ஈரான்- இஸ்ரேல் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவிக் கொண்டிருக்கும் சூழலில், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (19.04.2024) அதிகாலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது, இஸ்பஹான் வடக்கு கிழக்கு பகுதிகளின் ஆகாயத்தில் மூன்று ட்ரோன்கள் (Micro air vehicles) தாக்கியழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஈரானிய பாதுகாப்பு தரப்பினர், தப்ரீஸ் பிராந்தியத்திலுள்ள ஆகாயப் பாதுகாப்பு கட்டமைப்பு செயற்படத் தொடங்கியதோடு, சந்தேகத்திற்கிடமான பறக்கும் பொருட்கள் இஸ்பஹான் சர்வதேச விமான நிலையப் பகுதி, ஹஸ்டம் சஹரி விமானத்தளம், வடகிழக்கு இராணுவத்தளம் ஆகிய பகுதிகளிலும் தாக்கியழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இஸ்பஹான் என்பது ஈரானின் பாரிய விமானத்தளம், பாரிய ஏவுகணை உற்பத்தி கட்டடத் தொகுதி மற்றும் அணுநிலைகள் அமைந்திருக்கும் முக்கிய பகுதியாகும்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து தமது வான்பரப்பையும் இஸ்பஹான் மற்றும் இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையங்களையும் விமானப் போக்குவரத்துக்கு உடனடியாக மூடிய ஈரான், இஸ்பஹான் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த பயணிகள் விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனாலும் இத்தாக்குதலைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்துக்காக உடனடியாக மூடப்பட்ட விமான நிலையங்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டதோடு மக்களும் வழமையான பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.
இத்தாக்குதலால் ஈரானின் அணுநிலையங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஐ. நா அணுசக்தி கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
அதேநேரம் சிரியாவின் தெற்கு பகுதி பாதுகாப்பு தளத்தின் மீதும் ஈராக்கிலும் கூட தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் தம் மீது கடந்த 13 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டு வந்த இஸ்ரேல், அதற்கான முஸ்தீபுகளிலும் ஈடுபட்டது. ஆனால் ஈரான் மீது உடனடியாக பதில் தாக்குதல் நடாத்த வேண்டாம் என்று குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவ்வாறு தாக்குதல் நடாத்தினால் தாம் ஆதரவோ ஒத்துழைப்போ அளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை கடந்த புதனன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்த பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் கமரூனும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரும் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாமென இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டனர்.
இருந்தும் கூட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘எமது நண்பர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளுக்கு நன்றி. எங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்போம். எம்மைப் பாதுகாக்க எமக்கு உரிமை உள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரான், எம்மீது இஸ்ரேல் மீண்டும் சீண்டினால் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. இவ்வாறான சூழலில்தான் ஈரான் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள தமது கொன்சியூலர் அலுவலகத்தின் மீது ஏப்ரல் முதலாம் திகதி மேற்கொண்ட விமானத் தாக்குதலுக்கும் அத்தாக்குதல் ஊடாக குடியரசுப் படையின் குத்ஸ் படைப் பிரிவு சிரேஷ்ட தளபதி பிரிகேடியர் ஜெனரல் முஹம்மட் ரெஸா சாஹிடி, அவரது பிரதி தளபதி ஜெனரல் முஹம்மட் ஹடி ஹஜ்ரியஹிமி உட்பட 13 பேர் கொல்லப்பட்டதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் கடந்த சனியன்று இரவு (13.04.2024) இஸ்ரேல் மீது தாக்குதலை நடாத்தியது. தற்கொலை ட்ரோன்கள், குரூஸ் ஏவுகணைகள், பிளாஸ்டிக் ஏவுகணைகள் என்பவற்றைக் கொண்டு இஸ்ரேலின் 170 இலக்குகள் மீது இரண்டு மணித்தியாலங்கள் தாக்குதல்களை முன்னெடுக்கப்பட்டன.
‘உண்மையான வாக்குறுதி’ எனப் பெயரிட்டு ஈரானின் புரட்சி காவல் படையினர், ஈரானிலிருந்து சுமார் 1200 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இஸ்ரேலின் நிலைகள் மீது மேற்கொண்ட இத்தாக்குதலுக்கென 170 தற்கொலை ட்ரோன்களையும், 120 பிளாஸ்டிக் ஏவுகணைகளையும் 30 குரூஸ் ஏவுகணைகளையும் பயன்படுத்தினர்.
கொன்சியூலர் அலுவலகம் தாக்கப்பட்டு 14 நாட்கள் கடந்த பின்னர் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்திய சமயம், ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லாக்கள், யெமனின் ஹுதிக்கள், ஈராக், சிரிய போராளிக்குழுக்களும் கூட இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இஸ்ரேல் மீது முன்னெடுத்துள்ளன.
