கோன் ஐஸ் வாங்கி, அதிலிருக்கும் ஐஸ்கிரீமை அடுத்தவருக்குக் கொடுத்துவிட்டு அந்த வேஃபர் கோனை மட்டும் சாப்பிடும் பழக்கம் நம்மில் அதிகமானோருக்கு இருக்கிறது. அந்த கோன் எப்படி அறிமுகமானது என தெரியுமா? Italo Marchion என்பவரால் 1896ஆம் ஆண்டு நியூேயார்க்கில் ஐஸ்கிரீம் கோன் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான உரிமையை 1903ஆம் ஆண்டு அவர் பெற்றார். ஆனாலும் ஐஸ்கிரீம் கோன் அறிமுகமானது வேறொரு இடத்தில்.
1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடந்த பொருட்காட்சியில் ஐஸ்கிரீம் கடை ஒன்று மிக அதிகமாக ஐஸ்கிரீம்களை விற்றுத் தீர்த்தது. ஒரு கட்டத்தில் ஐஸ்கிரீமை வைத்துக் கொடுக்க தட்டுகள் தீர்ந்து போன நிலையில், பக்கத்துக்கடையில் இருந்த Hamwi என்பவர் உதவிக்கு வந்தார். அவர் வேஃபர் போன்ற பிஸ்கட்டுகளைச் செய்து விற்றுக்கொண்டிருந்தார்.
ஐஸ்கிரீம் கடை அளவிற்கு அவர் கடையில் கூட்டமில்லை. ஐஸ்கிரீம் கடைக்காரரின் பிரச்சினையைப் புரிந்துகொண்ட அம்மனிதர், தன் பிஸ்கட்டுகளை கோன் வடிவில் செய்து அதில் ஐஸ்கிரீம்களை வைத்துக் கொடுக்கச் சொன்னார். அந்த ஐடியா வேலை செய்ய, அன்றிலிருந்து பிரபலமானதுதான் ஐஸ்கிரீம் கோன்.