Home » துபாய் ெவள்ளம்: காரணம் என்ன?

துபாய் ெவள்ளம்: காரணம் என்ன?

முகில் விதைப்பா? அல்லது காலநிலை மாற்றமா?

by Damith Pushpika
May 12, 2024 6:02 am 0 comment

உலகில் மிகப் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் என்பது அராபியன் குடா நாட்டின் கிழக்கு அந்தத்தில் அபுதாபியைத் தலைநகரமாகக் கொண்டு அமைந்துள்ள ஏழு இராச்சியங்களைக் கொண்டு விளங்கும் ஒரு கூட்டாட்சி அரசாகும். நாட்டின் மொத்த பரப்பு 83,600 சதுர கிலோமீற்றர்கள். சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீற்றருக்கு 135 பேர். 1950 இல் நாட்டின் மொத்த சனத்தொகை 70,000 ஆக இருந்தது. இக்காலத்தில் நிலநெய் கண்டறியப்பட்டதன் பின்னர் பாரிய பொருளாதார, சமூக உருமாற்றம் ஏற்படத் தொடங்கியது. முழு அளவிலான உட்கட்டுமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தேவையும் அதிகரித்தது. வர்த்தகம், வீடமைப்பு, கட்டுமானங்கள் என்பன இலாபம் தரும் பொருளாதார நடவடிக்கைகளாக மாற்றமடைந்தன. பாதுகாப்பு மாத்திரமன்றி திறந்த தொழிற்கொள்கை, இடம் பெயர்ந்தோர் நேயச் சட்டங்கள், தொழில்வாண்மைக்கான அதிகரித்த சந்தர்ப்பங்கள் போன்ற காரணிகளினால் நாட்டின் வளர்ச்சி துரிதமாக மேம்படத் தொடங்கியது. குழாய் இணைப்புகள், கட்டுமான விருத்திகள் தொடக்கம் புதுப்பிக்கக்கூடிய மற்றும் அணுசக்திப் பிறப்பாக்கம் வரை தொடராக மேற்கொள்ளப்பட்டுவந்த அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக மாற்றமடைந்ததனால் மக்கள் பெருமளவில் வந்து குடியேறத் தொடங்கினர்.

2024 ஏப்ரலில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் (United Arab Emirates) சனத்தொகை 10.24 மில்லியன். துபாயில் மட்டும் 3.68 மில்லியன் மக்கள் உள்ளனர். மொத்த சனத்தொகையில் புலம்பெயர்ந்தோரின் சனத்தொகை 9.06 மில்லியன் (2024). இதில் இந்திய மக்களின் சனத்தொகை 3.9 மில்லியனாக உள்ளது. நாட்டின் கரையோரத்தில் அமைந்துள்ள துபாய் நகரம் மிகவும் வரட்சியான காலநிலையைக் கொண்டது. வருடாந்தம் சராசரியாக 100 மில்லி மீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியையே பெறுகின்றது. ஆனால் எப்பொழுதாவது ஒருமுறை மட்டுமே மிகக் கடுமையான மழைவீழ்ச்சி ஏற்படும். நாட்டின் வரட்சியைச் சமாளிக்க “முகில் விதைப்பு”

