“நிதரிசனமும் நிம்மதியும்” 56 கவிதைகளைத் தாங்கி அண்மையில் வெளிவந்திருக்கின்ற கவிதை நூல். 92 பக்கங்களில் நேர்த்தியான அச்சமைப்பில் கவிதைகள் மலர்ந்திருக்கின்றன. எழுத்து, இலக்கியம், கவிதை என்பவை மக்களுக்கு நல்ல பாதையைக் காட்டுவதாக அமைய வேண்டும் என்ற நன் நோக்கத்தில் எழுத்துலகில் பயணிப்பவர் அமீர் அலி என்பதை அவரின் கவிதைகள் நமக்கு எடுத்தியம்புகின்றன.
பெரும்பாலான அவரின் கவிதைகள் இறை நேசம், பிரார்த்தனை, நபிகளாரைப் புகழ்தல், சமூக நீதி, நன்னெறி என்ற மையக் கருத்துகளில் எழுதப்பட்டுள்ளன.
“எழுத்தினில் தூய்மை தாங்கி
என்றுமே நீதி பேணி
ஒழுக்கமும் மாண்பு மிந்த
உலகினில் நிலைப்ப தற்கு
பழுதிலா நெறியைக் காட்டும்
பாதையைப் புலப்ப டுத்த
எழுதுகோல் கரமெ டுத்தேன்
ஏகனே வலிமை தாராய்”
என்று அவர் தன் எழுத்துப்பணியின் நோக்கத்தை முதற் கவிதையிலேயே தந்து விடுகின்றார். பழுதிலா நெறிகாட்ட வலிமை தருமாறு இறைவனிடம் கையேந்தி அருள்தர வேண்டுகின்ற அவர், எழுத்திலே தூய்மை வேண்டும்- நீதி பேணப்பட வேண்டும் என்ற கொள்கையை ஏற்றவராக முன்னெழுகிறார்.
கவிதை நூல் என்றாலே, புதுக் கவிதை- வசனக் கவிதை நூல்களையே அதிகம் காணக் கிடைக்கின்ற நமது இன்றைய கவிதைச் சூழலில், மரபைப் பயின்று, அதில் தேர்ச்சி பெற்றவராக பல்வேறு பாவடிவங்களிலும் ஓசை நயம் குன்றாத கவிதைகளைக் தருகின்றார் கவிஞர் அமீர்அலி. வாசிப்பு இன்பத்தைத் தருகின்ற படைப்புக்களாக அவை மிளிர்கின்றன.
நூலுக்கு அணிந்துரை,வாழ்த்துரை என்பவற்றை வழங்கியிருக்கின்ற காத்தான்குடி கவிமணி மௌலவி எம்.எச்.எம். புகாரி, பாவலர் சாந்தி முகையதீன் ஆகியோர் கவிஞரின் பாவாக்கத் திறன் குறித்து விதந்துரைக்கின்றனர்.
பாவலர் சாந்தி தனது வாழ்த்தில்,
“அழகுறு மாறாச் சந்தம்
அளவடி, வெண்பா, யாப்பு
கழிநெடில் அகவ லோடு
கருவிளம், புளிமா, தேமா
சொல்லசைச் சீர்க ளெல்லாம்
சொல்லியே வைத்தாற் போல
வெல்லமாய்க் கவிதை பேசும்
வித்தகர்” என்று கவிஞரின் யாப்பிலக்கணப் புலமையை மெச்சுகிறார்.
கவிஞர் அப்துல் காதர் லெப்பையை கவிதை முன்னோடியாகக் கொண்டு புகழ்பூத்த கலை இலக்கிய வாதிகளைப் பெற்றிருக்கின்ற காத்தான்குடி ஊரின் இன்னுமொரு கவிச்சுடராகத் தன்னை இணைத்துக் கொள்ளும் அமீர் அலி, தாய்மண்ணைப் பற்றியும் பாடுகிறார்.
“ஆன்மிகம் விஞ்சும் அரணான தாய்மண்ணாம்
சாத்வீகம் கண்டோர் தலமா யொளிருமெங்கள்
காத்தான் குடியென்னும் கா.
