இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் கடலினூடாக அமைக்கப்படவுள்ள தரைவழிப் பாதையின் ஆய்வு தொடர்பான இந்தியாவின் அடிப்படை யோசனை அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
தரைவழிப் பாதை அமைப்பதற்கான அடிப்படை யோசனையை இலங்கை அரசாங்கத்திடம் இந்தியப் பிரதிநிதிகள் தெரிவித்த பின்னர், ஆய்வு செய்யப்பட்டு, இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை யோசனை இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுமென, ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் தேசிய பாதுகாப்பு தலைவருமான சாகல ரத்நாயக்க, இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் தரைவழிப்பாதை அமைப்பது உட்பட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்ததுடன், இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா உட்பட உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் அவர் கலந்துரையாடினார்.
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் தரைவழிப்பாதை அமைக்கப்பட்ட பின்னர், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் உட்பட ஏனைய நடவடிக்கைகளால் இலங்கைக்கு அதிக நன்மைகள் கிடைக்குமென்று இந்திய அரசாங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இலங்கையையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் தரைவழிப்பாதை அமைக்கப்பட்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் இறக்குமதி, ஏற்றுமதிக்கு எல்லையற்ற வகையில் அதிக வாய்ப்புகள் உள்ளதாக, அரசாங்கத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கப்பல் போக்குவரத்தை விட நெடுஞ்சாலை போக்குவரத்தின் மூலம் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படுவதால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை குறையுமெனவும் அச்செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவில் இலங்கை வரக்கூடிய வசதி, அண்மையில் இந்தியா கையொப்பமிட்ட மத்திய கிழக்கு பொருளாதார சட்டத்தில் இலங்கை இணையும் திறன், இரு நாடுகளுக்கும் இடையிலான மின்சார பரிமாற்றத்தை இலகுபடுத்துதல், இலங்கையால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவற்றிலிருந்து அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்து, அம்மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்கவும் வாய்ப்பு கிடைப்பது உட்பட பல நன்மைகள் இலங்கைக்கு கிடைக்குமென, அரசாங்கம் தெரிவித்தது.