முறைசாரா தொழிற்றுறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்கள் உட்பட தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அனைவரும் சீரான முறையில் பணியை தொடரும் வகையில் புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அனைத்து ஊழியர்களும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பலன்களை பெறக்கூடியவாறு இச்சட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் இரண்டையும் ஒன்றிணைத்து பொதுவான சமூக பாதுகாப்பு நிதியத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். அத்துடன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு பிரசவகால கொடுப்பனவு வழங்கப்படும். பிரசவ காலத்தின் போது தொழில் வழங்குநர்களுக்கு சுமையை ஏற்படுத்தாத விதத்தில் இவ்விசேட பிரசவகால கொடுப்பனவு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலையீட்டின் கீழ் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய நலன்புரி சட்டத்தின்படி முச்சக்கரவண்டிச் சாரதிகள், தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், சுயதொழில்களில் ஈடுபடும் வெல்டர்கள், கொத்தனார்கள் உட்பட சகல தொழிற்றுறையினரும் ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு உரிமை உடையவர்களாகின்றனர்.
முறைசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள், பொது சமூக பாதுகாப்பு அமைப்புகளின் கீழ் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஒன்றிணைப்பாக உருவாக்கப்படும் புதிய நிதியத்தின் உறுப்பினர்களாக இணைக்கப்படுவதுடன், அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளடக்கிய குழுவொன்றை ஜனாதிபதி நியமிப்பார். ஊழியர் சேமலாப நிதியமும் ஊழியர் நம்பிக்கை நிதியமும் இணைந்து உருவாக்கவுள்ள புதிய சமூக பாதுகாப்பு நிதியத்தில், முறைசாரா தொழில்சார்ந்தவர்களை உறுப்பினர்களாக இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைமுறை தொடர்பான அறிக்கையை இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் புதிய தொழிலாளர் பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அதனை ஒரு சில மாதங்களில் நடைமுறைப்படுத்த தேவையான பணிகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தற்போது முன்னெடுத்து வருகின்றார். புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்போதைய உரிமைகளை விட தொழிலாளர்களின் தொழில்நிலை, அவர்களின் தொழில் பாதுகாப்பு, அவர்களின் தொழில் கௌரவம் போன்ற அதிக உரிமைகள் இச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்தின் போது தொழில் வழங்குநருக்கு சுமையை ஏற்படாத வகையில் சிறப்பு பிரசவகால உதவித்தொகை வழங்கப்படும்.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலையீட்டின் கீழ் உருவாக்கப்படவுள்ள புதிய வேலைவாய்ப்பு சட்டத்தின்படி முச்சக்கரவண்டிச் சாரதிகள், தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், சுயதொழில் செய்யும் வெல்டர்கள், மேசன்மார் உட்பட சகல தொழில் வல்லுநர்களும் ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு உரிமையுடையவர்களாக இச்சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.