மதீஷ பதிரண இலங்கையை பொறுத்தவரை லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் ஒரு சாதாரண வீரர். ஆனால் இந்திய பிரீமியர் லீக்கில் ஆட்டத்தை திசைதிருப்பக் கூடிய ஒரு அசாதாரண வீரர்.
மதீஷ இலங்கை அணிக்காக இதுவரை 12 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 6 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கிறார். அவரது ஆட்டத்தில் தொடர்ச்சித் தன்மை இருக்காது, ஒரு நாளைக்கு அபாரமாக பந்துவீசும் அதேநேரம் மற்ற நாளைக்கு அவரது பந்துவீச்சு படுமோசமாக இருக்கும்.
இலங்கை அணிக்காக இதுவரை ஒருநாள் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் அவரின் பந்துவீச்சு சராசரியும் பெரிதாக சொல்வதற்கு இல்லை…. 36.23 வீதம் தான். டி20 கிரிக்கெட்டிலும் இதே நிலை தான் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் அவரது பந்துவீச்சு சராசரி 17.09.
கடந்த மாத ஆரம்பத்தில் சில்ஹட்டில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆடியபோது உபாதைக்கு உள்ளான அவர் தொடர்ந்து இலங்கை அணிக்கு ஆடாத நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டும் பறிபோகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் உடல் தகுதி பெற்ற அவர் சென்னை அணிக்கு திரும்பி இருக்கிறார்.
அவரது ஆட்டம் சென்னை அணிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. குறிப்பாக கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் முழுக்க முழுக்க பத்திரணவின் போட்டியாக மாறியிருந்தது. சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 207 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா சதம் அடிக்க வெற்றியை நெருங்கியது. என்றாலும் பத்திரண ஆட்டத்தை முழுமையாக திசை திருப்பினார். தனது 4 ஓவர்களுக்கும் 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். பத்திரண இப்போது ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான ஊதா தொப்பியை பெறும் போட்டியில் இருக்கிறார்.
சென்னை அணி மதீஷ மான்மியத்தை பாடி வருகிறது. ஆனால், இலங்கைக்கு அந்த மந்திரம் புரியவில்லை. சில நேரம் அவர் இலங்கை உடையில் ஆடும் போட்டிகளில் பந்து வீசுவதை பார்ப்பதற்கு சகிக்காது. பந்து கோணல் மாணலாகப் போகும். வைட் போடுவது மாத்திரமல்ல, அந்த வைட் பந்து விக்கெட் காப்பாளருக்குக் கூட பிடிக்க முடியாத அளவுக்கு அகலச் செல்லும்.
ஆனால் கடந்த முறை சென்னை அணி சம்பியன் கிண்ணத்தை வென்றபோது அதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்த மதீஷ, இம்முறையும் தனது திறமையை முழுமையாக பயன்படுத்தி வருகிறார்.
இது யாரின் குறை என்பது தான் புரியவில்லை. மதீஷ சென்னை அணிக்கு மாத்திரம் சிறப்பாக ஆடுகிறாரா? இல்லை சென்னை அணி அவரை சரியாகப் பயன்படுத்துகிறதா? என்ற இரண்டு கேள்விக்கே பதில் தெரிய வேண்டி இருக்கிறது.
‘சென்னை சுப்பர் கிங்ஸ் என்னை பொறுத்தவரை மிக முக்கியமானது. அது எனது வாழ்வை முழுமையாக மாற்றியது. ஐ.பி.எல். இற்கு முன்னர் யாரும் என்னை அடையாளம் காணவில்லை. ஆனால், தற்போது நான் இலங்கையின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். அனைத்துக்கும் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்’ என்கிறார் பத்திரண.
பத்திரணவின் வழக்கத்திற்கு மாறான பந்துவீச்சு பாணி, அவர் நேர்த்தியாக பந்துவீசுவதற்கு சிரமமானது. பந்து அடிக்கடி வைட்டை நோக்கிச் செல்லும். பந்தைத் துல்லியமாக வீசுவதற்கு அவருக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிமன்ஸ் கடுமையான பயிற்சிகளை வழங்குகிறார்.
