இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில், “Being a Teacher with Disabilities: Perspectives, Practices, and Opportunities.” அதாவது ‘மாற்றுத்திறனாளி ஆசிரியராக இருப்பது: முன்னோக்குகள், நடைமுறைகள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் சிறந்ததொரு படைப்பை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.
இந்த விரிவான அறிக்கையானது, இலங்கை மற்றும் ஆராய்ச்சி நடத்தப்பட்ட ஏனைய நான்கு நாடுகளில் உள்ள கல்வி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள், கொள்கைகள் மற்றும் ஆதரவு வலையமைப்புகள் தொடர்பில் ஆராய்கிறது. விரிவான இந்த ஆராய்ச்சி அறிக்கை, இலங்கை, பிரேசில், ஜோர்டான், ருவாண்டா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில், தேசிய கல்வி முறைகளில் ஆங்கில மொழி மற்றும் பிற பாடங்களுக்கான மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் வாழ்க்கை அனுபவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கண்ணுக்குப் புலப்படும் அல்லது புலப்படாத குறைபாடுகளை உடையவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட 25 ஆசிரியர்களுடனான நேர்காணல்களில் இருந்து பெறப்பட்ட முதன்மைத் தரவுகளின் அடிப்படையில், அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைப் பணியை வழிநடத்தும் முறை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
இலங்கையின் ஆசிரியர் கதைகளில் இருந்து வெளிப்படும் ஒரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் ஒரே பள்ளியில் நீண்ட காலம் பணிபுரிந்த பிறகும், சிலருக்கு கால அட்டவணைகள் ஒதுக்கப்படவில்லை, அதாவது அதிகாரப்பூர்வமாக கற்பித்தல் பொறுப்புகள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்பதாகும்.