கொவிட் தடுப்பூசி தொடர்பாக உலகெங்கும் ஊடகங்களில் சமீப காலமாக பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு அச்செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
அஸ்ட்ரா ஸெனெகா நிறுவனத்தின் கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் சிலருக்கு அரிதான பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகளே பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. சமூக ஊடகங்களில்தான் இச்செய்திகள் அதிகளவில் பரவுகின்றன.
இத்தடுப்புமருந்தை ஏற்றிக் கொண்டுள்ளவர்களில் சிலருக்கு குருதி உறைதல் மற்றும் குருதிச்சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற பக்கவிளைவுகள் அரிதாக ஏற்படுவதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
இதற்கிடையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஸெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொவிஷீல்ட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட பத்து இலட்சம் பேரில் ஒருவருக்கு இரத்த உறைதல் மற்றும் குருதிச் சிறுதட்டுகள் குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுவதாக பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளின் விசாரணையின்போது, கொவிஷீல்ட் தடுப்புமருந்தைத் தயாரித்த அஸ்ட்ராஸெனெகா நிறுவனம், “எங்கள் நிறுவன கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்” என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் சிரேஷ்ட விஞ்ஞானி ஒருவர் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் “எல்லாச் செயலுக்கும் பக்கவிளைவு இருக்கும். மருந்து என்று வரும்போது மருந்து செலுத்துவதால் விளையும் நன்மைகள் உள்ளன. அதேவேளை அதனால் ஏற்படும் பக்கவிளைவும் சிறிதளவாவது இருக்கும். இரண்டையும் கருத்தில் கொண்டுதான் மருந்துகள் தயாராகின்றன. தடுப்பூசி சிலரிடம் பக்கவிளைவுகளை தூண்டி விடலாம். தடுப்பூசியை வைரஸ் எனக் கருதி எமது உடலின் நோய் தடுப்பு மண்டலம் தீவிரமாக செயல்படுவதால் இரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவுகள் வெகு சிலரிடம் ஏற்படும். இந்த தடுப்பூசியினால் ஏற்படும் அரிதினும் அரிதான பக்கவிளைவு பத்து இலட்சத்துக்கு ஒன்றுதான். எனவே தடுப்பூசியினால் ஏற்படும் அபாயத்தை விட பலன் பெரிது” என்று கூறுகின்றார்.
அதுவும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நாற்பத்தெட்டு மணிநேரத்தில்தான் இந்த பக்கவிளைவு ஏற்பட முடியும். அதிக பட்சம் நான்கு முதல் இருபத்தெட்டு நாட்களுக்குள் இத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படலாம். எனவே பல மாதங்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்டவர்களுக்கு இன்று எந்தப் பாதிப்பும் இல்லை” என்று உறுதிப்படுத்துகின்றார் அந்த மருத்துவ அறிவியலாளர்.
உண்மை நிலைமை இவ்வாறிருக்கையில், சமூக ஊடகங்களில் பரவுகின்ற ஆதாரமற்ற செய்திகளையிட்டு மக்கள் மனம் கலங்கத் தேவையில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.