கடந்த மே 5ஆம் திகதி, ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சியின் வழமையான இரவு 8 மணி செய்தி ஒளிபரப்பு தொடங்கியது. மூத்த செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்னவும் நிஷாதி பண்டாரநாயக்கவும் செய்தியறைக்குச் சென்று அன்றைய செய்திகளை தம் வழமையான பாணியில் பார்வையாளர்களுக்குக் கொண்டுவந்தனர். எனினும் மறுநாள் விடிவதற்குள் ஒரு விசித்திரமான செய்தி இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பரவ ஆரம்பித்தது.
“நேற்று தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பு இடம்பெற்றிருப்பது ஏ.ஐ (A.I) தொழில்நுட்பத்திலாகும்”
“என்ன அது? அது எவ்வாறு சாத்தியமாகும்?”
“அதுதானே…, செய்தி வாசித்த அறிவிப்பாளரும், அறிவிப்பாளினியும் தொலைக்காட்சியில் காட்சியளித்தார்களே… எந்த மாற்றத்தையும் நாம் காணவில்லையே?”
“அது உண்மைதான். என்றாலும் அவ்வாறான ஒன்று நடந்திருக்கின்றது. அது ஏ.ஐ தொழில்நுட்பத்தில் (Artificial Intelligence) மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதாவது செயற்கை நுண்ணறிவுடன்”
இப்படி ஒரு உரையாடல் பலரது வாயில் இருந்து வந்தது. இலங்கை இலத்திரனியல் ஊடகக் கலையில் சமீபத்திய திருப்புமுனையை ஏற்படுத்தி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தேசிய தொலைக்காட்சி A.I தொழில்நுட்பத்தின் சமீபத்திய அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கியது. A.I தொழில்நுட்பம் என்பது மனித செயல்பாடுகளை எளிதாக்குவதற்காக தற்போதைய உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படும் மிக நவீன மற்றும் முன்னணி தொழில்நுட்ப செயல்பாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொலைக்காட்சியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய தொழில்நுட்ப புரட்சி தொடர்பில் தற்போது மிகவும் சூடான மற்றும் நேர்மறையான பதில்கள் கிடைத்து வருகின்றன. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவரான கலாநிதி பிரசாத் சமரசிங்கவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இப்பணி தொடர்பான மேலதிக தகவல்களைக் கேட்டறிந்து கொள்வதற்காக செய்தி ஒளிபரப்பைத் தயாரித்த காமினி பண்டார மெனிக்திவெலவைச் சந்தித்தோம். தேசிய தொலைக்காட்சி தனது இரண்டு முன்னணி செய்தித் வாசிப்பாளர்களுக்குச் சமனான A.I தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிப்பிற்காகப் பயன்படுத்திய செயற்பாடு தொடர்பில் அனேகமானோரிடத்தில் இருக்கும் ஆர்வத்துக்கான பதில் அவரிடமே உள்ளது.
“இது எப்படி நடந்தது? அறிவிப்பாளர் மற்றும் அறிவிப்பாளினிக்குச் சமனான இரண்டு டம்மிகளா அந்தச் செய்தி அறிக்கையை வாசித்தார்கள்?” என்ற பலரதும் கேள்விக்கான பதிலை காமினி பண்டார மெனிக்திவெலவிடம் நாம் கேட்டோம்.
“எந்த டம்மியையும் நாம் இதற்காகப் பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் எடிட்டிங் செயல்முறை மூலமே மேற்கொள்ளப்பட்டது. இது முக்கிய விடயமாக அமைவது, நாம் அந்த A.I தொழில்நுட்பத்தைப் பாவித்தது முதற் தடவையாக சிங்கள மொழியைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பதற்காக. A.I தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் கூட நம் நாட்டின் பெயர் இல்லை. இவ்வாறான சூழ்நிலையில், இதுவரை ஏனைய அலைவரிகள் இந்த சவாலை ஏற்காதது, நேரடி ஒளிபரப்பின் போது ஏதேனும் தவறு நடந்தால், பார்வையாளர்களுக்கு பதில்சொல்ல வேண்டும் என்பதனாலாகும். எனினும் இதனை எம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எமக்கிருந்தது”
அவரது நம்பிக்கை மிகவும் வலுவானது, ஏனெனில் தேசிய தொலைக்காட்சி A.I தொழில்நுட்பத்தைப் பரிசோதிப்பது இது முதல் முறை அல்ல. இது குறித்து மெனிக்திவெல பின்வருமாறு விளக்கினார்.
