சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு விடுமுறைகளுடன் அரசியல் செயற்பாடுகள் மத்தமான நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், கடந்தவார அரசியல் நகர்வுகள் அவ்வாறு அமையவில்லை.
கடந்த வார அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, எதிர்வரும் வாரங்களில் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டின் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்கொண்டுள்ள சவால்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.
இரண்டு தரப்பாகப் பிரிந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியான தீர்மானங்களும், காய்நகர்த்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகச் செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன அப்பதவியில் தொடர்வதற்கு எதிராக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்ததுடன், இதற்கு அமைய மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவையும் வழங்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான அமரர் பண்டாரநாயக்கவின் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா தரப்பினர் அரசியல் குழுவைக் கூட்டி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பதில் தலைவராக நியமிக்கும் தீர்மானத்தை எடுத்தனர்.
எனினும், இந்தத் தீர்மானம் செல்லுபடியற்றதாகுமென்றும், சட்டத்துக்கு முரணானது என்றும் கூறிய மைத்திரிபால சிறிசேன தரப்பினர், கடந்த வார இறுதியில் தமது தரப்பில் அரசியல் குழுவைக் கூட்டி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிப்பது என்ற தீர்மானத்தை எடுத்தனர்.
இந்தக் கூட்டத்தில் சந்திரிகா தரப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லையென்பதுடன், கலந்து கொள்ள அவர்களுக்குப் போதிய காலஅவசகாம் வழங்கப்படவுமில்லை. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்ற போது, விஜயதாச ராஜபக்ஷ பதில் தலைவராகச் செயற்படுவதற்கும், சாரதி துஷ்மந்த பதில் செயலாளராகச் செயற்படுவதற்கும் நீதிமன்றம் மற்றொரு தடையுத்தரவைப் பிறப்பித்தது.
முன்னதாக, மைத்திரிபால சிறிசேன தரப்பினர் நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை கட்சி உறுப்பினர்களுக்கு விரிவுரை நிகழ்த்த அழைத்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு சமயத் தலைவர்கள் உள்ளிட்ட தரப்புக்களிடமிருந்து தனக்கு அழைப்புக்கள் வந்திருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்வை விரைவில் வெளியிடுவேன் எனவும் விஜயதாச ராஜபக்ஷ கூறியிருந்த நிலையில், சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு விரிவுரை நிகழ்த்த அவர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அவர் களமிறக்கப்படப் போகின்றாரா என்ற சந்தேகம் வலுத்தது. இது தொடர்பில் வினவப்பட்டபோது எச்சரிக்கையுடன் பதிலளித்திருந்த விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவில்லையென்றால் மாத்திரமே இந்த அழைப்பைப் பரிசீலிப்பேன் என்று கூறியிருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை கட்சிக்குள் ஏற்கனவே தோன்றியிருந்த சர்ச்சைக்கு புதியதொரு பரிமாணத்தைத் தோற்றுவித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நியமனங்கள் நீதிமன்றங்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன், இதில் சில மனுக்களில் நீதி அமைச்சரும் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டிருப்பதால், நீதிமன்ற விசாரணைகளும் மேலும் சர்ச்சைக்கு வழிவகுக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போதைய சர்ச்சையானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்கான சதி என்று மைத்திரிபால சிறிசேன தரப்பினர் கூறுவது நகைப்புக்குரியது. இருப்பினும், பதில் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அமைச்சரவையில் உறுப்பினராக உள்ளார்.
இதில் மற்றுமொரு நகைப்புக்குரிய விடயம் என்னவெனில், சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இருவரும் அதாவது கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகிய இருவரும் ஒரே அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.
வெவ்வேறு நபர்கள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை மனதில் கொண்டு கட்சியைக் கட்டுப்படுத்துவதற்குப் போராடும் நிலையில், இவ்வாறான முன்னேற்றங்கள் சுதந்திரக் கட்சிக்கு உதவாது என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் சட்டப் போர்கள், சர்ச்சைகளை மேலும் தீவிரமாகி தீர்வுக்கான வாய்ப்புக்களைக் குறைக்கும் என்பதே அவர்களின் அங்கலாய்ப்பு ஆகும்.
நீதிமன்ற தீர்ப்புகள் கட்சியின் உட்பூசல்களுக்குத் தீர்வைத் தருமா என்பது சந்தேகத்துக்குரியதென்று இரு தரப்புகளுடனும் இணையாத கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
அதேநேரம், சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பதவியை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயம் அவருக்கு ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கூறியுள்ளார்.
