தற்போது, நாடு ஒரு நல்ல நிலைக்குள் வந்து விட்டது. நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
சுதந்திரத்தின் பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்நாட்டை ஆட்சி செய்தன. எனினும் எமது ஒற்றுமின்மையின் காரணமாக கடைசியில் நாடு வங்குரோத்து அடைந்தது. எனினும் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கையின் எந்த ஒரு அரசியல்வாதியும் இருக்கவில்லை. கடைசியில் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் ரணில் விக்கிரமசிங்க என்ற தேசிய தலைவர் மாத்திரமேயாகும். இப்போது வங்குரோத்தடைந்த நாடு உலக சாதனையை ஏற்படுத்தி மிகக் குறுகிய காலத்தினுள் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொண்டதைப் போன்று கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகவும் வேலைத்திட்டங்களையும் உருவாக்கியுள்ளது. எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் நோக்கிற்கு அமைய நாடு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதனைத் தவிர பயணிப்பதற்கு வேறு பாதைகள் இல்லை.
நாட்டைக் கட்டியெழுப்பும் முறையை மாற்றக் கூடாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதை மாற்றினால் நாடு பழைய நிலைக்கு திரும்பக் கூடும் என்றா கூறுகின்றீர்கள்?
இந்த நிலைக்கு மீண்டும் திரும்பினால் பொதுமக்கள் சிரமத்தில் விழ வேண்டியேற்படும். நாம் 2020இல் சொன்ன விடயங்களை மக்கள் கேட்கவில்லை. அவர்கள் தாம் விரும்பியதைச் செய்து நாட்டை அழித்துக் கொண்டார்கள். மீண்டும் நாட்டை அழிக்க வேண்டாம். இன்று விசித்திரக் கதைகளைக் கூறுபர்களும் உள்ளார்கள். அவர்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். பொதுமக்கள் அதற்கு ஏமாந்தால் அதன் பொறுப்பை மக்களே ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த வழியில் மாத்திரம்தான் பயணிக்க வேண்டும். வேறு வழிகள் இல்லை. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, உதவி வழங்கும் ஜப்பான் நிறுவனம், ஜய்க்கா நிறுவனம், இந்தியா, சீனா மற்றும் தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள், பெரிஸ் க்ளப் போன்று இந்த அனைத்து நிறுவனங்களுடளும் பேச்சுவார்த்தை நடத்தி சர்வதேச இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம். சர்வதேச இணக்கப்பாடு மீறப்பட்டால் மீண்டும் ஆறு மாதங்கள் கடக்கும் போது நாடு முன்னர் இருந்த நிலைக்குள் விழ நேரிடும். எனவே இந்தப் பாதையை மாற்ற முடியாது. சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதியினால் அனேகமான சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும் எதிர்க்கட்சி தலைவரைப் போன்று தேசிய மக்கள் சக்தியும் தாம் ஆட்சிக்கு வந்தால் IMF வேலைத்திட்டத்தை மீண்டும் மீளாய்வு செய்யப் போவதாக் கூறியுள்ளதே?
இவை சிறு பிள்ளைகள் கூறும் பகிடிக் கதைகள் போன்றவை. இவற்றிற்கு பொது மக்கள் ஏமாறப் போவதில்லை. உலகில் உயர் நிதி கையாளும் நிறுவனமான சர்வதேச நாணய நிதியம் தீர்மானம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அதற்கு மேலாக வேறு நடவடிக்கைகள் இருக்க முடியாது.
நாடு தேர்தல் ஒன்றுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது. தேர்தலை குறி வைத்தே பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாகவும், நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே?
எதிர்க்கட்சிகள் எப்பொழுதும் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகின்றன. ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றாலும் தோற்றாலும் உண்மையைக் கூறும் தேசிய தலைவர். அவர் 2001இல் சொன்னதைத்தான் இன்று செய்கிறார். 2001இல், அவர் கூறியவற்றை பொதுமக்கள் கேட்கவில்லை. அவர் தேசத் துரோகி என்று ஒதுக்கப்பட்டார். 2015இல் மீண்டும் சரிசெய்து கொண்டு சென்று மீண்டும் 2019ஆம் ஆண்டு அவர் மாற்ற வேண்டாம், வீதியில் விழுவீர்கள் எனக் கூறினார். அதனையும் மக்கள் கேட்கவில்லை. எனவே சரியான பாதையைக் காட்டுவது நமது கடமை. அவ்வாறு சுட்டிக் காட்டிய பிறகும் மக்கள் ஏற்கவில்லை என்றால் மீண்டும் அதே நிலை வரலாம். உலக வங்கி அறிக்கைக்கு அமைய 2022ஆம் ஆண்டு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியதாகவும், நிலவிய பலவீனங்கள் காரணமாக 2020ஆம் ஆண்டு சர்வதேச சந்தை இழக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2022ஆம் ஆண்டாகும் போது அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்த முடியாததால் வங்குரோத்து அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரம் மீட்சிப் பாதையை எட்டியுள்ள போதிலும், பொருளாதார நெருக்கடியின் கடுமையான விளைவுகளை ஏழைகள் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான மக்கள் உணராமல் தடுப்பது மிகவும் முக்கியமானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் அஸ்வெசும போன்றவற்றை வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது போன்ற வலுவான பொருளாதார சீர்திருத்தங்களை தொடர வேண்டியது முக்கியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு வெளியே எந்த வியாபாரமும் இல்லை. இது குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
வரும்காலங்களில் நாடு தொடர்பில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதா? இவ்வருட இறுதியில் சாதகமான நிலை ஏற்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளாரே?
உலகம் தொடர்பான அறிவுரைகளை ஏற்று செயல்படக்கூடிய ஒரு தலைமை இதுவரை இருந்ததில்லை என்று நினைக்கிறேன். வெளிநாட்டுக் கடன் தொடர்பான ஆலோசனைகளை சரியான முறையில் கவனிக்கக்கூடிய தலைமை இருக்கவில்லை. வெளியுறவுக் கொள்கையில் முடிவெடுக்கும் தலைமை இருக்கவில்லை. நாட்டுக்குத் தேவைப்பட்டது உலகத்தைப் பற்றிய புரிதல் கொண்ட தலைமையாகும். இலங்கையின் அதிர்ஷ்டவசமாக ரணில் விக்கிரமசிங்க என்ற தேசியத் தலைவர் மீதமிருந்தார். அவருக்கு எந்த ஒரு ஆலோசகரும் தேவையில்லை. நிதி அமைச்சு, மத்திய வங்கி, சர்வதேசத்தைக் கையாள்வதற்கு அவரால் முடிந்தது. எனினும் அவருக்கு பதிலாக மக்கள் தெரிவு செய்வது யாரை என்பதை நாம் கேட்க வேண்டும். வகுப்பில் டீச்சர் இல்லாத நேரம் வகுப்பை பார்த்துக் கொள்வது மொனிட்டராகும். எனினும் டீச்சர் வந்ததன் பின்னர் மொனிட்டர் மீண்டும் வகுப்பில் சென்று அமர வேண்டும். அரகலவின் போதும் நடந்தது இதுவேயாகும். அரகலயின் போது மொனிட்டர்மார் ஆங்காங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அதிபர் வந்ததன் பின்னர் அனைவரும் அமர்ந்து விட்டார்கள். வேலை செய்யக்கூடிய தலைவர் ரணில்தான் என்பதை இன்று நாட்டு மக்களே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.
தமிழில் – எம். எஸ். முஸப்பிர்
சுபாஷினி ஜயரத்ன தமிழில்- எம். எஸ். முஸப்பிர்