சதம் பெறாது சாதனை
பங்களாதேஷுக்கு எதிராக சட்டொக்ராமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 531 ஓட்டங்களை பெற்றபோதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்தது. அந்த இன்னிங்ஸில் இலங்கையின் எந்த வீரரும் சதம் பெறவில்லை. நிஷான் மதுஷ்க (57), திமுத் கருணாரத்ன (86), குசல் மெண்டிஸ் (93), தினேஷ் சந்திமால் (59), தனஞ்சய டி சில்வா (70) மற்றும் கமிந்து மெண்டிஸ் (ஆட்டமிழக்காது 92) என்று ஆறு வீரர்கள் அரைச்சதம் பெற்றபோதும் ஒருவர் கூட சதம் சேர்க்கவில்லை.
அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரரும் சதம் பெறாது இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக இது சாதனை படைத்தது.
அதுவும் கிட்டத்தட்ட 48 ஆண்டு சாதனையையே இலங்கை அணி முறியடித்தது. 1976 ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 524 ஓட்டங்களை பெற்றது. ஆனால் ஒருவர் கூட சதம் பெறவில்லை. அதிகூடிய ஓட்டங்களே மஹிந்தர் அமர்னாத் பெற்ற 70 ஓட்டங்கள் தான்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சில்ஹெட்டில் பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களை பெற்றபோது தனஞ்சய டி சில்வா (102) மற்றும் கமிந்து மெண்டிஸ் (102) இருவரும் சதம் பெற்றனர். இருவரும் இணைந்து இரட்டைச் சத இணைப்பாட்டத்தை (202) கூட பகிர்ந்து கொண்டனர். இதன்மூலம் இரட்டைச் சத இணைப்பட்டம் பெறப்பட்ட இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற மிகக் குறைந்த மொத்த ஓட்டங்களாக அது சாதனை படைத்திருந்தது.
பரிதாப சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் எடுக்கக் கூடாத சாதனையை சில வீரர்கள் படைத்திருக்கிறார்கள். அதாவது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் மரணத்தவர்கள் என்ற சாதனை கவலையானது.
அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்தவர் பங்களாதேஷ் சகலதுறை வீரர் மன்சூருல் இஸ்லாம் ரானா. 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். ஆனால் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குல்னாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் கொல்லப்படும்போது அவருக்கு 22 வயது மாத்திரமே.
இந்த வரிசையில் அடுத்த இடத்தில் இருப்பவர் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆர்ச்சி ஜன்சன். இவர் 1929 ஆம் ஆண்டு அடிலெயிட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தனது கன்னி டெஸ்ட் போட்டியிலேயே 164 ஓட்டங்களை பெற்றார். அப்போது அவருக்கு வயது வெறும் 19 தான். ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து காசநோய் காரணமாக அவர் மரணித்தார்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலும் மரணித்த இளம் வீரர் என்ற சாதனையும் மன்சூருக்கே சேரும். அவர் மரணிக்கும்போது 25 ஒருநாள் சர்வதேச போட்டிளில் ஆடி இருந்தார். இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் இலங்கையில் ஸ்டான்ட்லி டி சில்வா உள்ளார். இரண்டே இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடிய அவர் 1980 இல் வீதி விபத்தொன்றில் மரணிக்கும்போது வயது 23.
டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் மரணித்தவர் என்ற கவலை அவுஸ்திரேலியாவின் பிலிப் ஹகஸை சாரும். 2014 ஆம் ஆண்டு நடந்த போட்டி ஒன்றில் பந்து தலையில் பட்டு மரணிக்கும்போது அவரது வயது 26 தான் ஆகிறது. அவர் 26 டெஸ்ட், 25 ஒருநாள் சர்வதேச போட்டிகளுடன் ஒரே ஒரு டி20 சர்வதேச போட்டியில் ஆடியிருந்தார்.