ஆன போதிலும் இஸ்ரேல், ‘ஈரான் பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளில் 99 வீதமானவற்றை இடைமறித்து அழித்துவிட்டோம்’ என்றது. இத்தாக்குதலால் இஸ்ரேலின் நப்டிம் விமான தளம் உள்ளிட்ட சில இடங்கள் சேதமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதோடு, 7 வயது சிறுமியொன்று காயமடைந்திருப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் 1991 இல் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய பின்னர் எந்தவொரு நாடும் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தவில்லை. இவ்வாறான நிலையில் கடந்த சனியன்று இரவு ஈரான் தமது நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது முதற்தடவையாக தாக்குதல்களை நடாத்தியதோடு, தமது தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறைவுற்றிருப்பதாகவும் குறிப்பிட்டது.
இந்நிலையில், இஸ்ரேல் ஈரானுக்கு பதிலடி கொடுப்பதாகக் குறிப்பிட்டதோடு, அதற்கான முஸ்தீபுகளையும் உடனடியாக ஆரம்பித்தது. அதனால் ஈரான், தனது எல்லைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியதோடு, ஏவுகணைகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதத் தளபாடங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நிழல் மோதலில் ஈரானும் இஸ்ரேலும் ஈடுபட்டு வருகின்றன. இச்சூழலில் காஸா மீதான இஸ்ரேலின் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து ஈரானின் குடியரசு படைத்தளபதிகள் சிரியாவில் அவ்வப்போது இலக்கு வைத்து கொல்லப்பட்டனர். குறிப்பாக கடந்த டிசம்பர் 2 இல் பிரிகேடியர் ஜெனரல்களான பனஹ் தஹிஸடேஹவும், முஹம்மத் அலி அட்டேயும் டிசம்பர் 25 இல் ஈரானுக்கும் சிரியாவுக்கும் இடையில் இராணுவ கூட்டணி ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட ஈரானின் குடியரசு படையின் சிரேஷ்ட ஆலோசகர் செய்யத் ராஸி முசவியும், 2024 ஜனவரி 20 இல் குடியரசு படையின் குத்ஸ் படைப்பிரிவு பிரிகேடியர் ஜெனரல் ஹஜ்ஜத்துல்லா ஒமிட்வாரும், மார்ச் 26 இல் குடியரசு படை ஆலோசகர்களில் ஒருவரான பெஹ்ரூஸ் வாஹிடியும் ஏவுகணைத் தாக்குதல் மூலமும் விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஏப்ரல் முதலாம் திகதி கொன்சியூலர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு, குத்ஸ் படைப்பிரிவின் சிரேஷ்ட தளபதி, அவரது பிரதி தளபதி உட்பட 7 பேரும் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் குடியரசுப் படையின் முக்கியஸ்தர்கள் இலக்கு வைத்து கொல்லப்பட்ட சந்தர்ப்பங்களில் பொறுமை காத்து வந்த ஈரான், இச்சமயம் கொதித்தெழுந்ததோடு, “இது இஸ்ரேலின் நடவடிக்கை, இதற்குப் பழி வாங்கப்படும், பதிலடி கொடுக்கப்படும்” என்றும் அறிவித்தது. உரிய நேர காலத்தில், தகுந்த இடங்கள் இலக்கு வைக்கப்படும் என்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமெனெய்வும் ஜனாதிபதி இப்றாஹீம் ரய்சியும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு உச்சகட்ட பதற்றம் நிலவிக் கொண்டிருந்த சூழலில் தான் கடந்த 12 ஆம் திகதி வளைகுடாவின் ஹெர்முஸ் நீரிணைக்கு அண்மித்த யூ.ஏ.ஈ இன் அல் புரைஜா துறைமுகத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் வைத்து எம்.எஸ்.சி அரீஸ் (MSC Aries) என்ற பெயர்கொண்ட சரக்குக் கப்பல் போர்த்துக்கல் கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது, ஈரானிய குடியரசு காவல் படையினரால் கைப்பற்றப்பட்டது. இது இஸ்ரேலிய கோடீஸ்வரரான எயல் ஒபெர் ((EYal ofer) என்பவருக்கு சொந்தமான சோடியாக் மரிடைம் நிறுவனத்தால் இயக்கப்படும் கப்பல் என்பதால், இக்கப்பலை குடியரசு படையினர் கைப்பற்றியமையை இஸ்ரேல் கடுமையாக கண்டித்ததோடு, ஈரானுக்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.
இந்நிலையில் ரஷ்யா, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானில் தாக்குதல் நடத்துமாயின் ஈரானுக்கு நேரடி ஒத்துழைப்புக்களையும் ஆயுத தளபாடங்களையும் நாம் வழங்குவோம் என்றது. ஆனால் அமெரிக்காக உள்ளிட்ட மேற்குலக நாடுகள் வழமை போன்று இஸ்ரேலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்ததோடு ஈரானையும் கண்டித்தன.
இவ்வாறான சூழலில் ஈரானைத் தாக்கவென எமது வான் பரப்பை பயன்படுத்த இடமளிக்கப்படாது என்று சவுதி அரேபியா, குவைட், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில்தான் ஈரான் மீது வெள்ளிக்கிழமை அதிகாலையில் தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இது ஈரான்- இஸ்ரேல் உச்சகட்ட முறுகலை மேலும் வலுப்படுத்தியுள்ளதோடு மூன்றாம் உலக யுத்தத்திற்கு வித்திடுமோ என்ற அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது.
மர்லின் மரிக்கார்