கையென்னும் போது விரல்கள் அதில் முக்கியமானவை. விரல்கள் இல்லாமல் ஒரு கையைக் கற்பனை செய்து பாருங்கள். வெறும் மூளியாக, துடுப்புப் போல கையை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? உழைத்தல், உண்ணுதல், எழுதுதல், தூக்குதல், சாத்துதல் எல்லாவற்றிற்கும் கையே பிரதானமென்றால், அக்கையிலுள்ள விரல்களும் பிரதானமானவைதான்!
தளிர்க்கரம், மலர்க்கரம் என்று பெண்களின் கைகளை வர்ணிப்பதெல்லாம் அக் கைகளின் அழகிற்கு அழகு சேர்க்கும் செங்காந்தள் விரல்களை முக்கியமாகக் கொண்டுதான்! ஸ்பரிசத்தை உணர்வதெல்லாம் விரல்களில்லாமல் நடக்காது. அன்பு, காதல், மோகம் எல்லாம் விரல்களின் தொடுகையிலிருந்து தான் ஆரம்பிக்கின்றன.
இக்கட்டுரையில் விரல்களையும், அவற்றில் அமைந்துள்ள ரேகைக் குறிகளையும், அவற்றின் பலாபலன்களையும் பற்றிப் பார்ப்போம்…
ஒரு கையின் கட்டை விரலென்று சொல்லப்படும் பெருவிரல், மற்றெல்லா விரல்களையும் விட முக்கியமானது. மற்ற விரல்கள் நான்கோடும் இணைசேராமல் தனித்து, தனித்தன்மை பெற்று விளங்கும் இது, ஒருவரின் மனஉறுதியை ஆளுமையை. காரியமாற்றும் திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக விளங்குகிறது. இந்த விரலில்லாமல் எந்தக் காரியத்தையும் ஒழுங்காக. முழுமையாகச் செய்ய முடியாது. எதையும் பற்றி எடுக்க முடியாது. எழுத முடியாது. இப்படி எல்லா வேலைகளுக்கும் பெருவிரல் இன்றியமையாதது.
அது மாத்திரமல்ல, இந்த உலகத்தில் ஒருவரின் பெருவிரலிலுள்ள ரேகைக் குறிகள் போல் இன்னொருவரின் பெருவிரலிலுள்ள ரேகைக் குறிகள் இருக்காது. அதனால்தான் கையொப்பமிடத் தெரியாதவர்கள் உட்பட, அனைவரினதும் பெரு விரல் அடையாளத்தை முக்கிய ஆவணங்களில் எடுக்கின்றனர்.
ஒரு கையிலுள்ள கட்டைவிரல், அல்லது பெரு விரலில் இரு அங்குலாஸ்திகளுண்டு, இதர நான்குவிரல்களிலும் மும்மூன்று அங்குலாஸ்திகளும் அமைந்துள்ளனவென்பது உங்களுக்குத் தெரியும். அங்குலாஸ்தி என்பது விரலின் கணு. இவற்றில். விரலில் நகமுள்ள அங்குலாஸ்தியை முதலாவது அங்குலாஸ்தியென எடுத்துக் கொள்ளலாம். அதற்குக் கீழுள்ள அங்குலாஸ்தி இரண்டாவது. அதற்கும் கீழே கையோடு இணைந்துள்ளது. மூன்றாவது அங்குலாஸ்தி.
கட்டை விரல் அல்லது பெருவிரலின் முதல் அங்குலாஸ்தி மனோ சக்தியைக் குறிக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவரா, வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு முறியடித்து வெற்றிவாகை சூடுபவரா, தன்னம்பிக்கை உடையவரா, தலைமைத்துவமும் ஆளுமையும் உடையவரா என்பன போன்ற விடயங்களை பெருவிரலின் முதலாவது அங்குலாஸ்தி எடுத்துச் சொல்லும்.
இரண்டாவது அங்குலாஸ்தி பகுத்தறிவைக் குறிக்கும். சரியா தவறா, தீயதா, நல்லதா, நீதியா, அநீதியா என்பதை அலசி ஆராய்ந்து, ஏற்பதா, தவிர்ப்பதா என்று முடிவு செய்யும் தர்க்க மனோபாவத்தை பெரு விரலின் இந்த அங்குலாஸ்தி அமைந்துள்ள விதமும் இதிலுள்ள குறிகளும் புலப்படுத்தும்.