“முதலில் நாம் செய்தது, A.I செயலியுடனான ஒரு நிகழ்ச்சியையாகும். அது இலங்கையில் A.I தொழில்நுட்பத்துடன் கூடிய முதலாவது நிகழ்ச்சியாகும். அதற்கு வீடியோ ஜெனரேசன் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம். அதன் பின்னர் இலங்கையில் செய்தி ஒளிபரப்பரப்பினுள் A.I தொழில்நுட்பம் பயன்படுத்திய முதலாவது சந்தர்ப்பமாக புத்தாண்டு சுப நேர சீட்டிழுப்பு நிகழ்ச்சியை வழங்கினோம். அந்த சுப நேர சீட்டுக்களை வழங்குவதற்கு நாம் வீடியோ மற்றும் இமேஜ் ஜெனரேசன் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினோம். அதில் வீடியோ ஜெனரேசனும் உள்ளடங்கியது. புத்தாண்டு சுப நேரம் என்பது எமது நாட்டின் கலாசாரத்துடன் வலுவாக இணைக்கப்பட்ட ஒன்றாகும். அவ்வாறான ஒன்றை முன்வைக்கும் போது தவறுகள் ஏற்பட்டால் பிரச்சினையாகிவிடும். என்றாலும் நாம் அந்தச் சவாலை வெற்றி கொண்டோம். கடந்த 5ஆம் திகதி ஒரு செய்தி ஒளிபரப்பின் போது இரண்டு முக்கிய செய்தி வாசிப்பாளர்களை ஒத்த இருவரை உருவாக்கி அவர்கள் மூலம் செய்தியை ஒளிபரப்பினோம். இது இலங்கையில் இடம்பெற்ற முதலாவது AI செய்தி ஔிபரப்பு என்பதோடு, உலகில் இது போன்றதொரு நிகழ்வு இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.
உலகில் மற்றைய நாடுகளில் AI தொழில்நுட்பத்தில் செய்தி வாசிக்கப்பட்டாலும் இவ்வாறான பிரதான செய்தி வாசிப்பாளர்கள் உருவாக்கப்படவில்லை. எமது இரவு நேர செய்தி ஒளிபரப்பு 20 நிமிடங்களைக் கொண்டது. அதில் 15 நிமிடங்ள் AI செய்தி வாசிப்பாளர்கள் இருவரும் செய்திகளை வாசித்தார்கள். இந்த தொழில்நுட்பத்தில் நாம் சிங்கள மொழியைப் பயன்படுத்தியதும் முதற் தடவையாக பிரதான செய்தி வாசிப்பாளர்கள் இருவரின் விருப்பத்தின் பிரகாரம் நாம் அவர்களைப் போன்ற AI செய்திவாசிப்பாளர்கள் இருவரை உருவாக்கியதும் முக்கிய விடயங்களாகும். இதற்காக நாம் இமேஜ் AI ஜெனரேசன், வீடியோ AI ஜெனரேசன், ஓடியோ AI ஜெனரேசன் மற்றும் பெமிலி டி. என். ஏ என்ற தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினோம். இவை அனைத்தும் AI கருவிகளாகும். AI தொழில்நுட்பம் என்பது விரிவானதொரு விடயமாகும்.
சிலர் அரசாங்க ஊடகங்களை குறைத்து மதிப்பிடும் நேரத்தில், தேசிய தொலைக்காட்சியின் இந்த புதிய விடயம் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.
A.I தொழில்நுட்பம் பற்றிய புதிய பேச்சுக்கள் ஆரம்பித்து நிலையில் அதனைச் சுற்றி பாடசாலை மாணவர்கள் உட்பட இளம் தலைமுறையினருக்கு இந்தத் தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணங்களைத் தேடிச் செல்வதற்காக தேசிய தொலைக்காட்சியின் பொறுப்புக்கள் தொடர்பில் நாம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம் கேட்டோம்.
“புதிய தலைமுறையினருக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிவைக் கொடுப்பது எங்கள் பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம். எனவே, A.I தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒளிபரப்பு நேரத்தை ஒதுக்குவதில் நாங்கள் தற்போது கவனம் செலுத்தியுள்ளோம். அதனடிப்படையில், இது போன்ற நிகழ்ச்சிகளை மிக விரைவில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையானது A.I தொழில்நுட்பத்தில் நாட்டை முழுயடையச் செய்வதாகும். நம் நாட்டில் தொழில்நுட்ப அறிவு நிறைந்த பிள்ளைகள் ஏராளம் உள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான சரியான வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கினால் எமது நாட்டுக்குத் தேவையான டொலர்களை சம்பாதிப்பது பெரிய பிரச்சினையாக இராது..,” என அவர் வலியுறுத்தினார்.
தேசிய தொலைக்காட்சியின் www.runews.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று மெய்நிகர் (ஒன்லைன்) முறையின் ஊடாக AI கிளப்பில் பதிவு செய்வதன் மூலம் AI பற்றிய மேலதிக அறிவைக் கண்டறிய இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாக தேசிய தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் இந்திக்க மாரசிங்க தெரிவித்தார்.
*****
AI தொழில்நுட்பத்தில் செய்தி வாசித்து நேத்ரா அலைவரிசை சாதனை
இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு அதாவது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் மொழியில் இரண்டு செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கி பிரதான இரவுநேர தமிழ்ச் செய்தி அறிக்கையை ஒளிபரப்பி இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் நேத்ரா அலைவரிசை சாதனை படைத்துள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்ச் செய்தி ஒளிபரப்பில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்திப் பிரிவின் தலைவரும் நேத்ரா அலைவரிசையின் பிரபலமான செய்தி வாசிப்பாளருமான சி.பி.எம். ஷியாம் மற்றும் பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் தீபதர்ஷினி ஆகியோரின் AI பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (2024.05.10) இரவுநேர பிரதான தமிழ்ச் செய்தி ஒளிபரப்பில் முழுமையாக தமிழ் மொழியில் செய்திகளை வழங்கினர். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த பதிவோடு நேத்ரா அலைவரிசை எதிர்காலத்திலும் இவ்வாறான பல புதிய பரிணாமங்களோடு தன் செய்தி அறிக்கையிடல்களை அறிமுகப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
சுரேகா நில்மினி இலங்கோன் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்