( Cloud Seeding) மூலம் செயற்கை மழையை உருவாக்குவார்கள். வரட்சியால் பாதிக்கப்படும் ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் மழையை உருவாக்குவதற்கு விதைப்புத் தொழில்நுட்பங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தனர். ஏறக்குறைய ஐம்பது நாடுகள் குறிப்பாக, ஐக்கிய அமெரிக்கா, சீனா, அவுஸ்திரேலியா, மலேசியா, ரஷ்யா மற்றும் மெக்சிக்கோ போன்ற நாடுகள் முகில் விதைப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அமெரிக்காவின் மீட்புப் பணிமனை கடந்த வருடத்தில் கொலராடோ ஆற்றுப் பகுதி நெடுகிலும் முகில் விதைப்புக்கு 2.4 மில்லியன் டொலர்களைச் செலவு செய்தது. ஊட்டா பிரதேசத்தின் விதைப்புக்கான செலவு பத்துமடங்காக அதிகரித்தது. நீர்ப்பாசனத் தேவைகளுக்காக சீனா அடிக்கடி விதைப்பினை மேற்கொண்டு வந்துள்ளது. 2008இல் பீஜிங்கில் இடம் பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது வானம் தெளிவாக இருப்பதற்காக சீனா விதைப்பினை மேற்கொண்டு கரும் முகில்களை அகற்றியது. முகில் விதைப்பினை முதன் முதலில் விருத்தி செய்தவர் அமெரிக்க இரசாயனவியலாளரும் வளிமண்டலவியலாளருமான ‘வின்சென்ட் ஜோசப் ஸ்ஷாபர்’ என்பவராவார். சீனா 1958இல் இருந்து இம்முறையைப் பயன்படுத்தி வந்துள்ளதுடன் விசேஷடமாக அந்நாட்டு இராணுவம் இத்துறையை நன்கு விருத்தி செய்துள்ளது. இந்தியாவில் 1983, 1984-, 87, 1993-, 94 காலத்தில் தமிழ்நாட்டிலும் 2003, 2004 கர்நாடகாவிலும் முகில் விதைப்பு மாநில அரசுகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சவூதி அரேபியாவில் முகில் விதைப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. 2023 இல் மட்டும் முகில் விதைப்புக்கான விமானப் பறப்புக்கள் 1424 மணித்தியாலங்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகில் விதைப்பு என்றால் என்ன?

வானத்திலுள்ள மிகச்சிறிய நீர்த் துளிகள் அல்லது பனிப் பளிங்குகள் உருவாவதற்கு வளிமண்டத்திலுள்ள நீராவி குளிர்ச்சியடைந்து ஒடுங்கும்போது முகில்கள் உருவாகின்றன. இத்தகைய சிறிய துணிக்கைகளும் பளிங்குகளும் வழக்கமாக வளிமண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் முகில்களின், ஒடுங்கல், கருக்களான தூசுக்கள், உப்பு மற்றும் ஏனைய காற்றுத் தொங்கல்களைச் சுற்றி உருவாக்கப்படும். ஒடுங்கல் கருவானது, முகில்களை மிகச் சிறிய அளவில் உருவாக்கும். இது இரண்டு மைக்ரோ மீற்றர்களாக இருக்கும். தனியொரு முகில் துளியில் நூறில் ஒரு பங்காக இது காணப்படும்.முகில் ஒடுங்கல் கருக்கள் வளிமண்டலத்துக்குள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ வந்து சேர்கின்றன. இயற்கையான மூலகங்களாகக் காட்டுத் தீ, எரிமலைகள், தூசுப்புயல்கள்; என்பனவும் செயற்கையான சில மூலகங்களாகக் கைத்தொழிற்சாலைகளின் வெளியேற்றங்கள், முகில் விதைப்புச் செயல்முறைகள் என்பனவும் உள்ளடக்கப்படுகின்றன. முகில் விதைப்பு என்பது செயற்கையாக வானிலையை மாற்றியமைக்கும் ஒரு நுட்பமுறையாகும். இது வளிமண்டலத்தில் முகில் ஒடுங்கல் கருக்களை அறிமுகப்படுத்துவதனால் அது மழை மற்றும் பனியை உற்பத்தி செய்வதற்கான முகிலின் ஆற்றலை அதிகரிக்கும்.

முகில் விதைப்பு என்பது தற்போதுள்ள முகில்களுக்குள் அவற்றினை அதிகரிப்பதற்கு உதவும் வகையில், சிறிய துணிக்கைகளைச் சேர்த்து விடுதலாகும். இதற்குப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான துணிக்கையாக விளங்குவது ‘சில்வர் அயோடைட்’ ஆகும். இது பனிப் பளிங்குகள் போன்ற அமைப்பினைக் கொண்டு காணப்படுவதுடன் மிகைக் குளிர்ச்சி கொண்ட திரவ நீர்த்துளிகளைக் கொத்துக்களாக ஒன்றிணைத்து விடும். விமானங்கள் மூலம் விசிறப்படும் ‘சில்வர் அயோடாட்’ என்பது (Silver Iodite ) மழைத்துளிகளையும், பனிப் பளிங்குகளையும் பெரிதாக வளர்ச்சியடைவதற்கு உதவுவதுடன்; முகிலிலிருந்து வீழ்ச்சியடையக் கூடிய மழை மற்றும் பனியின் அளவினையும் அதிகரிக்கின்றது. இச்செயல்முறையானது “பனியுரு முகில் விதைப்பு” என அறியப்படும். இயற்கை மட்டங்களுக்கு மேலாக மழையையும் மழைப் பனியையும் அதிகரிப்பதற்கு பயன்மிக்க, பாதுகாப்பான ஒரு வழியாக முகில் விதைப்பு காணப்படுகின்றது.

