இலங்கை தேசமானது ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய ரீதியான தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் தற்போதைய நிலையில், அரசியல் தலைவர்கள் இதற்காகத் தம்மைத் தயார்படுத்துவதில் தீவிரம் காட்டுகின்றனர்.
நன்கு கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தீவிரமான மந்திராலோசனைகளில் ஈடுபட்டு வருவதுடன், குறுகிய காலத்தில் பல அரசியல் கூட்டணிகளும் தோன்றியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் நடுப்பகுதியில் நடத்தப்பட வேண்டியிருக்கும் நிலையில், அதற்கு முன்னர் பொதுத்தேர்தலொன்று நடத்தப்படுமா என்ற விவாதங்களும் அரசியல் அரங்கத்தில் மேலோங்கியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்பதை தற்பொழுது பெரும்பான்மையைக் கொண்டுள்ள பொதுஜன பெரமுன கட்சி விரும்புவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது விடயத்தில் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பதாகத் தெரிகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார சீர்திருத்தங்கள் முடிவடையும் வரை தேர்தல்கள் நடைபெறாது என்பதை அமைச்சரவைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு கூட்டங்களில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் விரிவான பொருளாதார சீர்திருத்த செயல்முறை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு திறவுகோலாக உள்ளது என்றார்.
இதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பாய்வுத் திட்டம் ஜுலை இறுதியில் முடிவடையும்வரை ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட எந்தவொரு தேர்தலும் நடத்தப்படாது என அவர் கூறியுள்ளார்.
செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியிலிருந்து ஒக்டோபர் நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம். சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவித் திட்டத்தின் மதிப்பாய்வு முடிவடைவதுடன், அரசியலமைப்பின் ஏற்பாடும் ஒருங்கிணையும் காலமாக இது இருக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த மூலோபாய வரிசை முறையானது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தேர்தல் செயல்முறையால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள ஊடகங்களின் அறிக்கையிடலில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி அறிவித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடைபெறாது என்ற செய்தியை சிரேஷ்ட அமைச்சரவைப் பேச்சாளரும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துவதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளார் என்பது இதன் ஊடாகத் தெளிவாகத் தெரிகின்றது. 2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் போதிய நிதி இல்லாத காரணத்தினால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும், முதலில் பொதுத் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பெரமுன ஸ்தாபகரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக் ஷ ஆகியோர் கோரியிருந்ததுடன், இது பற்றி ஜனாதிபதியுடன் பேச்சவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் தேர்தல் மட்டுமன்றி மற்றுமொரு விடயத்திலும் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதாவது, இதுவரை காலமும் அக்கட்சியின் நிறுவுனரான பசில் ராஜபக் ஷ வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவி அதே குடும்பத்தைச் சேர்ந்த ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவுக்கு வழங்கப்பட்டு கட்சியின் படிநிலையில் முக்கிய மாற்றம் உருவாக்கப்பட்டது.
இந்த அரசியல் நகர்வு பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியிருந்தது. எந்தக் கட்சியிலும் தேசிய அமைப்பாளர் பதவி என்பது அடிமட்ட மட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுடனும் தொடர்பை உருவாக்கிக் கொள்ளவும், கட்சியைக் கட்டியமைப்பதற்குமான முக்கிய பதவியாகும். உள்ளூராட்சி மன்ற, மாகாணசபை, மற்றும் பொதுத்தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் குறித்த முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட முக்கிய விடயங்களை இந்தப் பதவியை வகிப்பவர்களே அநேகமாக எடுப்பார்கள்.
எனவே பொதுஜன பெரமுனவுக்கு மிகவும் சக்திவாய்ந்த பதவியை நாமல் ராஜபக் ஷவுக்கு வழங்கியுள்ளனர். நாமல் ராஜபக் ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மூத்த மகன் என்பதுடன், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
எவ்வாறாயினும், 37 வயதான அவர், பல தசாப்தங்களாக அமைச்சர்களாக இருந்த பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மத்தியில் சிரேஷ்ட உறுப்பினர் அல்ல என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய மற்றுமொரு விடயமாகும். வயது குறைந்த, அனுபவம் குறைந்த அரசியல்வாதியான நாமல் ராஜபக் ஷ இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது கட்சியின் தலைமைத்துவத்தைப் பெறுவதற்கான குறுக்குவழி என்று சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.
