ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 16 இணக்கப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
“மகாபாரதத்தின்” பிரகாரம் ராவணன் சீதையை கடத்தி வந்ததன் பின்னர், சீதையைக் காப்பாற்றுவதற்கு ராமர் இலங்கைக்கு வந்தது அனுமானால் இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பதற்கு நிர்மாணிக்கப்பட்ட பாலத்தின் ஊடாகவாகும். வால்மிகியின் ராமாயணத்திலும் இது பற்றிய குறிப்பு உள்ளது. ஆதாமின் பாலத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகள் இன்றும் மன்னார் தீவு மற்றும் இராமேஸ்வரதுக்கும் இடையே காணப்படுகின்றன.
கடந்த காலங்களைப் போன்று தற்காலத்திலும் இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன. இந்தப் பேச்சுக்கள் முதலில் ஆரம்பித்தது 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்திலாகும்.
அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த வேலைத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்ட ஒரு வேலைத்திட்டம் என்னவெனில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்றை நிர்மாணித்து இரு நாடுகளையும் இணைப்பதேயாகும். பிரதமர் ரணிலின் இந்திய விஜயத்தின் போது அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதனடிப்படையில் அடிப்படை சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாலம் அமைப்பதன் நோக்கமாக இருந்தது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பொருட்களை கொண்டு வந்து கொழும்பு துறைமுகத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்வதாகும். கொள்கலன் வாகனங்களைப் பயன்படுத்தி கொழும்பு வரைக்கும் பொருட்களைக் கொண்டு செல்வதற்குத் திட்டமிடப்பட்டதுடன், அதற்காக அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. அப்போது பெரிய கப்பல்கள் சென்றடையக்கூடிய துறைமுகங்கள் இந்தியாவில் இல்லாததால், இந்தியா தனது பொருட்களை சிறிய கப்பல்கள் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்தது. கப்பல் கட்டணத்தைச் சேமிக்க அவர்களுக்கு தரைவழிப் பாதையும் தேவைப்பட்டது.
எனினும், 2004இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இத்திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு மீண்டும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடிய போதிலும் அப்போது அவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். வங்காள விரிகுடாவின் குறுக்கே கப்பல் வழித்தடத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா ஏற்கனவே ஆரம்பித்து, ஆதாம் பாலத்தை கைவிட்டது.
இந்தியாவின் தோல்வியடைந்த திட்டங்களின் பட்டியலில் சேது சமுத்திரத் திட்டம் சென்ற போது, அதானி நிறுவனத்தினால் உலகில் பெரிய கப்பல்கள் வரக்கூடிய துறைமுகம் இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டது. அவ்வாறான பின்னணியில், 2022 ஜூலையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து, இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது 16 விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு ஜனாதிபதி செயற்குழுவின் பிரதானியும், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, இந்திய அதிகாரிகளுடன் இது குறித்து ஆலோசிப்பதற்காக அவரும் ஒரு குழுவினரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு புறப்பட்டனர்.
இந்திய வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ராவை சந்தித்துப் பேசிய குழுவினர், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கும் இடையே ஏற்பட்ட 16 ஒப்பந்தங்கள் குறித்து கலந்துரையாடினர். அந்த 16விடயங்கள் பின்வ
பொருளாதார நில வழித்தடத்தை உருவாக்குதல், இரு நாடுகளின் மின் கட்டங்களுக்கு இடையே ஒரு தொடர்பை உருவாக்குதல் (Power Grid Interconnection), பல் உற்பத்தி எண்ணெய் குழாய் அமைத்தல், LNG ஆலைகள் அமைத்தல், சம்பூர் சூரிய மின் திட்டம், திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி திட்ட முன்முயற்சி புரிந்துணர்வு ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரிந்துணர்வு ஒப்பந்தம், காங்கேசன்துறை துறைமுக மீள் அபிவிருத்தி, பால் பண்ணை திட்டங்கள், எட்கா ஒப்பந்தம், விமான நிலைய அபிவிருத்தி திட்டம், மீன்பிடி, இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் (SLUDI திட்டம்), திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி, திருகோணமலையில் அப்பர் டேங்க் பண்ணையின் (UTF) அபிவிருத்தி. இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைகள் என்பன இந்த 16 விடயங்களில் அடங்கும்.
இந்த புதிய பாலம் எரிபொருள் குழாய் மற்றும் மின்சாரம் என்பனவற்றை இரு நாடுகளுக்கு இடையே பரிமாற்ற ஊடகமாக பயன்படுத்த உதவும். பாலத்தின் வழியாக சைபர் வயரிங் அமைப்புகள், மின்சார வயரிங் அமைப்புகள் மற்றும் எண்ணெய் குழாய்கள் ஆகியவை பாதுகாப்பையும் வசதியையும் கொண்டு வரும் என்பது இரகசியமல்ல.
இந்திய அரசாங்க தரப்பினர் எதிர்காலப் பணிகள் குறித்த அவர்களது முதற்கட்ட ஆய்வுகளை வழங்கிய பின்னர், இலங்கையில் ஆய்வு அறிக்கைகளை வழங்கி பாலத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகக் காலத்தின் போது, செயற்பாடுகளை ஆரம்பித்து நிறைவு செய்வதற்காக ஜனாதிபதி செயற்குழுவின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அவரது குழுவினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இரண்டு வருட திட்டமான இத்திட்டத்தை விரைவாக முடிப்பதன் மூலம் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
கடந்த காலத்தில் இலங்கை நிலம் மூலம் இணைக்கப்பட்டதற்கான எழுத்துபூர்வ ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், புராணக்கதைகள் உள்ளன. அதேபோன்று எழுபதுகளில் தலைமன்னார் துறை வரைக்கும் புகையிம் மூலமும், படகுகளிலும் இந்தியா சென்றதாக கடந்த காலத்தை நினைவு கூர்ந்தவர்கள் கூறுகின்றனர். அவர்கள் கொழும்பு புகையிரத நிலையத்தில் பெறப்பட்ட பயணச்சீட்டு மூலம் இந்தியா சென்றதாக கூறப்படுகிறது.
எனினும், 80களின் பின்னர் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த வாய்ப்பு அந்தக் குழுவினருக்கு இல்லாமல் போனது. எனினும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் சாகல ரத்நாயக்கவும் தவறவிட்ட சந்தர்ப்பத்தை புதிய முறையின் மூலம் நாட்டுக்கு மீட்டெடுக்க முயற்சிக்கின்றனர். அது ஒரு பாலம் கட்டுவதன் மூலமாகும். அந்த வாய்ப்பு வெற்றியடையும் பட்சத்தில் அது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எம். எஸ். முஸப்பிர்