இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறப்போகும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 1896 தடகள வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். ஆரம்ப காலம் போலல்ல ஆண், பெண் சமத்துவம் முறையாக பேணப்படுகிறது. சரியாக தலா 905 ஆடவர் மற்றும் மகளிர் தடகள போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இதிலே ஒரே ஒரு இலங்கையராவது இடம்பெறுவாரா, என்பது தான் இப்போதைய பெரிய கேள்வி.
இலங்கைக்கு ஒரு ‘வைல்ட் காட்’ (தகுதி அளவுகோல்களுக்கு அப்பால் அனுமதி) அனுமதியை கூட வழங்க சர்வதேச ஒலிம்பிக் குழு மறுத்துவிட்டது. இதனால் ஒலிம்பிக் போக வேண்டுமானால் சொந்த முயற்சியில் தகுதியை நிரூபிக்க வேண்டும். இதுவரை இலங்கையின் ஒரு வீரர் கூட தகுதியை நிரூபிக்கவில்லை. இருக்கும் குறுகிய காலத்திற்குள் அதனை நிரூபிப்பது என்பது எத்தனை சாத்திய என்று புரியவில்லை.
ஒலிம்பிக் போட்டிக்காக ஏற்கனவே 36 வீர, விராங்கனைகளைக் கொண்ட உயரடுக்கு தடகள குழாம் ஒன்றை தடகள சம்மேளனம் தேர்வு செய்து அந்தக் குழாம் தற்போது பயிற்சி பெற்று வருகிறது. இதில் தெற்காசிய, ஆசிய மற்றும் பொதுநலவாய, ஏன் சர்வதேச அளவிலேயே சாதித்தவர்கள் இருக்கிறார்கள். என்றாலும், ஒலிம்பிக்கிற்கு முன்னேறுவதற்கு அது போதாது.
பொதுவாக 2024 பாரிஸ் ஒலிம்பிக் தடகள போட்டிக்கு இரண்டு வழிகளில் வீரர்கள் தகுதி பெற முடியும். இதில் 50 வீதமான தகுதி இடங்கள் தகுதிக் காலப் பகுதிக்குள் நுழைவு மட்டத்தை அடைபவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதோடு, மற்ற 50 வீத இடங்கள் உலக தடகள தரப்படுத்தல் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இதிலே உலகத் தரப்படுத்தலில் இலங்கையின் எவரும் இல்லாத நிலையில், தகுதி மட்டத்தை வெளிப்படுத்தியே ஒலிம்பிக் போட்டிக்கு அனுமதி பெற முடியும். இதில் 10,000 மீற்றர், மரதன், ஒருங்கிணைந்த போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் நடைப் போட்டி தவிர்த்து அனைத்து தனிப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளுக்கான தகுதிக் காலம் 2023 ஜூலை 1 தொடக்கம் 2024 ஜூன் 30 ஆம் திகதி வரையாகும். இந்தக் காலத்திற்குள் தகுதியை நிரூபிக்காவிட்டால் ஒலிம்பிக் போக முடியாது.
அதாவது இலங்கைக்கு இருப்பது இன்னும் இரண்டு மாதங்கள் தான்.
இந்நிலையில் எதிர்வரும் மே 3 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகும் கிரோன் பிரீ மெய்வல்லுனர் போட்டியில் ஒலிம்பிக் தகுதி பெறும் எதிர்பார்ப்புடன் இலங்கையின் நான்கு வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
குறுந்தூர வீரர் யுபுன் பிரியதர்ஷன அபேகோன், மத்திய தூர வீராங்கனைகளான தரூஷி தில்சரா கருணாரத்ன, கயன்திகா அபேரத்ன மற்றும் 400 மீற்றர் ஓட்ட வீராங்கனை நதீஷா ராமநாயக்க ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
இதில் யுபுன் மீதே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது இத்தாலியில் வசிக்கும் யுபுன் அங்கிருந்து தனது பயிற்சியாளருடன் நேரடியாக போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்.
உபாதையால் கிட்டத்தட்ட கடந்த ஓர் ஆண்டாக ஒதுங்கி இருந்த நிலையிலேயே யுபுன் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்திருக்கிறார். இத்தாலியில் அண்மையில் நடைபெற்ற புளோரன்ஸ் ஓட்டப் பந்தயத்தில் 150 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற யுபுன், போட்டியை 15.19 விநாடியில் முடித்து முதலிடத்தை பெற்றார். ஏற்கனவே 150 மீற்றரை 15.16 விநாடிகளில் முடித்து ஆசிய சாதனை படைத்திருக்கும் யுபுனின் இரண்டாவது சிறந்த காலமாக இது இருந்தது.
யுபுன் 100, 200 மற்றும் 150 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரர் என்பதோடு தேற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரராகவும் இருக்கிறார். அதாவது 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 விநாடிக்கு குறைவான காலத்தில் ஓடிய ஒரே தெற்காசிய வீரர் யுபுன் ஆவார்.
