தமிழ், சிங்கள புத்தாண்டையிட்டு இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் ரயில்வே திணைக்களமும் இணைந்து கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். புத்தாண்டின் போது தமது சொந்த இடங்களுக்கு செல்லவும் புத்தாண்டின் பின்னர் கொழும்புக்கு மீண்டும் திரும்பவும் இவ்வாறு விசேட பஸ், ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 05ஆம் திகதி முதல் இ.போ.ச. பஸ் சேவைகள் இடம்பெறுவதுடன், கொழும்பிலிருந்து 17ஆம் திகதிவரை 2,270 விசேட பஸ் சேவைகள் இடம்பெறும். ஏப்ரல் 10ஆம், 11ஆம், 12ஆம் திகதிகளில் கொழும்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஏனைய இடங்களுக்கு 1,400 பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக, இ.போ.ச. தலைவர், பொறியியலாளர் லலித் அல்விஸ் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதுடன், நாளாந்தம் 10 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி, ஹட்டன், பதுளை, பண்டாரவளை, நானுஓயாவரையும் மருதானையிலிருந்து காலி, மாத்தறை, பெலியத்தைவரையும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறும். வழக்கமான ரயில் நேர அட்டவணையிலும் ரயில் சேவைகள் இடம்பெறுமெனவும், ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்தது.