Home » தமிழர்களின் அபிலாஷைகளை உலகறியச் செய்யும் திறவுகோல்
பொது வேட்பாளர்:

தமிழர்களின் அபிலாஷைகளை உலகறியச் செய்யும் திறவுகோல்

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்

by Damith Pushpika
April 28, 2024 6:50 am 0 comment

பொது வேட்பாளருக்கான அவசியம் இப்போது ஏன் எழுந்தது?

பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கரு இன்று நேற்றல்ல, யுத்தம் நிறைவடைந்த 2009ஆம் ஆண்டு முதலே அது பேசும் பொருளாகத்தான் இருந்திருக்கிறது. அதற்கான முயற்சிகளும் அப்போதிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதைப் பற்றிய விளக்கம் பொதுவாக பலரிடம் இருக்கவில்லை. ஆனால் தற்போது அதற்கான அவசியம் அதிகளவில் எழுந்திருக்கிறது. காரணம் யுத்தம் முடிவடைந்து தற்போது 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இந்த 15 ஆண்டுகளில், ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்ப்பதற்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தயாராக இருக்கவில்லை. யுத்தம் முடிவடைந்த உடனேயே ஜனாதிபதியாக பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷ, மிகப்பெரிய மக்கள் பலத்தை கொண்டிருந்தார். தமிழர்களின் அபிலாஷைகளுக்கான ஒரு சிறந்த தீர்வை அவரால் தந்திருக்க முடியும். அவ்வாறு தந்திருந்தால் பொது வேட்பாளர் பற்றிய பேச்சு இப்போது எழுந்திருக்காது.

அல்லது முனைப்பெற்றிருக்காது. அதற்குப் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு நாங்களும் ஆதரவு வழங்கினோம். அவரை ஜனாதிபதியாகக் கொண்டு வந்தோம். ஆனால் அவரும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எதுவும் செய்யவில்லை. தமிழர்களை ஏமாற்றிவிட்டு தனி மனிதனாகவே அவர் வெளியேறிவிட்டார். தற்போதைய ஜனாதிபதியும் தமிழ் மக்களுக்கு எதனைத் தரப் போகிறார் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாச, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டே செயல்படுகிறார். அவரும் தமிழ் மக்களுக்கு எதுவும் தரத் தயாராக இருப்பதாக தெரியவில்லை. ஜே.வி.பி.யின் நிலையும் அவ்வாறுதான்.

தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகக் கூட அங்கீகரிக்க அவர்கள் தயாராக இல்லை. இடதுசாரி கொள்கையுடன் செயல்பட்ட அந்தக் கட்சியிடம் கூட தமிழர்களின் இனத் தனித்துவத்தை அங்கீகரிக்கும் எண்ணப்பாங்கு காணப்படவில்லை. தெற்கில் உள்ள கட்சிகளின் செயல்பாடுகள் தமிழர்களுக்கு எதிராக மேலும் முனைப்புப் பெறுகின்றனவே ஒழிய தமிழர்களுக்கு சார்பானதாக இல்லை. எனவே தான் தமிழர்கள் தமக்கான பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முந்திய தேர்தல்களில் தமிழ்த் தரப்பில் ஒரு சாரார் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும், ஒரு பகுதி ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் இம்முறை பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி, அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உலகறியச் செய்ய வேண்டும், அதற்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்ற குரல் தமிழ் மக்களிடம் முனைப்புப் பெற்றிருக்கிறது.

பொது வேட்பாளர் என்பவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம் என்று தமிழர்கள் நம்புகின்றார்களா?

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல, துணை ஜனாதிபதியாக் கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்தேதான் எல்லோரும் செயற்படுகின்றார்கள். இங்கு முக்கியமானது தமிழர்கள் தங்களது அபிலாஷைகளுக்கான அங்கீகாரத்தை இந்த பொது வேட்பாளர் மூலம் கோருகின்றார்கள்.

அப்படியானால் இந்த ‘பொது வேட்பாளர்’ என்பதன் மூலம் என்னென்ன விடயங்கள் முன்வைக்கப்படவுள்ளன?

இங்கு பொது வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல. வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் இந்த பொது வேட்பாளர் மூலம் உலகறியச் செய்யப்பட வேண்டும். தமிழர்கள் தங்களது பாரம்பரிய பூமியில் இறைமையோடு வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு அவர்களது இறைமையை மீட்டுக்கொடுக்கும் வகையிலான சமஷ்டித் தீர்வினை இந்த பொது வேட்பாளர் முன்வைப்பார்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான ஒருகளமாக நாங்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒருபொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கான ஆதரவைக் கேட்போம். எங்கள் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவே பொது வேட்பாளர் களமிறக்கப்படுவதைத் தமிழர்கள் பார்க்கின்றார்கள்.

உங்களது கட்சியான தமிழரசுக் கட்சி இது தொடர்பில் என்ன முடிவெடுத்திருக்கின்றது?

