நீண்டதொரு வேட்டைக்குப்பின்
விதி வசமாகிறதென் கெதி
சொல்வனங்களில் தேடியலைந்து
காயச்சுள்ளி புறக்கும்
கவிதைப் பறவை நானின்று
அலகுகளின் மொழிநடையில்
அதனாலேயே கட்டுகிறேன்
குருவிக்குரிய கூட்டு அரணாய்
சிறு கூடொன்று
எம கண்டர்களே
இனியேனும்…,
சின்னச், சின்ன கனவுகளை
சிதைத்து விடாதீர்கள்
அதுதான் என் மனசு
ஆற அமரும் ஆறுதல்மடியும்
இன்றில் வசித்தல்
பெரும் பொதியின்
சுமையாகும் களத்தில்
கண்ணிழந்த உலகம்
காலாற்ற விடுவதில்லை
நிறுத்தி வைத்து
நிறுத்து, நிறுத்து
கேள்வி கேட்கின்றன
சாத்தியங்களை
மீறிட்டு சத்தியங்கள்
எல்லா திசைகளும்
எரிச்சலில் முடிகின்றன
பாதுகாப்புக்குள் தான்
பயப்படவேண்டியாயிற்று
வசைகளால் என் வானத்தை
வழி மறித்தவர்களை
இழப்புகள் தந்து இம்சித்தவர்களை
இரக்கமே இன்றி வஞ்சித்தவர்களை
ஆவேசத்தால் தூற்றியவர்களை
அடி மாடாய் துரத்தியவர்களை
இன்னுமென்
எதிர் பார்ப்புகளின் வேரறுத்து
கொன்றொழிக்க திட்டமிட்ட
கோடரிக் காம்புகளை
நினைந்தபடி அலையும் குருவி நான்.