எந்தவிரலாக இருப்பினும் அதன் முதலாவது அங்குலாஸ்தி தெய்வாம்சத்தைக் குறிப்பதாக கைரேகைக் கலையின் பிதாமகன் திசபெரலி குறிப்பிடுகின்றார். பிறந்த குழந்தை முதலில் அசைப்பது விரல்களைத் தான். இவ்விதம் அசைப்பதனூடாக அந்த விரல்களுக்கும், அந்த விரல்களுக்கு கீழுள்ள கிரக மேடுகளுக்குமுள்ள வல்லமையை அதற்குரிய கிரகங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதாகவும் அவர் கூறுகின்றார்.
விரல்களின் இரண்டாவது அங்குலாஸ்தி அதன் கீழுள்ள கிரக மேடுகளுக்குள்ள இயல்பு, முயற்சி, பயன்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவதாகும். இது அமைந்துள்ள விதம், இதிலுள்ள ரேகைகள், குறிகள் என்பன அந்தக் கிரக மேடு புலப்படுத்தும் விடயங்கள் தொடர்பாக எமது முயற்சிகள் பற்றியும் முடிவில் அதன் பலன்கள் குறித்தும் எடுத்துக் கூறுகின்றன.
மூன்றாவது அங்குலாஸ்தி சடப் பொட்ள்கள் குறித்த எமது உணர்வுகளைக் குறிப்பிடுகின்றன. உதாரணமாக நெருப்பு சுடுமென்பது எமது இயற்கை உணர்வு. அது சுடுவது மாத்திரமல்ல. அதனைக் கொண்டு விளக்கையும் ஏற்றலாம். வீட்டையும் எரிக்கலாம் என்ற அறிவு எமது புத்தியினால் வந்தது. நெருப்பு சுடும் என்ற உணர்வை வெளிப்படுத்துவது தான் விரல்களின் மூன்றாவது அங்குலாஸ்தி கூறும் செய்தியாகும்.
பெருவிரலின் முதலாவது அங்குலாஸ்தியில் (நகமுள்ளபாகம் ) நட்சத்திர குறி காணப்பட்டால் (A) அத்தகையவர் ஒரு குதர்க்கவாதியென்று அர்த்தம். ஒரு சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் கற்பித்து சொற்சிலம்பமாடுவார்.
எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் தனது கட்சி சரியென நிரூபிக்க இவர் வாதாடுகின்ற இலாவகம், அது மனச்சாட்சிக்கு, நீதிக்கு விரோதமான காரிமாயிருந்தாலும் கூட சரியென்று நம்பவைத்துவிடும். புகழ் பெற்ற வழக்கறிஞர்கள், இராஜதந்திரிகளின் பெருவிரல்களில் பெரும்பாலும் இக்குறி காணப்படும்.
கையில் சுக்கிரமேடு அளவுக்கு மீறிப் பருத்து, பெருவிரலின் முதல் அங்குலாஸ்தியிலும் நட்சத்திரக் குறி காணப்படுமாயின் கமகமக்கும் வாசம்வந்து ஆளை மயக்குவது போல தமது மிருதுவானதும் நைச்சியமானதுமான பேச்சினால் எதிர்ப்பாலாரை மயக்கி வசப்படுத்தி தமது இச்சையை அல்லது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதை அது குறிக்கும். பெரும்பாலும் காமவேட்கை மிகுந்த ஆணுக்கோ, அன்றிப் பெண்ணுக்கோ தான் இந்தமாதிரியான அமைப்பு இருக்குமாம்.
அதேவேளை, பெருவிரலின் இரண்டாவது அங்குலாஸ்தியில் ஒன்றோ, இரண்டோ நட்சத்திரக் குறிகள் தோன்றியிருக்குமானால் (B) பொதுவான மனித நேயம் அவருக்கு மிகுந்திருப்பதையும் தனது பரோபகாரப் பணிகள் மூலமாக மக்கள் மத்தியில் அவர் பிரபல்யம் பெற்றிருப்பதையும் அது குறிக்கும்.
எல்லா விரல்களிலும் ஒரு நீண்ட ரேகை கோடு கிழித்தாற் போல் அமைந்திருக்கக் காணப்பட்டால் (C, D, E, F) நாட்டிற்கோ, தமது சமூகத் திற்கோ பெருமை தரக்கூடிய சாதனையை, அல்லது சாதனைகளைச் செய்ய அவர் படைக்கப்பட்டிருப்பதை அது குறிக்கும். எல்லா விரல்களிலும் முதல் அங்குலாஸ்தியில் அநேக சிறுரேகைகள் செங்குத்தாய் அமைந்திருக்கக் காணப்பட்டால்.அத்தகையவரின் தேகம் பொதுவாய் ஆரோக்கியமற்றிருப்பதை அது குறிக்கும். எல்லா விரல்களிலும் அங்குலாஸ்திகள் இணையும் முடிச்சுகளில் செங்குத்தாய் பதிந்த ரேகைகள் காணப்பட்டால் (G,H,J,K) திடும்பிரவேசமாய் நிகழப்போகும் எதிர்பாராத மரணத்தை அது குறிப்பதாகும்!
