மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2,000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதே தனது நிலைப்பாடாகுமென, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பத்தரமுல்ல இசுருபாயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்த போது,
“தற்போதைய நிலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாவோ அல்லது 2,000 ரூபாவோ சம்பளம் வழங்கினாலும், அதுவும் போதாது.
200 ரூபா சம்பள அதிகரிப்புக்கே கம்பனிகள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், இதற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 2,000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும். 2,000 ரூபாவுக்கு மேல் சம்பள அதிகரிப்பு இடம்பெற வேண்டும் .
பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றது முதல் நட்டமென்றே கம்பனிகள் தெரிவித்து வருகின்றன. இலாபம் இல்லையேல் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளிக்கலாம். ஆனால் கம்பனிகள் அவ்வாறு கையளிப்பதில்லை. இதற்கு காரணம் கம்பனிகள் நட்டத்தில் இயங்கவில்லையென்பதாகும்” என்றார்.