காலநிலை மாற்றம் காரணமா?

துபாயிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அல் அயன் நகரத்தில் ஏப்ரல் 16 இல் 24 மணித்தியாலத்தில் 256 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியது. வளைகுடாப் பிரதேசம் எப்பொழுதும் மழைவீழ்ச்சியை அருந்தலாகவே கொண்டிருக்கும். நீண்ட காலமாகவே ஐக்கிய அரபு இராச்சியம் மழைவீழ்ச்சி இல்லாமல் ஒழுங்கற்ற வானிலை ஒழுங்கினைக் கொண்டிருந்தது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில மணி நேரத்திற்குள் சில சமூக ஊடகங்களின் பயனர்கள் உடனடியாக இந்த மோசமான வானிலைக்கு அண்மையில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முகில் விதைப்புச் செயற்பாடுகளே காரணம் எனத் தவறாக எடுத்துக் கூறினர். ஆரம்ப அறிக்கைகளின் படி முகில் விதைப்பு விமானங்கள் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பணியில் ஈடுபட்டிருந்தன என்றும் ஆனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டது.

காற்று, ஈரப்பதன் மற்றும் தூசுக்களின் நிலைமைகள் மழையை ஏற்படுத்துவதற்குப் போதுமானதாக இல்லாத நிலையில் தான் முகில் விதைப்பு பொதுவாக முன்னெடுக்கப்படும். வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் வளைகுடாப் பகுதியில் உயர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என எதிர்வு கூறுவோர் எச்சரித்திருந்தனர். இத்தகைய செறிவுமிக்க பாரிய அளவுத்திட்ட முறைமைகள் எதிர்வு கூறப்பட்ட நிலையில் மிகவும் செலவுமிக்க முறையான முகில் விதைப்பு மேற்கொள்ளப்படவில்லை.

மிக மோசமான வானிலை நிகழ்வு இடம் பெறலாம் என ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு முன்னரே கணினி மாதிரிகள் மூலம் 24 மணித்தியாலத்தில் கடும் மழை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என எதிர்வு கூறப்பட்டது. பாரெய்ன் தொடக்கம் ஓமான் வரைப்பட்ட பரந்த பிரதேசத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு தாக்கம் ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டிருந்தது. துபாய் அதிகளவு நகராக்கத் தன்மை கொண்டது. ஈரப்பதனை உறிஞ்சுவதற்கான பசுமை வெளிகள் அந்நகரத்தில் மிகக் குறைவு. உயர் மட்டத்திலான மழைவீழ்ச்சியைத் தாக்குப்பிடிப்பதற்கான வடிகால் வசதிகள் குறைவு. ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரோல்ஸ் றோய்ஸ் மற்றும் அஸ்ரன் மார்ட்டின் போன்ற விலை உயர்ந்த கார்கள் வெள்ள நீரில் மிதந்து சென்றதைக் காண முடிந்தது. வானிலையில் மிகக் கடுமையான தாக்கங்கள் ஏற்படுவதற்கு முன்னரே அங்குள்ள சமூகங்கள் பாதிக்கப்படப் போகும் நிலைமை தெளிவாகத் தெரிந்தது. மாரிகாலத்தில் இடைவிட்டுப் பெய்யும் மழையைக் கொண்ட ஒரு வரண்ட பிரதேசமாக இருந்ததினால் மத்திய கிழக்கில் உள்ள நகரங்கள் மிக உயர்வான மழைவீழ்ச்சியைத் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்படவில்லை.