‘அமைச்சர் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அவர் வேறொரு கட்சியின் தலைவர் பதவியைப் பெற்றதன் மூலம் பொதுஜன பெரமுனவின் யாப்புக்கு எதிராகச் செயற்பட்டுள்ளார். எனவே, அவரது உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டு, அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்’ என திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி கூறிய கருத்துக்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.
இருந்தபோதும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘சுயாதீனமாக’ மாறியுள்ள போதிலும், அவர்களுக்கு எதிராக கட்சி இதுவரை செயற்படவில்லை என அவதானிகள் குறிப்பிடுகின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தில் நிபுணரான அமைச்சர் கலாநிதி ராஜபக்ஷவுக்கு இவ்வாறான விளைவுகள் பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான இழுபறி இவ்வாறானதாக இருக்க, புதிய நியமனங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்திரிகா தரப்பைச் சேர்ந்த பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக துமிந்த திஸாநாயக்கவை நியமித்துள்ளார். அது மாத்திரமன்றி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பணக்கார வர்த்தகர் ஒருவரிடம் கட்சியை விற்பதற்கு முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன முயற்சி செய்ததாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் மஹிந்த அமரவீரவிடமிருந்து அவர் 1 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரியுள்ளார். சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசியல் அரங்கம் மேலும் சூடுபிடித்துள்ளது.
இந்தத் தலைமைத்துவப் போட்டி அடுத்த வாரம் தீவிரமடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தல் இன்னமும் சில மாதங்களில் நடைபெறலாமென்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், எதிர்வரும் மேதினத்தை தமது அரசியல் பலத்தைக் காண்பிக்கும் தளமாகப் பயன்படுத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமக்குத்தான் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை வெளிப்படுத்த அனைத்துக் கட்சிகளும் முயற்சித்துவரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்திருப்பதால் மேதினக் கூட்டத்தை யார் தலைமையில் நடத்துவது என்பது மேலும் சர்ச்சைக்குரியதாக மாறுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழமையைவிட பலமான நிலையில் மேதினக் கூட்டத்தை கம்பஹா நகரசபை மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மைத்திரி தரப்பைச் சேர்ந்த சாரதி துஷ்மந்த தெரிவித்துள்ளார். இருந்தபோதும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தீர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது இவ்விதமிருக்க, நடைபெறவிருக்கும் மேதினக் கூட்டங்கள் சகல கட்சிகளுக்கும் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன. அரசியல் ரீதியில் பின்னடைவைச் சந்தித்திருக்கும் பொதுஜன பெரமுன, தமது மேதினக் கூட்டத்துக்கு அதிகமான ஆதரவாளர்களை அழைத்துவந்து தமது பலத்தை நிரூபிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நடத்தப்படும் முதலாவது மேதினக் கூட்டமாக இது அமையவுள்ளது. நாமல் ராஜபக்ஷவின் நியமனத்தை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் விரும்பவில்லையென தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், மேதினக் கூட்டத்தின் ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு நாமலுக்கான ஆதரவு எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரியாது.
எனினும், மேதின ஒருங்கிணைப்புப் பணிகள் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுவாக இருந்தாலும், நடைபெறவிருக்கும் மேதினக் கூட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்ததான காலப் பகுதியில் நடைபெறக்கூடிய தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் என்பவற்றின் ஒருங்கிணைப்புப் பணிகள் என்பன பொதுஜன பெரமுனவுக்கு சவாலானதாக இருக்கப் போகின்றனவா அல்லது ஆதரவு மிக்கவையாக இருக்கப் போகின்றனவா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மறுபக்கத்தில், நாட்டைப் பொருளாதார ரீதியிலான சரிவிலிருந்து ஓரளவுக்கு மீட்டுக் கொண்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் தன்னைப் பலப்படுத்துவதற்கான கடும் முயற்சியில் இறங்கியுள்ளது.
கட்சியைப் பலப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து முக்கிய உறுப்பினர்களைத் தன்பக்கம் இணைத்துக் கொள்வதற்கான பிரயத்தனங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. சிரேஷ்ட உறுப்பினர்களான கபீர் ஹாசிம், தலதா அத்துக்கோரள, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன உள்ளிட்ட உறுப்பினர்களைத் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ரங்க பண்டார பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
இது குறித்து அவர்கள் எவ்வித பதிலும் வழங்காத நிலையில், எதிர்வரும் அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டே அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் அமைந்திருக்கும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது எதிர்வரும் வாரங்கள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.