அப்பாவிப் பொதுமக்கள் 250 இற்கு மேற்பட்டோரைப் பலிகொண்டு, சுமார் 500 பேரைப் படுகாயங்களுக்கு உள்ளாக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. ஈஸ்டர் தாக்குதலின் ஐந்து வருட துயரம் சமீபத்தில் நினைவுகூரப்பட்டிருந்தது.
இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்குமுள்ள கிறிஸ்தவ மக்கள் அனுஷ்டித்துக் கொண்டிருந்த வேளையில், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் துயரவடுக்கள் எக்காலத்திலும் மக்களை விட்டு நீங்கப் போவதில்லை. அச்சம்பவத்தை இலகுவில் கடந்து செல்வதென்பது பாதிக்கப்பட்ட மக்களால் இயலாத விடயமாகும்.
அத்தாக்குதல்களில் பலியான மக்கள் அனைவரும் அப்பாவிகளாவர். பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் கூடியிருந்தவர்களே அதிகளவில் கொல்லப்பட்டனர். பலியானோரின் பரிதாபங்கள் ஒருபுறமிருக்க, அவர்களது உறவினர்களின் துயரம் ஆயுள்வரை தீரப்போவதில்லை.
அதேசமயம், அத்தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்களில் சிலர் இன்னுமே நடமாட முடியாத நிலையில் அவலப்படுகின்றனர். எந்தவொரு குற்றத்திலும் சம்பந்தப்படாத அம்மக்களை பயங்கரவாதம் தண்டித்து விட்டது.
ஈஸ்டர் தாக்குதல் நிலைவரம் அவ்வாறிருக்கையில், அச்சம்பவத்தை சாதகமாகப் பயன்படுத்தி ஆதாயம் தேடுவதிலும், பிரபல்யம் தேடுவதிலும் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதை ஆரம்பத்திலிருந்தே காண முடிகின்றது. பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்ற ஊடகங்களும் இவ்வாறுதான் நடந்து கொள்கின்றன.
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து கண்டபடி கட்டுரைகளையும் ஆதாரமற்ற தகவல்களையும் வெளியிடுவது போன்ற அபத்தமான காரியங்களை சில ஊடகங்கள் புரிந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஆதாரமற்ற செய்திகள் நாட்டில் இனஐக்கியத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தி விடுமென்பதை மறந்து விடலாகாது.
ஈஸ்டர் சம்பவத்தின் பின்னணி மற்றும் அதன் சூத்திரதாரிகள் யாரென்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்தைச் சார்ந்ததாகும். அச்சம்பவம் தொடர்பாக எவரும் தாமாகவே கண்டபடி ஊகங்களையும், குற்றச்சாட்டுகளையும் பொதுவெளியில் முன்வைப்பது ஆரோக்கியமானதல்ல.
ஈஸ்டர் தாக்குதலானது முற்றுமுழுதான பயங்கரவாத குற்றச்செயல் ஆகும். அக்குற்றச்செயலை சாதகமாக வைத்து அரசியல் செய்ய முற்படுவது நாகரிகமல்ல. ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமீப காலத்திலும் ஓரிருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்திலும் கடந்த புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் முழுநாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும், பல ஊடகங்களும் ஊகங்களையும், ஆதாரமற்ற செய்திகளையும் வெளியிட்டு வருவது தவறான காரியமென்பதே உண்மை. குற்றச்செயலின் உண்மையான பின்னணியை நீதிமன்றம் தீர்மானிக்கும்வரை பொறுப்பற்ற முறையில் கருத்துகளை வெளியிடுவது முறையானதல்ல.