ஒரு சிலர் இதனைப் பாராட்டியிருந்தாலும், ராஜபக் ஷ குடும்பத்தினருக்குப் பின்னரே தலைமைத்துவப் பொறுப்புக்களில் தாம் இருப்பதாக சில சிரேஷ்ட தலைவர்கள் அதிருப்தியை வெளியிட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐந்து தசாப்தங்களாக பண்டாரநாயக்க குடும்பத்தினால் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது போன்றும், ஐக்கிய தேசியக் கட்சி முதலாவது அரைப்பகுதியில் சேனநாயக்க குடும்பத்தினால் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது போன்றும் பொதுஜன பெரமுன ராஜபக் ஷ குடும்பத்தின் கைளிலேயே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இளம் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியின் தலைமைத்துவப் பண்புகளினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டுவரும் நிலையில், அவ்வாறான தரப்பினரைத் தொடர்ந்தும் தம்பக்கம் வைத்துக்கொள்வதற்காக இளம் தலைமைத்துவத்துக்கு தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
அது மாத்திரமன்றி இந்தப் புதிய பதவியானது நீண்டகால தலைமைத்துவத்துக்கான ஆரம்பகட்ட காய்நகர்த்தலாகப் பார்க்கப்படுகின்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளின் பின்னர் நடைபெறக்கூடிய அடுத்த தேர்தலே நாமல் ராஜபக் ஷவின் இலக்காக இருக்கின்றது. இவ்வருடம் மற்றும் அடுத்தவரும் நடைபெறக்கூடிய தேர்தல்கள் குறித்து நாமல் ராஜபக் ஷ பெரிதும் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.
2024 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக் ஷ அக்கட்சியின் வேட்பாளராக வேண்டுமா என்ற ஒரு சில விவாதங்கள் நடந்தபோதும், மஹிந்த ராஜபக் ஷவே இதில் பெரிய ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் கட்சியின் வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டதே இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
பொதுஜனப் பெரமுன கட்சி இவ்வாறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் அதேநேரம், இதற்கெல்லாம் தாய்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தலைமைத்துவ சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்துத் தனக்குத் தெரியும் எனக் கூறிய கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்திருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு, நீதிமன்றமும் அழைப்பாணை விடுத்திருந்தது. எனினும், ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருப்பதால் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதற்கான தேவை இல்லையென அவருடைய சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் எடுத்த முயற்சிகளுக்கும் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோரை கட்சியின் பொறுப்புக்களிலிருந்து நீக்கி அவற்றுக்குப் புதியவர்களை நியமிக்க மைத்திரிபால சிறிசேன எடுத்த முயற்சிகளுக்கே நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கியது.
அது மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டிருப்பதாகவும், கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவரின் நடவடிக்கைகள் அக்கட்சியை வீழ்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்லும் விதத்திலும் அமைந்திருப்பதால் இடைக்காலத் தடையுத்தரவை வழங்குமாறு அந்த மனுவில் சந்திரிகா கோரியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கப்படும்வரை இடைக்காலத் தடையுத்தரவை வழங்கியது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்து எதிர்வரும் தேர்தலில் கூட்டணியொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஈடுபட்டிருந்தார். இவ்வாறான கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு சந்திரிகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே சுதந்திரக் கட்சியின் உட்கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
அது மாத்திரமன்றி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வைப்பதற்கு அதாவது பாராளுமன்றத்தைக் கலைக்கச் செய்வதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும் கொழும்பு ஊடகமொன்று அறிக்கையிட்டுள்ளது.
பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின் 113 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பிரேரணையொன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றினால் போதும். ஆனால், 113 உறுப்பினர்களின் கையொப்பத்தைப் பெற்றுக்கொள்ள பொதுஜன பெரமுன எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்திருப்பதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
விரைவில் நடைபெறக்கூடிய தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருவதை இந்த செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றபோதும், தீவிர பிரசாரங்களில் வெற்றிடமொன்று காணப்படுகின்றது. எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்ற சந்தேகம் இந்த வெற்றிடத்துக்கு ஒரு காரணமாக இருந்தாலும், பாரிய புயல் ஒன்று அடிப்பதற்கு முன்னர் ஏற்படக்கூடிய அமைதியான காலநிலை போன்றே நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை காணப்படுகின்றது.