும் நகர்ப் பகுதிகளில் இவ்வாறுதான் பெரும் ஒலி எழுப்பியபடி தாறுமாறான வேகத்துடன் ஓடுகின்றன. அந்தப் பேரொலி மக்களுக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது. அதேவேளை விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயமும் உண்டாகின்றது. வீதியில் பயணிக்கும் மற்றைய வாகனங்களையோ அல்லது வீதிப்போக்குவரத்து விதிமுறைகளையோ அலட்சியம் செய்தவாறு செல்கின்ற இவ்வாகனங்களை பொலிசார் துரத்திச் சென்று பிடிப்பதென்பது இயலாத காரியம்.
வீதியோரம் போக்குவரத்துப் பொலிசார் நிற்கின்ற வேளையிலும் கூட தறிகெட்டு ஓடும் வாகனங்களை எம்மால் காணவே முடிகின்றது.
இச்செயல்கள் வாலிபவயது குறும்புகளாக இருக்கலாம். அல்லது மனோவியாதியின் ஆரம்பமாக இருக்கலாம். எவ்வாறாக இருப்பினும், இவ்வாறு சட்டவிதிகளை மீறுவோரை கைது செய்து நீதியின் முன்னால் நிறுத்த வேண்டியது போக்குவரத்துப் பொலிசாரின் கடமையாகின்றது. பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்ற விஷமிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியவர்கள் பொலிசாரே ஆவர்.
கொழும்பில் சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறான மோட்டார் சைக்கிளோட்டிகள் சிலரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததாக செய்தி வெளியாகியிருந்தது. இவ்வாறான நடவடிக்கையை பொலிசார் மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் வேண்டுகோள் ஆகும்.
ஒலிமாசு என்பதும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். அதேவேளை வீதியில் நடமாடுவோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களைச் செலுத்துவதும் குற்றமாகும். இவ்வாறான ஆபத்துப் பேர்வழிகள் குறித்து போக்குவரத்துப் பொலிசார் விசேட கவனம் செலுத்துவது அவசியமாகும்.