சீமெந்துத் தரைகள், தார் போட்ட பாரிய பெருந்தெருக்கள், இறுக்கமான கண்ணாடிகளால் மூடப்பட்ட கட்டடங்கள், நடைபாதைச் சதுக்கங்கள் போன்ற கடினமான தரைப்பகுதிகளைக் கொண்ட பிரதேசமாகவே ஐக்கிய அரபு இராச்சியம் அமைந்திருந்தது. நீர் உட்புக முடியாத தன்மை கொண்ட பெருமளவு மேற்பரப்புகள், பற்றாக்குறையான வடிகாலமைப்பு வசதிகள் காரணமாக பெய்த கடும் மழையினால் உருவாகிய நீர் எங்கு வழிந்தோடுவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

வளிமண்டலவியல் தேசிய நிலையத்தின் விஞ்ஞானிகளது ஆய்வின்படி ஐக்கிய அரபு இராச்சியத்தின் வருடாந்தப் படிவுவீழ்ச்சி நாடு முழுவதும்30 வீதம் அதிகரிக்கும் எனவும் படிவுவீழ்ச்சியின் தீவிரத்தன்மை அடிக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான பல்வேறு ஆதாரங்களை ஆராய்ந்து பார்க்கும் போது துபாயில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கிற்கு முகில் விதைப்புக் காரணமாக இருக்கவில்லை. மாறாக காலநிலையில் ஏற்பட்ட மாற்றமே பிரதான காரணம் எனக் கூற முடியும். ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானைத் தாக்கிய புயலினால் ஏற்பட்ட மழைவீழ்ச்சியினால் பெரும் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகள் மற்றும் நெய்யரிப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் மாட்டிக் கொண்டனர். அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன. விமான ஓடுபாதைகள் ஆறுகளாக மாறியதால் விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டன. ஓமானை எல்லையாகக் கொண்டிருக்கும் அல் அயன் நகரத்தில் 1949ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக 254 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி 24 மணித்தியாலத்தில் பதிவு செய்யப்பட்டது. அரேபியக் குடாநாடு ஒரு வரண்ட பாலைவனக் காலநிலையைக் கொண்ட நாடாக இருந்தாலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மழைவீழ்ச்சி அபூர்வமாகவே இடம்பெறும். கோடைகால வளி வெப்பநிலை 50 பாகை செல்சியஸ் ஆகக் காணப்படும். மேல் வளிமண்டலத்தில் உள்ள தாழமுக்க தொகுதியுடன் மேற்பரப்புத் தாழமுக்கமும் இணைந்து வளியின் மீது ஏற்படுத்திய அமுக்கப் பிழிவின் காரணமாகவே பாரிய மழைவீழ்ச்சி தூண்டப்பட்டது.

தாழ்மட்டத்தில் நிலவிய சூடான வெப்பநிலைகளுக்கும் உயர் மட்டத்தில் காணப்பட்ட குளிரான வெப்பநிலைகளுக்கும் இடையிலான வேறுபாட்டினால் இந்த அமுக்கம் செறிவடைந்து மிகச் சக்தி வாய்ந்த இடி மின்னல் நிலைமைகளை உருவாக்கியது. இத்தகைய அசாதாரண தோற்றப்பாடு ஏப்ரலில் ஏற்படும் என்பதை எவரும் எதிர்பார்க்கவில்லை. காலநிலை விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனித நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம் காரணமாகப் பூகோள வெப்பநிலையில் ஏற்படும் உயர்வு, உலகம் பூராகவும் தீவிரமான வானிலை நிகழ்வுகளையும் செறிவான மழைவீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மைக் காலங்களில் ஏற்பட்டு வரும் இடி, மின்னல் புயல்களிலிருந்து ஏற்படும் மழைவீழ்ச்சி வெப்பமடைதலுடன் தொடர்பானது. வெப்பமான உலகில் செறிவாக காணப்படும் மேற்காவுகையின் போது இடி மின்னலில் காணப்படும் மிகக் கடுமையான மேலிழுப்பாக இது அமைந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பெரு நகரான துபாய் நீரில் மூழ்கியமைக்கு ஒன்றரை வருடம் பெய்ய வேண்டிய மழை ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கொட்டித்தீர்த்தமையே காரணமாகும். மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட சனத்தொகை கொண்ட துபாயில் 142 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி இடம்பெற்றது. வழமையாக முழு வருடத்திலும் பெய்ய வேண்டிய 76 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சிக்குப் பதிலாக 127 மில்லி மீற்றர் மழை துபாய் சர்வதேச விமான நிலையப் பகுதியில் இடம்பெற்றது.