‘நான் அவருக்கு இலக்கொன்றை வழங்கி அந்த இலக்கை நோக்கி பந்தை வீசும்படி கூறுவேன். அவர் தனக்கே உரிய பாணியில் அதனை செய்வார். அப்படித்தான் நாம் அவருக்கு பயிற்சி அளிப்போம். அவருக்கு கையுறை ஒன்றைக் கொடுத்து அந்த கையுறையில் படும் வகையில் பந்துவீச கூறுவேன். ஆடுகளத்தின் விளிம்பில் இலக்கொன்றை கொடுத்து அதன் மீது பந்துவீச கொடுப்பேன்’ என்று விளக்குகிறார் சிமன்ஸ்.
என்றாலும் ஒன்று மாத்திரம் நன்றாக புரிகிறது, மதிஷ எப்படித்தான் சிறப்பாக பந்து வீசினாலும் அவரை சென்னை அணி ஒரு முழுமையான பந்துவீச்சாளராக கையாள்வதில்லை. சென்னை அணி ஆடிய முதல் ஆறு போட்டிகளிலும் பதிரண மூன்று ஆட்டங்களில்தான் ஆடினார். அதற்கு அவரது உபாதையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. பெரும்பாலும் புதுப் பந்தில் அவர் பந்துவீச அழைக்கப்படுவதில்லை. மத்திய ஓவர்கள் அல்லது கடைசி ஓவர்களில்தான் அவர் பயன்படுத்தப்படுகிறார். தேவைக்கு ஏற்ப அல்லது தேவையை ஏற்படுத்தியதாகவே அவரது பந்துவீச்சு இருக்கும்.
அபாரமாக பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பைக்கு எதிரான போட்டி பற்றி அவர் கூறும்போது, ‘பவர் பிளேயில் பந்துவீசும்போது உண்மையில் நான் சற்று பயப்பட்டேன். அப்போது தோனி பாய் என்னிடம் வந்து அமைதியாக செயற்படும்படி கூறினார். எனக்கு எப்போதும் அவர் மன உறுதியை தருவதோடு அது சிறப்பாக செயற்படுவதற்கு நம்பிக்கை அளிக்கிறது. எனது வெற்றிக்கு வழக்கமான விடயங்கள் போதுமானது. தோனி பாயிடம் இருந்து கிடைக்கும் ஊக்கம், பந்து வீசுவதற்கான ஓட்டம், விக்கெட்டுக்கு பந்தை வீசுவது மற்றும் யோக்கர்களை போடுவது அனைத்தையும் செய்வதற்கு உதவுகிறது. அதனை நான் சரியாக நிறைவேற்றினால் எப்போதும் வெற்றி தருவதாக உள்ளது’ என்கிறார்.
பத்திரணவின் இயக்கத்திற்கு மைதானத்தில் தோனியின் இருப்பு என்பது முக்கிய காரணியாக இருப்பது சென்னை அணியின் ஒவ்வொரு போட்டியை பார்க்கும்போதும் புரிகிறது. ஆனால், பத்திரண இலங்கை அணிக்கு ஆடும்போது தோனி போன்ற ஆளுமை அவருக்கு கிடைப்பதில்லை. அப்படியான சூழலுக்கு அவர் பழகிக் கொள்ளவும் கூடாது. எப்போதுமே தோனியின் நிழலிலேயே அவரால் கிரிக்கெட் ஆடவும் முடியாது.
உண்மையில் பத்திரணவின் திறமை என்பது இப்போதைக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அதனை சென்னை அணி கச்சிதமாக பயன்படுத்துகிறது.
என்றாலும் அவருக்கு இப்போதுதான் 21 வயதாகிறது. ஒரு தேர்ந்த பந்துவீச்சாளராக முதிர்ச்சி அடைவதற்கு இன்னும் அவருக்கு அவகாசம் இருக்கிறது. அதனை அவர் சரியாகச் செய்தாலேயே முன்னேற முடியும். இல்லாவிட்டல் அவரது திறமை என்பது சென்னை அணிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.
எஸ்.பிர்தெளஸ்