இலங்கை மத்திய வங்கி என்பது இந்நாட்டுப் பொருளாதாரத்தின் பிரதான செயற்பாட்டு அமைப்பாகும். மத்திய வங்கியின் கொள்கை, இந்நாட்டுப் பொருளாதாரத்தின் அனேக திருப்புமுனைகளைக் கூடத் தீர்மானித்துள்ளது. கடந்த 7ஆம் திகதி மத்திய வங்கியில் இடம்பெற்ற ‘நிலையான ஸ்திரத்தன்மை’ என்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் மத்திய வங்கியின் வகிபாகம் தொடர்பில் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.
தற்போது, ’சர்வதேச பொருளாதார’த்தின் அடிப்படையில் நாட்டில் நிலையான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கமும் மத்திய வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே அந்த நிலைமை ஏற்பட்டது. குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட இந்த ஸ்திரத்தன்மையினை நீண்டகாலத்தில் நிலையானதாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, ‘நிலையான ஸ்திரத்தன்மை’ தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
முக்கியமான சில நிவாரணங்களை மக்களுக்கு பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் கடந்த காலங்களில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது அத்தியவசியமானதாகும். அவ்வாறு பயணித்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து பணவீக்கம் நிலையான நிலையை அடையும். அதேபோன்று, வங்கி கட்டமைப்பும் ஸ்திரமாகி, மக்களின் வருமானம் அதிகரிக்கும். மக்களின் வறுமை நீங்கி, நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படும். அதற்காக, தற்போதைய பாதையிலேயே தொடர்ந்து பயணிப்பது முக்கியமாகும்.
மத்திய வங்கி புதிய சட்டத்தின் கீழ் செயற்பட்டாலும் வங்கியிடமுள்ள இரண்டு பிரதான பொறுப்புக்களை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதில் முதலாவது நாட்டின் பணவீக்கத்தை 5 வீத மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதாகும். இது தொடர்பில் மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டாவது நாட்டின் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதாகும். இந்தப் பொறுப்புக்களுக்காக மத்திய வங்கி செயற்படுவதோடு, இதன்போது வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதன்போது பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சிலர் முக்கியமாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘மத்திய வங்கி ஒன்று, அரசாங்கம் வேறொன்று’ என தவறாக வரைவிலக்கணப் படுத்துவதைக் காண முடிகிறது. மத்திய வங்கியின் கொள்கைகளும், அரசாங்கக் கொள்கைகளும் இரு வேறானவை என்பதைக் குறிப்பிட வேண்டும். எனினும் இவை இரண்டையும் அரசு நிறுவனங்களாகக் குறிப்பிட முடியும்.
மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படுவது நாட்டின் நிதிக் கொள்கையாகும். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவது அரச நிதிக் கொள்கையாகும். அதாவது, நாட்டில் வரி விதித்தல், அதற்கு மேலதிகமாக அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான தேவையான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பில் போதிய புரிதல் இல்லாத காரணத்தினாலேயே இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. கொள்கை வட்டி விகிதம், செலாவணி மாற்று விகிதம் தொடர்பான கொள்கைகள் மத்திய வங்கியால் இயற்றப்படுகின்றன. இந்த புரிதல் இல்லாத காரணத்தினால் மத்திய வங்கி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாகவும் தோல்வியடைந்த நிறுவனமாகவும் இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். மத்திய வங்கி இலாபம் ஈட்டுவதற்காக நிறுவப்படவில்லை. சில சமயங்களில் அது நஷ்டம் அடையவும் இடமுண்டு. சில சமயம் இலாபம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. மத்திய வங்கியினால் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளின் வெற்றி, தோல்வி குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
கொள்கைகளை செயல்படுத்தும் போது இலாபம் அல்லது நஷ்டம் ஏற்படலாம். இது மத்திய வங்கி சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பல வருடங்களாக இலாபம் ஈட்டியுள்ளதுடன் கடந்த சில வருடங்களில் நஷ்டம் அடைந்த சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக, 2007இல், மத்திய வங்கி 5 பில்லியன் ரூபா நஷ்டத்தைச் சந்தித்தது. அதேபோன்று, 2013ஆம் ஆண்டில் 24 பில்லியன் ரூபாவும், 2014ஆம் ஆண்டில் 32 பில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், 2015இல் 19 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, 2022ஆம் ஆண்டில் மத்திய வங்கி 374 பில்லியன் ரூபாவையும் 2023ஆம் ஆண்டில் 114 பில்லியன் ரூபாவையும் இழந்துள்ளது. இது எப்படி நடந்தது?