ஓமானில் நான்கு நாட்களில் 230 மில்லி மீற்றர் மழை இடம்பெற்றது போன்று மஸ்கட், பகிறேய்ன், காட்டார் சவூதி அரேபியா போன்ற இடங்களிலும் கடுமையான மழை காணப்பட்டது. அறிக்கைகளின் படி செறிவான மழைவீழ்ச்சி அராபியக் குடாநாட்டின் மீதும் ஓமான் வடைகுடாவிற்குள்ளும் பல நாட்களாக புயலின் மெதுவான நகர்வின் காரணமாக ஏற்பட்டது. மத்திய கோட்டுக்கு அண்மையிலிருந்து பெருமளவான அயன ஈரப்பதத்தினைப் புயல் எடுத்துச் சென்று இப் பிரதேசங்களின் மீது பெருமளவில் வெளியேற்றியது. உலகம் பூராகவும் காலநிலை வெப்பமடைவதனால் மழைவீழ்ச்சி மிகக் கடுமையாக இருக்கின்றது. ஏனெனில் சூடான வளிமண்டலம் அதிகளவு ஈரப்பதனை வைத்திருக்கக் கூடியது. முகில் விதைப்பினால் தான் கடும்மழை ஏற்பட்டது என்பது தவறானது. முகில் விதைப்பின் மூலம் ஒன்றுமே இல்லாத நிலையில் முகில்களை உருவாக்க முடியாது. வானத்தில் ஏற்கனவே நீர் இருக்கும் போது தான் குறிப்பிட்ட இடங்களில் நீர்த் துளிகளை விரைவாக ஒடுங்க வைக்க முடியும். எனவே முதலில் ஈரப்பதன் தேவை. பூகோள வெப்பமடைதலின் காரணமாக துபாயைச் சுற்றியுள்ள கடல்களில் சூடான நீர் வழக்கத்துக்கு மாறாக ஏற்பட்டுள்ளதுடன் அங்கு மிகவும் சூடான வளியும் மேலே நிலவியிருந்து. இத்தகைய அதிகரிப்பு உள்ளார்ந்த ஆவியாக்க விகிதத்தையும் நீரினைப் பிடித்து வைத்திருக்கக்கூடிய வளிமண்டலத்தின் ஆற்றல் ஆகிய இரண்டையும் அதிகரித்து துபாயில் இடம் பெற்றது போன்ற ஒரு பெரும் மழையைக் கொட்டித் தீர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தது. எடின்பேர்க் பல்கலைக்கழக காலநிலையாளரான ‘ஹாபி ஹெகல்’ என்பவர் காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக ஓமான், ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏற்பட்டது போன்ற கடும் மழை பல இடங்களில் ஏற்படுவதற்கான வாய்ப்பு தொடர்ந்து காணப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் கடும் மழைவீழ்ச்சி ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உறுதியாகக் காணப்படுகின்றன. வளியில் வெப்ப அதிகரிப்பு காரணமாக அதிகளவான ஈரப்பதன் உள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவே ஆகும்.

மத்திய கிழக்கில் பெரியளவான அயனப் புயல்கள் அரிதாகவே இடம்பெறும் எனக் கூற முடியாது. புயல் பற்றிய எதிர்வுகூறல் மாதிரிகள் முன்னரே கூறப்பட்டிருக்கின்றது. அண்மைக் கால ஆய்வின்படி 2000 இலிருந்து 2020 வரை தென் அராபியக் குடாநாட்டின் மீது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இடம்பெற்ற ஏறக்குறைய நூறு நிகழ்வுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. 2016 மார்ச் மாதம் துபாயில் ஏற்பட்ட புயலினால் 210 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி ஒரு சில மணித்தியாலத்தில் ஏற்பட்டது. எனவே மிகச்செறிவாகத் தென்படும் கடும் மழைவீழ்ச்சியைக் கொண்ட புதிய யதார்த்தத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் உபாயங்கள் தேவையாக உள்ளது. வீதிகளின் உட்கட்டுமானம் மற்றும் வசதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

வசந்த காலத்தில் இடம்பெறும் மழைவீழ்ச்சியிலிருந்து நீரினைச் சேமித்து வைப்பதற்கான நீர்த்தேக்கங்களை அமைத்தல் வேண்டும். ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெள்ளப் பெருக்கினைச் சமாளிப்பதற்கு உதவும் வகையில் கடந்த ஜனவரியில் புதிய பிரிவொன்று வீதி மற்றும் போக்குவரத்து அதிகாரசபையினால் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division