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து தமிழரசுக் கட்சி இதுவரை முடிவெதுவும் எடுக்கவில்லை. ஆனால் பொதுவேட்பாளர் நிறுத்தப்படவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பு.

தமிழர்களை ஒற்றுமைப்படுத்துவது கடினம் என்பது காலம் காலமாகச் சொல்லப்படுவது. இந்நிலையில், பொது வேட்பாளருக்கான ஆதரவு தமிழ் மக்களிடையே எவ்வாறிருக்கும்? அவர்கள் ஒற்றுமைப்பட்டு பொது வேட்பாளருக்கு வாக்களிப்பார்களா?

தமிழர்களின் பெரும் பலவீனமே அதுதான். மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்று எண்ணி எண்ணியே பலவற்றை நாங்கள் கைவிட்டிருக்கின்றோம். 1982ஆம் ஆண்டில் குமார் பொன்னம்பலம் ஜே.ஆர். ஜெயவர்தனவோடு தேர்தலில் போட்டியிட்டார். இலங்கை முழுவதும் ஒரு லட்சத்து எழுபத்தெட்டாயிரம் வாக்குகளை ஒரு தனி மனிதனாக அவர் பெற்றார்.

அதேபோலவே சிவாஜிலிங்கம் இரண்டுமுறை ஜனாதிபதித் தேர்தலில் நின்றார் . ஒருமுறை எண்ணாயிரம் மறுமுறை 13000 வாக்குகளை எந்த பிரசாரமும் இல்லாமல் பெற்றார். நாம் உண்மையான விடயங்களை மக்களிட கொண்டுசெல்லும்போது அவர்கள் நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள்.

வடக்கில் கிட்டத்தட்ட 9 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள். கிழக்கில் 7 லட்சத்துக்குக்கும் குறையாத தமிழ் வாக்காளர்கள் இருக்கின்றார்கள் இதனைவிட, கொழும்பு, மலையகம் போன்ற பகுதிகளில் உள்ள இந்த கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வாக்களிக்கக் கூடிய தமிழர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

எமக்கு லட்சக் கணக்கில் வாக்குகள் விழவேண்டும் என்பதில்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிலைநிறுத்துவதற்கான, தமிழ்க் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்த பொது வேட்பாளரை நிறுத்துவதே பிரதானமானது. இதன் மூலம் தமிழர்களின் கொள்கைகளை நாங்கள் உலகுக்கு உரத்து எடுத்துச் சொல்கின்றோம். எங்களுக்கு இவ்வாறானதொரு தீர்வுதான் வேண்டும் என்று நாங்கள் சர்வதேச சமூகத்துக்கு இதன் மூலம் சொல்கின்றோம். தமிழர்கள் தங்கள் அரசியல் கொள்கைகளை முன்வைப்பதற்கான களமாக இது அமையும். எங்கள் மக்கள் அரசியல் ரீதியாகக் காலூன்றுவதற்கான மிகப் பெரிய பலமாக இது அமையும்.

அவ்வாறான பலம் பெற குறைந்த பட்சம் எவ்வளவு வாக்குகளை நாம் பெறவேண்டும்?

எத்தனை வாக்குகள் பெறுகின்றோமென்பதல்ல இங்கு முக்கியமானது. பத்தாயிரம் வாக்குகள் பெற்றாலும் கூட எங்கள் கொள்கைகளை எத்தனை பேர் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதே முக்கியமானது. தமிழர்கள் இன்னமும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பதிலேயே உறுதியாக இருக்கின்றனர் என்பதை எத்தனை பேர் ஆதரிக்கின்றனர் என்பதே முக்கியமானது. தமிழர்கள் இந்த நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்கள் என்பதை சர்வதேச சமூகத்துக்கு சொல்வதே பொது வேட்பாளர். இம்முறை குறைந்த எண்ணிக்கையானோர் வாக்களிக்கக்கூடும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த எண்ணிக்கை மேலும அதிகரிக்கும். அவ்வாறுதான் எங்கள் அபிலாஷைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

பேசிப்பேசியே எங்களுக்கான களங்களை கைவிட்டவர்கள்தான் நாம். இம்முறை அதனை சரிவரப் பயன்படுத்தினால் அடுத்தமுறை அல்லது அதற்கு அடுத்தமுறை அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

வாக்குகள் மிகச் சிறிய அளவில் கிடைக்கும் பட்சத்தில் அது எமது பேரம் பேசும் சக்தியை பாதித்து விடாதா?

பேரம் பேசும் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் மதிப்படப்படுவதில்லை. மாறாக பாராளுமன்றத் தேர்தலில் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் எத்தனை மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே இம்முறை பொதுவேட்பாளரை களமிறக்காமல் விடுவதன் மூலம் எமது பேரம்பேசும் சக்தியை நாம் மேலும் இழப்போம்.

வாசுகி சிவகுமார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division