ஐ.பி.எல்.: கூடிய, குறைந்த ஓட்டங்கள்
இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட்டுக்கே உரிய பரபரப்புடன் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சன்ரைசஸ் ஹைதராபத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்களை பெற்று ஐ.பி.எல். வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களுக்கான சாதனை படைத்தது.
அந்தப் போட்டியில் பதிலெடுத்தாடிய பெங்களூர் அணியும் சலைக்காமல் ஆடி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. அதாவது ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தமாக அதிகூடிய ஓட்டங்களை பெற்ற ஆட்டமாகவும் அது சாதனை படைத்தது. அதாவது இந்தப் போட்டியில் மொத்தமாக பெறப்பட்ட ஓட்டங்கள் 549.
எப்படி இருந்தாலும் ஐ.பி.எல். போட்டி ஒன்றில் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட சாதனை தொடர்ந்து ரொயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடமே இருக்கிறது. 2017 இல் ஈடன் கார்டனில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 131 ஓட்டங்களை துரத்திய பெங்களூர் அணி 49 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஐ.பி.எல். இல் போட்டி ஒன்றின் மிகக் குறைந்த ஒட்டுமொத்த ஓட்டங்களும் 2017 ஆம் ஆண்டு பருவத்திலேயே பதிவானது. மொஹாலியில் நடந்த அந்தப் போட்டியில் டெல்லி டார் டெவில்ஸ் அணி 67 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.
அதேபோன்று முழு 40 ஓவர்களும் விளையாடப்பட்ட நிலையில் ஐ.பி.எல். போட்டி ஒன்றில் ஒட்டு மொத்தமாக பெறப்பட்ட மிகக் குறைந்த ஓட்டங்கள் 208. 2009 டர்பனில் நடந்த அந்தப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்ற நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சப் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களையே பெற்றது.
குறுகிய போட்டி எது?
ராவல்பிண்டியில் ஒரு வாரத்திற்கு முன் நடந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 சர்வதேச போட்டி இரண்டு பந்துகள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக கைவிடப்பட்டது. முதல் பந்தில் நியூசிலாந்தின் டிம் ரொபட்சன் காலில் பட்டு இரண்டு ஓட்டங்கள் பெற்றதொடு இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆனார்.
எனினும் சர்வதேச கிரிக்கெட்டில் வெறுமன இரண்டு பந்துகளுடன் முடிந்த குறுகிய கிரிக்கெட் போட்டி வரிசையில் இது மூன்றாவது ஆட்டமாகவே இருந்தது. 1992 இல் மக்காயில் நடந்த இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியிலும் இரண்டு பந்துகளே ஆடப்பட்டன. அப்போது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இரண்டு பந்தில் ஒரு ஓட்டத்தை பெற்ற நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.
கண்மூடித் திறப்பதற்குள் போட்டி முடிந்த மற்றொரு ஆட்டம் 2013 ஜூன் மாதம் ஓவலில் நடந்தது. அது நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டி20 போட்டியாகும். துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தின் மிச்சல் லம்ப் முதல் பந்தில் 2 ஓட்டங்கள் பெற்ற இரண்டாவது பந்தில் ஆட்டமிழக்க பின்னர் பெய்த மழை போட்டியை கைவிடச் செய்தது.
இதில் பரிதாபம் என்னவென்றால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணித் தலைவராக முதல் முறை செயற்பட்டவர் ஜேம்ஸ் ட்ரெட்வெல். ஆனால் அந்த இரண்டு பந்துகளுடன் அவரது அணித் தலைமை பொறுப்பும் முடிவுக்கு வந்தது.
என்றாலும் 17 சர்வதேச போட்டிகளில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் முடிவுக்கு வந்தபோதும் அந்தப் போட்டிகளில் நாணய சுழற்சி போடப்பட்டன. எனவே அந்தப் போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்ததாக அர்த்தமாகும்.
தோல்வியிலும் சாதனை
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக அண்மையில் பொட்டிசெப்ஸ்ட்ரூமில் நடந்த மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்காவின் லோரா வொல்வார்ட் ஆட்டமிழக்காது 184 ஓட்டங்களை பெற்றார். இது ஒருநாள் சர்வதேச போட்டியில் அவரது அதிகூடிய ஓட்டங்களாக இருந்தன. முந்தைய போட்டியில் அவர் ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களை பெற்றதையும் குறிப்பிட வேண்டும்.
என்றாலும் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காது 195 ஓட்டங்களை பெற இலங்கை அணி 302 ஓட்ட வெற்றி இலக்கை துரத்தி சாதனை படைத்தது.
வொல்வார்ட்டின் சதம் வீணானபோதும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தோல்வி அடைந்த அணியில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராக அவர் சாதனை படைத்தார். இதன்போது 2017 உலகக் கிண்ணத்தில் பிரிஸ்டலில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காது பெற்ற 178 ஓட்ட சாதனையையே அவர் முறியடித்தார்.
எனினும் ஆடவர் கிரிக்கெட்டில் தோல்வி அடைந்த அணியில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சாதனை சிம்பாப்வேயின் சார்ல்ஸ் கொவன்ட்ரி வசவே உள்ளது. 2009 ஓகஸ்ட் மாதம் புலவாயோவில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்திருந்தார்.