அமெரிக்காவின் ஆலோசனைகள், அறிவுரைகளை மீறி ரபா மீது தரைவழி இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. அத்தோடு எகிப்துக்கான ரபா கடவையின் காஸா பகுதியையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ள அமெரிக்கா, நவீன ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளது.
23 இலட்சம் பலஸ்தீன மக்களைக் கொண்ட காஸா மீது கடந்த 08 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் யுத்தத்தினால் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும், 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளனர். உட்கட்டமைப்பு வசதிகள், குடியிருப்புக்கள், முகாம்கள் உள்ளிட்ட அனைத்தும் அழிவுற்றும் சேதமடைந்துமுள்ளன. இடம்பெயர்வுக்கு உள்ளாகியுள்ள மக்களில் சுமார் 14 இலட்சம் பேர் தங்கியுள்ள பிரதேசமாக மாறியுள்ளது ரபா. அவர்கள் அங்குள்ள முகாம்களிலும் கூடாரங்களிலும் தங்கியுள்ளனர். ரபா ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் பெருந்தொகையான மக்கள் தங்கியுள்ள பிரதேசமாகியுள்ளது.
வடக்கு காஸாவில் தரைவழி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது முதல் எகிப்து எல்லையிலுள்ள ரபாவுக்கு இடம்பெயருமாறும் அதுவே பாதுகாப்பான பகுதி எனவும் இஸ்ரேல் கூறி வந்தது. அதற்கேற்ப மக்களும் கட்டம் கட்டமாக ரபாவுக்கு இடம்பெயர்ந்தனர்.
ஆனால் அங்குள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த திங்களன்று (06.05.2024) அறிவுறுத்திய இஸ்ரேல் மறுநாள் அதிகாலையில் ரபா மீதான யுத்தத்தை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் (2023) ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதல் மேற்கொண்டது. அதற்கு பதிலடி கொடுப்பதெனவும் அவர்கள் பிடித்துச் சென்றுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதெனவும் குறிப்பிட்டு காஸா மீது இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்தது. ஆன போதிலும், கடந்த நவம்பர் இறுதிப்பகுதியில் நடைமுறையில் இருந்த இஸ்ரேல்_-ஹமாஸ் கைதிகள் பரிமாற்ற யுத்தநிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளைத் தவிர யுத்தத்தின ஊடாக பணயக் கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டதாக இல்லை.
இவ்வாறான நிலையில், கடந்த (2024) பெப்ரவரி இறுதிப்பகுதியில், ரபா மீது யுத்தத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அதன் ஊடாக ஹமாஸை முற்றாக ஒழித்துக்கட்டி தமது பணயக்கைதிகளை விடுவிக்கப் போவதாகவும் இஸ்ரேல் அறிவித்தது. இடம்பெயர்ந்துள்ள மக்கள் செறிவாகத் தங்கியுள்ள ரபா மீது யுத்தத்தை முன்னெடுத்தால் உயிரிழப்புக்களும் அழிவுகளும் அதிகளவில் ஏற்படும். அது மனிதாபிமான பேரழிவுக்கு வித்திடும். இதனைக் கருத்தில் கொண்ட அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.
இந்நிலையில் கடந்த மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ரமழான் மாத நோன்புக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் நோன்பு மாதம் கடந்து சென்று மற்றொரு மாதமும் நிறைவடைய உள்ளது. இருந்தும் இருதரப்புக்கும் இடையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்திலும் கட்டாரிலும் மாறிமாறி இடம்பெற்று வருகின்றன.
அதனால் தரைவழி யுத்தத்தைத் தாமதப்படுத்தி வந்த இஸ்ரேல், ரபாவிலுள்ள வீடுகளை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வந்தது. இதன் ஊடாகவும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் இராணுவத்தினர் கடந்த திங்களன்று (06 ஆம் திகதி) காலையில் ஆகாயத்தில் இருந்து துண்டுப்பிரசுரங்களை போட்டும் சமூக ஊடகங்களைப் பாவித்தும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியும், அரபுமொழி ஊடக ஒளிபரப்புக்கள் மூலமும் கிழக்கு ரபா மீது தரைவழி இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருப்பதால் அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென அறிவுறுத்தினர். அவர்கள் வெளியேறுவதற்கான பாதை வரைபடமும் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து ரபா மக்கள் மத்தியிலும் சர்வதேச மட்டத்திலும் கடும் பதற்றநிலை ஏற்பட்டது. மக்கள் சாரிசாரியாக ரபாவை விட்டு வெளியேறலாயினர்.