2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட இழப்புக்கான காரணம் இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணிக் கையிருப்பு குறைந்ததாகும். இதில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் அளவு அதிகரித்ததோடு, 203 ரூபாவாக இருந்த டொலர் மிதக்க அனுமதிக்கப்பட்டதால், அது 370 ரூபாவைத் தாண்டிச் சென்றது. இதனால், அந்நிய செலாவணி பெருமளவு குறைந்தது.
2023ஆம் ஆண்டில், மத்திய வங்கியின் கையிருப்பு கட்டியெழுப்பப்பட்டாலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மூலம் மத்திய வங்கி நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. இது நாட்டின் வரி செலுத்துவோருக்கு பெரும் இழப்பாகும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
எவ்வாறாயினும் தற்போது மொத்த கையிருப்பு 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக (5438 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது. அது 2021ஆம் ஆண்டில் 5 பில்லியன் டொலராக இருந்தது.
அதேபோன்று இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய மற்றொரு முக்கியமான விடயம் என்னவெனில், கடந்த காலங்களில் சிலரால் தவறாக வரைவிலக்கணப்படுத்தப்பட்ட ஊழியர் சேமலாப நிதி தொடர்பானதாகும்.
9 வீதமாக இருந்த ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி விகிதம் 13 வீதமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு செலுத்தப்படும் வட்டி சதவீதம் அந்த நிதியம் மேற்கொள்ளும் முதலீடுகளின் பிரகாரமே தீர்மானிக்கப்படுகின்றது. அனேகமாக இந்த முதலீடுகள் திறைசேரியின் உண்டியல்களில் முதலீடு செய்யப்படுவதோடு, கடந்த காலத்தில் திறைசேரியின் உண்டியல்கள் ஊடாக அதிக வட்டி செலுத்தப்பட்டதால் மேலதிக 2 வீத வட்டியை செலுத்த முடிந்தது. அதனடிப்படையில், வட்டித் தொகையை 11 வீதம் வரை முன்னர் அதிகரிக்க முடிந்தது. தற்பொழுது அது 13 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய மற்றுமொரு விடயம் என்னவெனில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் Financial Service Tax என்ற புதிய வரியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எனினும் ஊழியர் சேமலாப நிதியத்தியத்திடம் அவ்வாறு Financial Service Tax அறவிடப்படக் கூடாது என்று இலங்கை மத்திய வங்கியினால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது. இவ்வாறான வரியினைச் செலுத்த நேர்ந்தால், கொள்கைகளுக்கு அமைய தக்க வைத்துக் கொள்ளப்பட்ட நிதியை செலுத்த வேண்டியதில்லை. இலங்கை மத்திய வங்கியிலிருந்து கொண்டுவருவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இணக்கம் தெரிவித்ததே அதற்குக் காரணமாகும். எனவே, மேலதிகமான இன்னும் 2 வீத வட்டியை வழங்குவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே, ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் 13ஆக அதிகரித்தது. சிலர் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் பணத்தை இழக்க நேரிடும் மற்றும் வட்டித் தொகை இல்லாமல் வாழ நேரிடும் என்பதெல்லாம் பொய்யான தகவல்கள்.
பணவீக்கம் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் 2023ஆம் ஆண்டிலேயே நல்ல பலனைப் பெற்றுள்ளன. 2022இல் பதிவுசெய்யப்பட்ட உச்சநிலையிலிருந்து, பணவீக்கம் 2023 இறுதிக்குள் ஒற்றை இலக்க நிலைக்குக் கட்டுப்படுத்தப்பட்டதோடு, அதனால் நிதிக் கொள்கையை இயல்பாக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அதனடிப்படையில், ஆறு காலாண்டுகளாக நீடித்த தொடர்ச்சியான பொருளாதாரச் சுருக்கத்திற்குப் பிறகு, 2023ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதாரம் ஒரு விரிவாக்கத்தைப் பதிவு செய்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழான மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் ஒத்துழைப்புடன் 2023ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றத்தை எதிர்வரும் வருடங்களிலும் தொடர்ந்து காண்பிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.
அதனடிப்படையில், இலங்கைப் பொருளாதாரத்தின் வலுவான மீட்சியானது இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலேயே தங்கியுள்ளது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முழுமைப்படுத்துதல் என்பவை முக்கியமானவை. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு இன்னும் முழுமையாக மீளாததால், திட்டமிட்ட பாதையிலிருந்து விலகக் கூடாது. செயல்படுத்தப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களை மாற்றியமைப்பது பொருளாதாரத்தை மீண்டும் உறுதியற்ற நிலைக்குள் தள்ளுவதற்கு காரணமாக அமையும்.
தாரக விக்ரமசேகர தமிழில் எம். எஸ். முஸப்பிர்