பொதுவாக நீண்டும் குறுக்கால் அகன்றும், இரண்டாவது அங்குலாஸ்தி உடுக்குப்போல் அடி சிறுத்துக் காணப்படும் பெருவிரல்கள் சிறப்பம்சம் கொண்டவை என்று சொல்லப்படுகிறது. கேட்போரை தேனில் விழுந்த ஈயென மயக்கும் வசீகரமான பேச்சால் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் பெரு விரல்கள் இவ்வாறு ஒரு வேலின் வடிவத்தில் குறுக்கே பெருத்து நுனிகூம்பி இரண்டாவது அங்குலாஸ்தியின் அடிப்பாகம் சிறுத்த தோற்றத்தைக் கொண்டிருக்குமாமென கைரேகை சாஸ்திரம் கூறுகிறது.
இங்கிலாந்தில் தனது சாதுரியமான பேச்சு வன்மையால் மக்களைக் கவர்ந்து ஹிட்லருக்கு எதிராக வீறுகொண்டெழச்செய்த வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்யாவின் புரட்சி வீரர் லெனின், தமிழ் நாட்டில் ஆட்சி பீட மேறிய அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரது பெரு விரல்கள் இவ்விதம் அமைந்திருந்தனவென்று இந்தியாவின் பிரபல சோதிட சஞ்சிகையின் Astrological Magazineதனது கைரேகைக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
பெருவிரலுக்கு அடுத்துள்ள விரல் சுட்டுவிரல், அல்லது ஆட்காட்டி விரலாகும். இந்த விரலின் மூன்று அங்குலாஸ்திகளிலும் ஒரு நீண்டரேகை தொடர்ந்து சென்றிருக்குமானால் (L) பெருந் தன்மை, நல்லொழுக்கம், செல்வாக்கு, புகழ், உள்ள வாழ்வைக் குறிக்கும். மேற்படி விரலின் முதல் அங்குலாஸ்தியில் நட்சத்திரக் குறி தென்படுவது (M) முயற்சித்த காரியங்களில் வெற்றி பெறுவதையும் இரண்டாவது அங்குலாஸ்தியில் வட்ட வடிவான ரேகைக் குறியொன்று காணப்படுவது (N) ஏதோ மாறாத துயரமொன்று மனதினுள்ளிருந்து நெடுகிலும் வாட்டுவதையும் குறிப்பன.
சுட்டுவிரலின் முதலாவது அங்குலாஸ்தியின் இணைப்பில் (முடிச்சில்) ஒரு சூலக்குறி காணப்பட்டால் (P) இயற்கையாகவே ஆர்வமுள்ள ஒரு துறையில் அயராது முயன்று வெற்றிபெறுவார். கல்வி, கணிதம், விஞ்ஞானம், சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் இந்த வெற்றி கைவரப் பெறும்.
சுட்டு விரலின் இரண்டாவது, மூன்றாவது, அங்குலாஸ்திகளில் குறுக்கும் மறுக்குமாக ரேகைகள் காணப்பட்டால், தலைபோகிற எந்தப் பிரச்சினையிலும் பொறுமை காத்து தன்காரியங்களை வழி நடத்திச் செல்கிறவர் என்று அர்த்தம்,
ஆயுள் ரேகையின் கிளை மேல் நோக்கி குரு மேட்டையும் தாண்டிச் சென்று சுட்டு விரலின் மூன்றாவது அங்குலாஸ்தியிலும் ஏறியிருந்தால் (R) அத்தகையவர் வறுமைப்பட்ட குடும்பத்தில் பிறந்து, சிறுவயதில் அன்றாடம் சோற்றுக்கு அல்லல்பட்டிருந்தாலும், காலப் போக்கில் தனது உழைப்பினாலும் அதிர்ஷ்டத்தினாலும் வசதியான வாழ்வை அடைவதை அது குறிக்கும். இளம் பெண்ணொருத்தியின் சுட்டு விரலில் இந்த ரேகைக் குறியிருப்பின், குடிசையில் பிறந்திருப்பினும் தான் மணம் செய்து புகுந்த இடத்தினை விளங்கவைக்கும் அதிர்ஷ்டத்தினை அவள் பெற்றிருப்பாள்!
திருவோணம்