காத்திர மான கனியும் பணிகளினால்
பூத்த மலராய்ப் பொலிவுற்று நிற்குமெங்கள்
காத்தான் குடியென்னும் கா.
சாத்தானி யத்தின் சதிக்கு விலங்கிடும்
பாத்தியம் கொண்ட பதியா யிலங்குமுயர்
காத்தான் குடியென்னும் கா.”
என்று காத்தான் குடியின் அழகை, ஆன்மிக உணர்வுகளை, பண்பாட்டை இன்னிசைச் சிந்தியல் வெண்பாவில் அவர் யாத்திருக்கும் பாங்கு நெஞ்சை ஈர்க்கிறது.
நபிகளார் புகழ் பாடும் அவரின் குறட் பாக்கள் மனதில் பதிகின்றன.
“ஆதி யிறையின் அருளொளியாய் வந்துதித்த
நீதி நெறியெம் நபி.
பொறுமைச் சிகரம் புரவலர் பூமான்
வறுமையில் வாழ்ந்த நபி.
சாந்தி சமாதானம் சத்திய வாழ்வியலை
ஏந்தியே வந்த நபி.”
சந்தம் நடனமிடும் பல கவிதைகள் நூலை அலங்கரிக்கின்றன.
இறையருள் தருமறை
இருள்களை இறைமறை
நிறையொளி அருள்மறையே- உயர்
நெறிபுகல் திருமறையே!
தெளிவுறு வழிமறை
திரைகளை யறுமறை
ஒளியகம் தருமறையே- இந்த
உலகிரு ளறுமறையே!
திருமறை அல் குர் ஆன் தொடர்பாக எழுதப் பட்டுள்ள இப்பாவும் இது போன்ற அவரின் பாக்களும் மரபுக் கவிதை வாசிப்பாளர்களுக்குக் கிடைத்திருக்கின்ற தேன் எனலாம்.
கவிஞர் அமீர் அலி கணித பாட ஆசிரியர், கலைப்பட்டதாரி. 35 வருட காலம் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பவர். அவர் ஓய்வு பெற்ற போது எழுதிய கவிதை “பிரார்த்தனை” யென்ற தலைப்பில் நூலில் இடம் பெற்றுள்ளது.
மாணாக்க ருலகிலுயர்
மதிப்பளித்தாய் அல்லாஹ்-ஒரு
தூணாகித் துயர்களையும்
துணிவளித்தாய் அல்லாஹ்
ஏணியெனத் தோணியென
எனைவரித்தாய் அல்லாஹ்
ஊணுறக்கம் இல்லாமல்
உழைக்கவைத்தாய் அல்லாஹ்!
என்று அவர் பாடுகிறார். ஒரு நல்லாசானாக மதிப்புப் பெற்றிருப்பவர் அவர். அவரின் மாணவர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர், சட்டத்தரணி, பொறியியலாளர், வைத்தியர் பத்திரிகையாசிரியர் ……என்று பல்துறைகளில் பதவியிலிருப்பவர்கள். அவரின் நூல் வெளியீட்டின்போது ஆயிரக் கணக்கான மாணவர்கள் திரண்டு வந்ததையும் அவர்களின் உரையில் நல்லாசானைப் புகழ்ந்துரைத்ததையும் ஊடகங்களில் நேரலை மூலமாகக் காணக்கிடைத்தது. மாணவர் சமூகத்தினர் மத்தியில் தனது தூய ஆசிரியப் பணியின் மூலம் உயர்ந்து நிற்கும் அவர், தனது முதலாவது கவிதைத் தொகுதியை தந்ததன் மூலம் இலக்கிய உலகிலும் மதிப்புப் பெறுகின்றார்.
அவர் இன்னும் பல நூல்களைத் தரவேண்டு மென்பதே இலக்கிய நெஞ்சங்களின் எதிர் பார்ப்பாகும்.
கவிஞருக்கு நமது வாழ்த்துகள்.
வெளியீடு:- பைத்துல் பறக்கத் பதிப்பகம்,
இல 400, தாருஸ்ஸலாம் வீதி,
காத்தான்குடி-06
விலை:- ரூபா 500/-
பாவேந்தல் பாலமுனை பாறூக்