தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதால் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னரும் பெருந்தோட்ட நிறுவனங்கள் அதனை வழங்க மறுப்பு தெரிவித்து வருவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானிடம் ஊடகங்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை, தோட்ட தொழிலாளர்களுக்கு 1,200 ரூபா சம்பளம் வழங்கப்படுமென ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த போது, சம்பள உயர்வு வழங்க முடியாதென ஆரம்பத்தில் கம்பனிகள் தெரிவித்தன. கடும் அழுத்தத்துக்கு பின்னரே ஊக்குவிப்பு தொகை மாத்திரம் வழங்க தயாரென அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் தற்போது, அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதையடுத்து வேறு வழியின்றி கம்பனிகள் 1,200 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முன்வந்துள்ளனர். ஒரு வருடகாலமாக ஒரு ரூபா சம்பள உயர்வு கூட வழங்க முடியாதென தெரிவித்த கம்பனிகள், தற்போது 200 ரூபா அதிகரிப்பு வழங்க முன்வந்தமைக்கான காரணம் அரசாங்கத்தால் வர்த்தமானி வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
எனவே கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாதென செந்தில் தொண்டமான் தெரிவித்ததுடன், அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கம்பனி அமுல்படுத்தாவிடின் கம்பனியின் முதன்மை பணிப்பாளர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும்” இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.