வழமை போன்று இம்முறையும் சவூதி அரேபியா அரசாங்கம் நமது நாட்டில் விழிவெண்படல சத்திர சிகிச்சையை (வெண்புரை) காத்தான்குடி மாநகரில் ஏற்பாடு செய்துள்ளது. மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வு 2024 ஆம் ஆண்டு மே மாதம் 06 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்று வருகின்றது. இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இன, மத பேதமின்றி பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் சிகிச்சை பெறுவதற்காக நாட்டின் பல மாகாணங்களிலிருந்தும் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளனர். இச்சத்திர சிகிச்சையை ஒழுங்கான முறையில் நிறைவேற்றுவதற்காக கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அத்தோடு கடந்த புதன்கிழமை இந்நிழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் இப்னு ஹமூத் அல்கஹ்தானியும் கலந்து கொண்டார். இலங்கைக் குடியரசு மற்றும் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பு அளப்பரியதாகும்.
மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த இலவச சத்திரசிகிச்சை முகாம் இதுவரைக்கும் இலங்கையில் 22 தடவைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், 27,000 நோயாளர்களுக்கு கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த மருத்துவ முகாமின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சவூதி அரேபியா அரசாங்கம் அன்றுதொட்டு இன்று வரைக்கும் இலங்கைத் திருநாட்டில் ஏராளமான மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றது. இது இலங்கை மற்றும் சவூதி அரேபிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்துவதோடு சவூதி அரேபிய அரசாங்கத்தின் தாராள மனப்பாங்கையும், சகோதரத்துவத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றது.
இவ்வாறான மனிதாபிமான உதவிகளைச் செய்வதில் பிரதான பங்குதாரராக மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் திகழ்கிறது. டிசம்பர் 31, 2023 வரைக்குமான கணக்கீட்டின் படி, இவ்வமைப்பினால் உலகளவில் 98 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட 2,673 திட்டங்களுக்கான மொத்த செலவு 6,532,536,783 அமெரிக்க டொலர்களாகும். குறிப்பாக, இலங்கை திருநாட்டில் இடம்பெற்றுள்ள 17 திட்டங்களின் மொத்த செலவு 14,311,611 அமெரிக்க டாலர்களாகும்.
இவ்வாறான சமூக சேவைகளை இலங்கை நாடு உட்பட உலகின் நாலா திசைகளிலும் தொடர்ந்தும் செய்து வரும் இரு புனிதப் பள்ளிவாசல்களின் காவலரும், மன்னருமான ஸல்மான் இப்னு அப்தில் அஸீஸுக்கும், பட்டத்து இளவரசர் முஹம்மத் இப்னு ஸல்மானுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் இப்னு ஹமூத் அல்கஹ்தானிக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
அஷ்ஷேக் ளபர் இப்னு முஹம்மத் அஜ்வாத் (பஹ்ஜி, B.A. மதீனா)