என்றாலும் காயம் காரணமாக அவரால் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக தடகள சம்பியன்சிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது.
இந்நிலையில் அவர் ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கு கிரோன் பிரீ மெய்வல்லுனர் போட்டி தீர்க்கமானதாக இருக்கும். அவர் அதில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கிறார். 100 மீற்றரில் யுபுனின் சிறந்த காலம் 9.96 விநாடிகள். அது 2022 ஆம் ஆண்டு படைக்கப்பட்டது. கடைசியாக அவர் அந்த குறுகிய தூர ஓட்டத்தில் பங்கேற்றது 2023 மே 24 ஆம் திகதியாகும்.
அப்போது அவர் போட்டித் தூரத்தை 10.04 விநாடிகளிலேயே பூர்த்தி செய்தார். என்றாலும் ஒலிம்பிக் தகுதி பெற இந்தக் காலம் போதுமாக இல்லை. ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டிக்கு ஒலிம்பிக் தகுது பெற குறைந்தது 10.00 விநாடிக்குள் பந்தயத் தூரத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
எனவே யுபுனுக்கு அந்த இலக்கை எட்டும் சாத்தியம் இருந்தபோதும் அது சவாலானதாக இருக்கப்போகிறது.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டி என்பது ஒலிம்பிக்கின் உச்சம். இந்தக் குறுகியதூர ஓட்டத்தில் தற்போது உலகில் முன்னணியில் இருப்பவர்கள் அமெரிக்காவின் பிரெட் கெர்லி (9.76 விநாடி), நோஹ் லைலஸ் (9.83 விநாடி) ஆகியோர்.
பாடசாலை மாணவியாக பல சாதனைகளுடன் தங்கப்பதக்கங்களை அள்ளிய 19 வயது தரூஷி மீதான இலங்கையின் எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கிறது. கடந்த ஆண்டு பெண்களுக்கான 800 மீற்றர் போட்டியில் ஆசிய சம்பியன்சிப், ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய கனிஷ்ட போட்டிகளில் அடுத்தடுத்து தங்கப் பதக்கங்களை வென்ற தரூஷியின் ஒலிம்பிக் எதிர்பார்ப்பு என்பது எதிர்காலத்திற்கே பொருத்தமாக இருக்கும்.
கடைசியாக அவர் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றது கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி சீனாவின் ஹன்ஜு நகரிலாகும். அப்போது அவர் போட்டித் தூரத்தை 2 நிமிடம், 01.39 விநாடிகளில் பூர்த்தி செய்து தங்கப்பதக்கம் வென்றார். அதன் பின்னர் அவர் ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே போட்டியிடவிருக்கிறார்.
என்றாலும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை குறைந்தது 1 நிமிடம் 59.30 விநாடிகளில் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் தரூஷியின் சிறந்த காலம் 2 நிமிடம் 00.66 விநாடிகளாகும். அது கடந்த ஆண்டு ஆசிய சம்பியன்சிப் போட்டியில் பதிவு செய்ததாகும்.
எனவே ஒலிம்பிக்கிற்கான அவரது பாய்ச்சல் சற்று தூரமானது என்றாலும் அவர் பயணிக்க வேண்டி தூரமும் நீண்டது.
மே 3 ஆம் திகதி போட்டியில் பங்கேற்கும் மற்றொரு 800 மீற்றர் ஓட்ட வீராங்கனையான 37 வயது கயன்திகா அபேரத்னவின் கதையும் சொல்லும்படியாக இல்லை. கடைசியாக அவர் 2022 பர்மிங்ஹாம் பொதுநலவான விளையாட்டு போட்டியில் தனது சிறந்த காலமான 2 நிமிடம் 01.20 விநாடியை பதிவு செய்திருக்கிறார்.
பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நதீஷா ராமநாயக்கவின் சிறந்த காலம் 52.61 விநாடிகளாகும். ஆனால் பாரிஸ் ஒலிம்பிக் தகுதிக்கு குறைந்தது 50.95 விநாடிகளில் போட்டித் தூரத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும்;. நதீஷா திடுதிடுப்பென்று அப்படி ஒரு இலக்கை அடைவது என்பது பெறும் சாகசமாகவே இருக்கும்.
இவர்கள் தவிர இலங்கைக்காக ஒலிம்பிக் தகுதியை பெறும் எதிர்பார்ப்பில் இருப்பவர்களாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தில்ஹானி லேபம்கே மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்ட அணியினரை குறிப்பிடலாம்.
என்றாலும் இருக்கின்ற கால அவகாசத்திற்கு இடையே இவர்கள் ஒலிம்பிக் அடைவை பெறுவதென்பது அசாதாரண சவாலாகவே இருக்கும்.
எஸ்.பிர்தெளஸ்