இச்சமயம் ஹமாஸ், ‘இஸ்ரேலின் இந்நடவடிக்கை மிகப் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றது.
இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் கட்ஸ், ‘ஹமாஸை தோற்கடித்து எமது பணயக்கைதிகளை விடுவிடுப்பதற்காக காஸாவில முன்னெடுக்கப்படும் போர் சரியான இலக்குடன் செல்கிறது’ என்றுள்ளார்.
இச்சமயம் எகிப்து வெளிவிவகார அமைச்சு, ரபா மீதான இஸ்ரேலிய படை நடவடிக்கை மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தலாம். யுத்தநிறுத்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் சூழலில் இப்படை நடவடிக்கையை தவிர்க்குமாறு இஸ்ரேலைக் கேட்டு கொண்டது.
ரபா மீதான யுத்தத்தை உறுதியாக நிராகரித்த சவூதி அரேபியா, மனிதாபிமான நெருக்கடி மேலும் அதிகரிக்கவும் சர்வதேச சமாதான முயற்சிகளைப் பாதிக்கவும் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தடையின்றி மீறப்படுவதற்கும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டது.
‘ரபாவிலுள்ள குடிமக்களை வெளியேற்ற இஸ்ரேல் விடுத்துள்ள உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், தரைவழித் தாக்குதலை விடுத்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் 2728 இலக்க தீர்மானத்தை செயல்படுத்த முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரன், ரபா மீதான தாக்குதல் திட்டத்தை நிராகரிப்பதாகக் குறிப்பிட்டதோடு, எல்லா வழிகள் ஊடாகவும் காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இஸ்ரேல் ரபாவில் இருந்து மக்களை வெளியேற அறிவுறுத்திய சில மணித்தியாலயங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணயக்கைதிகள் பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ரபா மீது இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பதற்கு தமது எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்தியதோடு, ரபா குறித்த தனது தெளிவான நிலைப்பாட்டையும் வலியுறுத்தினார்.
இச்சூழலில் கட்டார், எகிப்து முன்வைத்துள்ள யுத்தநிறுத்த யோசனையை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய உளவுத்துறை அமைச்சர் அப்பாஸ் கமெல் ஆகியோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவித்தார்.
ஹமாஸின் இவ்வறிவிப்பை ரபா மக்கள் அறிந்ததும் அங்குள்ள குவைத் மருத்துவமனைக்கு அருகில் கூடி பெரிதும் வரவேற்று ஆரவாரம் வெளிப்படுத்தினர். ஆனால் யுத்தநிறுத்த யோசனையை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்த சில மணித்தியாலயங்களில் இஸ்ரேல் ரபாவின் கிழக்கு பகுதி மீது படை நடவடிக்கையை ஆரம்பித்தது. அத்தோடு ரபா கடவையின் காஸா பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வந்ததோடு, அங்கு பலஸ்தீன கொடியை இறக்கிவிட்டு இஸ்ரேல் கொடியையும் ஏற்றியது.
ஆனால் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்த இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த இஸ்ரேல், இந்நடவடிக்கை யுத்தநிறுத்த பேச்சுவார்த்தையை பாதிக்காது எனக் குறிப்பிட்டது.
ஆனால் இஸ்ரேலின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நவீன ஆயுதங்களையும் ரவைகளையும் அனுப்பி வைப்பதை நிறுத்தியுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த 2000 இறாத்தல் நிறை கொண்ட 1800 குண்டுகள், 500 இறாத்தல் நிறைகொண்ட 1700 குண்டுகள் மற்றும் ரவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்நடவடிக்கையையிட்டு இஸ்ரேல் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஆனாலும் வெள்ளை மாளிகை பேச்சாளர் karine jean pierre, ரபா கடவையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுள்ளதோடு, அக்கடவையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இக்கடவையை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளமையால் 50 ஆயிரம் கர்ப்பிணிகள் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா நிவாரண நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ரபா கடவையை கைப்பற்றி அதனை இஸ்ரேல் மூடியுள்ள போதிலும் காஸா யுத்தநிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் கெய்ரோவில் இவ்வார முற்பகுதியில் இடம்பெற்றன. அதேநேரம் கிழக்கு ரபாவில் இருந்து சுமார் 80 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா. நிவாரண அமைப்புக்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுமுள்ளன.
மர்லின் மரிக்கார்